Thursday 26 December 2013

57 ஆண்டுகள் தீராத மொழிப்பிரச்சனை!

1956-2013

வடக்கில் தமிழ் மொழியை புறக்கணிக்கும் பொலிஸார்; இன்னும் தனிச் சிங்களத்தில் கடிதங்கள், முறைப்பாடுகள்.

"வடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன.

இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர்கள் நேற்று பகிரங்கமாகச்  சுட்டிக்காட்டினர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் நூறு வீதம் தமிழில் முறைப்பாடு செய்யப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பிரதேச செயலர்கள் பொலிஸாரின் கூற்றை முற்றாக மறுத்ததுடன் தமிழில் முறைப்பாடு பதிவு செய்யப்படுவதில்லை என்பதற்கான ஆதாரங்களையும் அங்கு அம்பலப்படுத்தினர்.

பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க பொலிஸ் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அங்கு தமிழில் பேசுவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸாரால் கூறப்படுகிறது. இங்கு அநேகமான பொலிஸ் நிலையங்களில் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் நுணாவிலில் அமைந்துள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. 

அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிஸார் அன்று வரவேயில்லை. மறுநாள் காலை 8.30 மணியளவிலேயே சம்பவ இடத்துக்குச் பொலிஸார் சென்றுள்ளனர் என்று கூட்டத்தில் பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்ட்பபட்டது.

இது தவிர பொலிஸாரினால் அனுபபி வைக்கப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன. வவுனியா பொலிஸாரால் அண்மையில் அவ்வாறு தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பப்பட்ட விடயமும் அங்கு எடுத்துக் காட்டப்பட்டது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், தவறுதலாகச் சில சம்பவங்கள் அவ்வாறு இடம்பெறுகின்றன. அதனைத் திருத்துகிறோம். வவுனியா சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துகிறோம் - என்று கூறினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாரின் செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், முறைப்பாடுகள் எங்கும் இருக்கத்தான் செய்யும் அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நன்றி: யாழ் உதயன் 27/12/2013
==============================
விவசாய திணைக்களத்தின் நீர்ப்பாசன ஆய்வுகூட உதவியாளர் பதவி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு 

தனிச்சிங்கள மொழியிலேயே கடிதங்கள்


தனிச்சிங்கள மொழி கடிதங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தீர்வு
விவசாய திணைக்களத்தின் நீர்ப்பாசன ஆய்வுகூட உதவியாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தனிச்சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நேர்முகத் தேர்வை இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தனிச்சிங்களத்தில் அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நேர்முகத் தெரிவுக்கான விண்ணப்பதாரிகளுக்கான கடிதங்களை தமிழ் மொழியில் அனுப்பி வைக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரச நிறுவனம் ஒன்றில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சிக்கல் ஏற்படாத வண்ணம் மீண்டும் இதற்கான நேர்முகத் தேர்வை நடத்துவதற்கான ஒழுங்கு செய்யப்படும் என நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பத்ரா கமலதாசன தெரிவித்தார்

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...