SHARE

Thursday, December 26, 2013

பேரறிவாளனின் தூக்கு மேடைக் குறிப்பு!


நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன் 

சிறையிலிருந்து ஒரு குரல்

[ வியாழக்கிழமை, 19 டிசெம்பர் 2013, 09:26 GMT ] [ அ.எழிலரசன் ]

நன்றி: டி.அருள் எழிலன் - ஆனந்த விகடன் [25 Dec. 2013]

“நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 'சதிகாரன்’, 'கொலைகாரன்’ என்று என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்பட்டுவிட்டது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் இறுதிப் பகுதியில் நிற்கிறேன். இந்த ஒளி, இந்தியாவின் அனைத்து மரண தண்டனை கைதிகளின் கழுத்தின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை
அறுத்தெறியட்டும்'' என்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 42. தன் வழக்கில் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பேரறிவாளனிடம் அவரது வழக்கறிஞர்கள் மூலம் பேசினேன்.

''உங்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட இரவில், உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''

''ஒவ்வொரு முறை தூக்கு உறுதிப்படுத்தப்படும்போதும் எனது தாயாரை நினைத்து மிகவும் கவலைகொள்வேன். கடந்த 1991-ம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இன்று வரை ஒரு தாய்க்கும் மகனுக்குமான தனிப்பட்ட சந்திப்பாக மட்டும் இருக்கவில்லை எங்கள் அன்பு. சென்னைக்கும் வேலூருக்கும் அலைந்தே, அவரது வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்துவிட்டது. மகன் எனும் உரிமைக்கு அப்பால், இரக்கமே இல்லாமல் அவரது உழைப்பை நான் உறிஞ்சியிருக்கிறேன். ஆனால், சட்டத்தின் எல்லா சாத்தியங்களையும்
பயன்படுத்தி நீதிக்காகப் போராடுவது என்ற முடிவையும், கருணை மனு நிராகரிக்கப்பட்ட அந்த இரவில்தான் எடுத்தேன்!''

''சிறை உங்களுக்குப் பழகிப்போனதா, சிறையில் உங்கள் நண்பர்கள் யார்?'' 

''வேலூரில் நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். பலவிதமான கைதிகள் சுமார் 1,000 பேர் உள்ளனர். இவர்களில் விசாரணை, தடுப்புக்காவல் சிறைவாசிகளுடன் பழகும் வாய்ப்பு இயல்பாகவே எனக்கு அமையவில்லை. மற்றபடி ஏராளமான தண்டனைச்

சிறைவாசிகள் நண்பர்களாக உள்ளனர். உயரமான நான்கு மதில் சுவர்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எங்களுக்கு சிறைக்குள்ளேயே வேறு பணிகள் ஒதுக்கப்படுகின்றன. என்னை மேம்படுத்திக் கொள்ள கலை, இலக்கிய நிகழ்வுகளை எவ்வளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ... அவ்வளவு பயன்படுத்திக்கொள்கிறேன்.''

''சிறையில் இருந்தபடியே வழக்குகளை நடத்துவது, கான்ஃபெரன்ஸிங் மூலம் ஆஜராவது... என இந்த அனுபவம் புதியதா?'' 

''19 வயதில் நான் கைது செய்யப்பட்டபோது, சட்டம் பற்றிய அறிவு எனக்குத் துளியும் கிடையாது. தடா போன்ற கறுப்புச் சட்டங்கள் பற்றி எதுவும் அறியாதவனாக இருந்தேன். கைது செய்யப்பட்டு சிறையில் கழித்த இந்த 22 ஆண்டுகளில், என் வழக்கை நானே எதிர்கொள்ளும் அளவுக்கு சட்டரீதியான அறிவோடு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். வழக்கறிஞர்கள் பிரபுவும் பாரியும் பல்வேறு தீர்ப்புகளை எனக்கு வாசிக்கக் கொடுத்து என் சட்ட அறிவை வளர்த்தார்கள். 2011-ல் புல்லர், மகேந்திரநாத் இருவரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டபோது, எனக்கும் அதுபோன்ற முடிவுதான் என்பதை முன்கூட்டியே உணர்ந்த நான், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸுக்குக் கடிதம் எழுதி, 'எனக்காக உயர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?’ என்று கேட்டு அவரது ஒப்புதலைப் பெற்றேன். அவரும் வாதாடி, உயர் நீதிமன்றத்தில் தடை கிடைத்தது. அம்மாவும் தங்கையும் அவருக்கு பணம் கொடுத்தபோது பெருந்தன்மையோடு அதை வாங்க மறுத்துவிட்டார். பல்வேறு சட்ட வழக்குகளை நானே கையாண்டபோது காணொளி
விசாரணையிலும் பங்கு பெற்றேன். அது சிறை வரலாற்றிலேயே புதிய அனுபவம். எல்லாக் கதவுகளையும் தட்டிவிட்டேன். இனி நான் சொல்ல ஏதும் இல்லை. முடிவை உங்கள் கைகளுக்கே விட்டுவிடுகிறேன்.''

