Monday 2 June 2014

``எங்கள் நிலம், எங்கள் மனை எமக்கு வேண்டும்``

எங்கள் நிலம் எமக்கு  வேண்டும் 
03 ஜூன் 2014


கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த நான்கு வருடங்களாக தங்கள் சொந்த இடத்தை தங்களிடம் மீள கையளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னமும் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட நிறைய பிரதேசங்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்படவில்லை. மாறாக இன்னும் இன்னும் நிலங்களை இராணுவத்தினர் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தபோது தான் முன்னெடுக்கும் நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி தொடர்பில் மகிந்த ராஜபக்ச அவருக்கு விளக்கம் அளித்தாக  இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போருக்குப் பின்னர் மீள் கட்;டமைப்பு, இன நல்லிணக்கம், அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் உலகுக்குச் சொல்லியிருக்கிறது.

கிளிநொச்சிப் பரவிப் பாஞ்சான் பகுதி மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முற்பகுதியில் அழைத்துவரப்பட்டார்கள். அவர்கள் இன்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் காணிகளில் விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தார்கள் என்று சொல்லியே அவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியிலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பின் பகுதிவரையான காணிகள் இராணுவத்தின் வசம் இருக்கின்றன.

இந்தப் பகுதியை உயர்பாதுகாப்பு வலமயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதிக்குள் யாரும் அனுமதியின்றி நுழைந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. எனது வீட்டுக்குள் இருந்து கொண்டு எனது காணியை பிடித்துக் கொண்டு நுழைந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்று எழுதியுள்ளார்களே என்று அந்தப் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் புலம்பிக் கொண்டு நின்றார். எல்லோரும் அவரவர் ஊர்களில் அவரவர் வீடுகளில் சந்தோசமாக இருக்கிறார்கள் நாங்கள்தான் வீடற்று அலைந்து கொண்டிருக்கிறோம் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த ஐந்து ஆண்டுகளும் பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவமுகாம்களுக்கும் அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் செல்லாத பொழுதுகள் இல்லை. அண்மையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது அலுவலகத்திற்கும் மக்கள் ஒன்று திரண்டு சென்று தமது காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். 2010ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் இந்த மக்கள் உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அங்கும் இங்கும் என்று காலத்தை கழித்து வருகிறார்கள். வளமும் எழிலும் நிறைந்த தங்கள் காணிகளை இராணுவம் ஆள்வதைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த காணிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலடி பட்ட இடமென்றும் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் அங்கு அவர் மாவீரர் தின உரை ஆற்றி வந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் ருவாண்; வணிகசூரிய சொல்லுகிறார். பிரபாகரனின் காலடி பட்ட மண்ணெல்லாம் வேண்டும் என்று இராணுவத்தினர் நினைத்தால் ஒட்டுமொத்த ஈழமண்ணையும் இராணுவமுகாமாக்க வேண்டும். பிரபாகரனுக்கு பரவிப்பாஞ்சானில் காணிகள் இருப்பதாக எந்த விபரங்களும் இல்லை. அவர் ஒரு கிராமம் முழுவதிலுமா இருந்து மாவீரர் தின உரையாற்றினார்?

இந்தக் காரணத்தைச் சொல்லி பரவிப்பாஞ்சான் கிராமத்தின் முழுப்பகுதியையும் இராணுவத்தினர் அபகரிக்க முயல்வதைப் போல அநீதி வேறில்லை. அவை மக்களின் காணிகள். அதற்கான உறுதிகள், காணி ஆதாரங்கள் மக்களின் கையில் உள்ளன. ஆனால் அவை மக்களின் காணிகள் இல்லை என்றும் அவர்களிடம் ஆதாரம் இல்லை என்றும் இராணுவம் சொல்கிறது. கிளிநொச்சியிலும் வடக்கு கிழக்கிலும் என்ன நடக்கிறது எப்படி நிலம் விழுங்கப்படுகிறது என்பதற்கு கிளிநொச்சியின் இந்தக் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு.