 ''19 வயதில் நீங்கள் கைதானபோது, உங்களின் அரசியல் நண்பர்கள் உங்களைக் கைவிட்டுவிட்டார்கள் இல்லையா?'' 

''என்னைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதைவிட, என் பெற்றோரைக் கைவிட்டார்கள். என்னை அறிந்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள் விலகிச் சென்றார்கள். எங்கள் குடும்பத்தினரிடம் இருந்து அவர்களை மீட்டுக்கொள்ள பரிதாபகரமான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆனால், என்னை நம்பிய என் உறவுகளும் நண்பர்களும் என்னோடு இருக்கிறார்கள். முன்னர் என்னைச் சந்தேகப்பட்டவர்கள் இப்போது நெருங்கி வருகிறார்கள். இது நிரபராதிகளின் காலம் போலும்.''

''உங்களின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதியவில்லை என்று சி.பி.ஐ. முன்னாள் எஸ்.பி., தியாகராஜன் சொன்னபோது எப்படி இருந்தது?'' 

''ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து, நானும் அவரும் மட்டுமே கூற முடியும் என்ற நிலையில் தண்டிக்கப்பட்டவன், குற்றம் இழைத்தவன் என முத்திரை குத்தப்பட்டதால், எனது கருத்து இத்தனை ஆண்டுகளில் அங்கீகாரம் இன்றி புறந்தள்ளப்பட்டது.

தற்போது வாக்குமூலம் பெற்ற தியாகராஜனே 'வாக்குமூலத்தை முழுமையாகப் பதியவில்லை’ என்று கூறியிருப்பதன் மூலம், என் கருத்துகள் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. என் தாயாரின் இத்தனை ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது!''

''உங்கள் வாக்குமூலத்தை முழுமையாகப் பதியவில்லை என்ற தியாகராஜன், 'ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் பேட்டரி வாங்கினார்’ என்று எழுதாமல், 'வாக்குமூலத்தில் ஒரு வெற்றிடத்தை, வேண்டுமென்றே உங்களுக்குச் சார்பாக விட்டுச்சென்றேன்’ என்கிறாரே... அதை நீங்கள் கவனிக்கவில்லையா?'' 

''தியாகராஜன் அவர்கள் சாமானிய மனிதர் அல்ல. அவர் காவல் துறையின் உயர் பதவியை அலங்கரித்து ஓய்வுபெற்றவர். இத்தனை ஆண்டுகால நீதிக்கான என் போராட்டத்தில் அவரை நான் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறேன். அவரின் நீதிமன்ற சாட்சியத்தை ஏற்கக் கூடாது என அழுத்தமாகப் போராடி வந்திருக்கிறேன். அவரது இந்தக் கூற்றை நான் முழுமையாக ஏற்கவில்லை. மொழிமயக்கம் தரும் ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச்சென்றார் என்பது உண்மையே. அதே நேரம் அதுகுறித்து சாட்சியம்
அளித்தபோது, அவரிடம் நேரடியாக ஏதும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தால், காவல் அதிகாரியா, மனச்சாட்சியா என்ற போராட்டத்தில் காவல் அதிகாரியாகத்தான் அன்றைய நாளில் சாட்சியம் அளித்திருப்பார். அது மிக ஆபத்தான முடிவாக இருந்திருக்கும். அதேநேரம் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டபோது, அது உச்ச நீதிமன்றத்தால் கருத்தில் கொள்ளப்படவில்லை.''

'' 'தவறு செய்துவிட்டேன்’ என்று சொல்லும் காவல் அதிகாரி தியாகராஜனை, நீங்கள் மன்னிக்கத் தயாரா?'' 

''உறுதியாக! ஆனால், ஒரு மனிதன் எதை எல்லாம் இழக்கக் கூடாதோ, அதை எல்லாம் கடந்த 22 ஆண்டுகளில் இழந்திருக்கிறேன். நான் மீண்டு வந்தாலும்கூட இழந்தவற்றை எவரும் திருப்பித்தர முடியாது. இத்தனை இழப்புகளுக்கும் எனது தண்டனைக்கும் காரணம் அந்த ஒப்புதல் வாக்குமூலம்தான். அந்த ஒற்றை ஆவணத்தை நீக்கிவிட்டு இந்த வழக்கை எடைபோட்டால் இந்த வழக்கின் உண்மை நிலை தெரிந்துவிடும். அன்றைய காலச்சூழலில் தடா சட்டத்தின் கொடூரமான ஒரு சட்டப்பிரிவின் ஆபத்து அறியாதவராக தியாகராஜன் இருந்திருக்கலாம். ஒரு வகையில் தடா எனும் சட்டப்பிரிவுக்கு நாங்கள் மட்டும் பலியாகவில்லை... தியாகராஜனே பலியாகியிருக்கிறார்.''

''உங்களின் அம்மா இந்த வயதிலும் உங்களுக்காக அலைந்து கொண்டிருக்கிறார். அவரின் நினைவு உங்களிடம் என்னவாக இருக்கிறது?'' 

''இது பற்றி யார் கேட்டாலும் நான் பதில் சொல்வது இல்லை. காரணம், என் தாயார் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தினால் எங்களுக்கு இடையிலான இயல்பான உறவுக்கு அது இடையூறாகிவிடும் என்கிற தயக்கம் எனக்கு இருக்கிறது. அதுபோல அவரும் என்னைப் பற்றி என்ன பதிவு செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதிலும் எனக்கு ஆர்வம் இல்லை. 22 ஆண்டுகளுக்கு முன்னர் என் அம்மாவுக்கு நான் எப்படியோ... இப்போதும் அப்படியே. அப்படி இருந்துவிட்டுப் போகவே விரும்புகிறேன்.''

''தவறிழைத்துவிட்ட ஒரு மனிதனை, மீண்டும் சமூகத்துக்குப் பயனுள்ளவனாக மாற்றுவதுதான் சிறைச்சாலைகளின் நோக்கம் எனும் நிலையில் சிறைச்சாலை மாறியிருக்கிறதா?'' 

''கடந்த பத்தாண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது என்பது உண்மையே. மின்விசிறி இருக்கிறது, தேநீர் தருகிறார்கள், கோழி இறைச்சி கிடைக்கிறது என்பது எல்லாம் சரிதான். ஆனால், சிறை சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படையான கட்டமைப்பு, கருதுகோள் மாறவில்லை. இதற்கு சிறை அதிகாரிகளை மட்டும் குறைசொல்வதில் பயன் இல்லை. 1894-ல் கொண்டுவரப்பட்ட சிறை சட்டங்களையே சில மாற்றங்களுடன் பயன் படுத்தி வருகிறோம். எனவே, வெள்ளையர் காலச் சிறைச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மாறியுள்ள புதிய உலகச் சூழலுக்கு ஏற்ப முழுமையான சிறைப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரம், மனிதநேயமுள்ள கூடங்களாக சிறைகள் உருமாற்றம் அடையும் வகையில், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.''



''புல்லரின் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் உங்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறீர்களா?''

''புல்லர் வழக்கின் தீர்ப்பு, என் வழக்கில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்த அளவுக்கு, தமிழகத்தில் உள்ள பலர் உணரவில்லை. ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பாக தியாகராஜன் தெரிவித்திருக்கும் கருத்தும், அவர் எனக்கு சட்டரீதியாக
உதவுவதாகச்  சொல்லியிருப்பதையும் வைத்து சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதே சரி என நம்புகிறேன்.

1951-ல் தந்தை பெரியாரின் போராட்டத்தால் முதன்முதலாக அரசியல் சாசனம் திருத்தப்பட்ட பின்னர், சுமார் 90 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது. என் வழக்கால் மற்றொரு திருத்தம் வரும் என உறுதியாக நம்புகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நிரபராதி  என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்தால், வழக்கை மீளாய்வு செய்யும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில், என்னை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது போராட்டமாக இருக்கும். 
இதற்காக அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரி நிற்கிறேன்!''

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...