கிளிநொச்சியில் நிலத்தைக் கோரும் போராட்டத்தை நடத்த இலங்கை இராணுவமும் காவல்துறையும் பல்வேறு தடைகளை உருவாக்கின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த ஏற்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான ஜெகதீஸ்வரனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்திருந்தது.

இராணுவத்தினர் கிளிநொச்சியில் மாத்திரமல்ல வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டு இராணுவமுகாம் அமைத்துள்ள காணிநிலங்கள் எல்லாமே மக்களினுடையவை. அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிலமற்று வீடற்று அகதியாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவமுகாமிற்காக உதிரிகளாக காணிகளை இராணுவத்தினருக்குப் பறிகொடுத்துள்ளவர்கள் இந்த மாதிரியான போராட்டங்களையும் செய்ய முடியாமல் இராணுவமுகாங்களை சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காணாமல்போன தனது மகனை கேட்டுப் போராடிய ஜெயக்குமாரியும் தனது அண்ணனைக் கேட்ட விபூசிகாவும் எப்படி கைது செய்யப்பட்hர்களோ அப்படியே மக்களின் நிலத்தை கேட்டுப் போராட்டம் செய்யத் தயாரான ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார். காணாமல் போனவர்களை தேடுவதும் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க போராடுவதும் பயங்கரவாதம் என்று கருதும் இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கு மக்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர் மண்ணை ஆக்கிரமிக்கவும் தமிழர்களை ஒடுக்கவும் இவ்வாறான காரணங்களே தேவைப்படுகின்றன.

நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. எங்கள் நிலத்தில் வாழ வேண்டும். எங்கள் வீட்டில் வாழ வேண்டும் இதைத்தான் கேட்கிறோம் என்று பரவிப் பாஞ்சான் மக்கள் மனம் உருகிச் சொல்கிறார்கள். எங்கள் மக்கள் எதுவரை அகதிகளாக வாழ வேண்டும்? அவர்களின் காணிநிலங்கள் எதுவரை அபகரிக்கப்படும்? இவ்வாறான பல்லாயிரம் கேள்விகளுடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட அரசியல் சூழலில் நிம்மதியாக வாழும் ஒரு வாழ்க்கைக்கான போராட்டத்தை ஈழ மக்கள் இன்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் நடந்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். தம்முடைய வலுவான கண்டனங்களையும் பதிவு செய்தார்கள். விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் ஒரு சமாதான நகரமாக உலகின் பல்வேறு பிரதிநிதிகளும் வருகை தந்த கிளிநொச்சியில் நடந்த இந்த நில அபகரிப்புக்கு எதிரான நீல மீட்புக்கான போராட்டம் இன்று ஒட்டுமொத்த ஈழ மண்ணின் நிலவரத்தையும் உலக சமூகத்தை நோக்கி உரத்த குரலில் சொல்கிறது.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் என்று யாருமில்லை. அகதிகள் எனப்படுவர்கள் யாரும் இல்லை என்று ஒருமுறை கிளிநொச்சியில் வைத்து ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய குறிப்பிட்டார். அப்படி என்றால் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களை எப்படி அழைப்பது? இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்விடமற்று  அலையும் இந்த மக்களை எப்படி அழைப்பது?

தங்கள் நிலத்தை மீட்க, செல்லாத இடமெங்கும் சென்று அலைந்து களைத்துப்போய்விட்ட பின்னரும் கேட்காத இடமெங்கும் கேட்டு, குரல் வற்றி காய்ந்துபோன பின்னரும் இன்னமும் உக்கிரம் குறையாமல் இருக்கிறார்கள் பரவிப்பாஞ்சான் மக்கள். ஏனெனில் அந்த நிலம் அந்த மக்களுக்குச் சொந்தமானது. அந்த நிலம் இல்லை எனில் அந்த மக்கள் இல்லை. தாங்கள் வாழவும் தங்கள் சந்ததி வாழவும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டியது பரவிப்பாஞ்சான் மக்களுக்கு தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்த தேசமும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள நிலையில் ஒட்டுமொத்த ஈழ மக்களதும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டிய காலம் இதுவாகும்.

நன்றி: தீபச்செல்வன்/ (குளோபல் தமிழ் செய்தி)

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...