Tuesday 4 December 2012

மோசி: எகிப்தின் இரண்டாம் முபாரக்!

மோசி: எகிப்தின் இரண்டாம் முபாரக் ஒட்டுச்சித்திரம் சுபா

லங்கையில் 1977 பொதுத்தேர்தலில்  அறுதிப்பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற ஜே.ஆரின் யு.என்.பி.அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை மன்னனாக்கும் 1978 அரசியல் யாப்பை வகுத்து, ஜனாதிபதி ஆட்சிமுறையை உருவாக்கியது.அன்று முதல் இலங்கையில் நாடாளமன்றம் என்பது மன்னராட்சியை மூடி மறைக்கும் மாயத்திரையாகவே உள்ளது.

எகிப்தில் மோசியின் அரசியல் அதிகாரக் குவிப்பும் இதையொத்ததுதான்.இது வெற்றியடைந்தால் இவர் முபாரக்கை விடவும் அதிக அதிகாரம் படைத்தவராக இருப்பார்.ஜே.ஆரின் வார்த்தைகளில் ``ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர்ந்த அனைத்து அதிகாரமுமுள்ள சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதி`` யாக இருப்பார்.

எகிப்தில் வெடித்த வெகுஜனக் கிளர்ச்சி தன்னியல்பானது. இதுவரை காலமும் தாம் ஆளப்பட்ட முறையில் இனிமேலும் ஆளப்படுவதை அநுமதிக்க முடியாத வெஞ்சினத்தின் வெளிப்பாடாக அமைந்தது.இதனால் அதன் முழக்கம் வெறும் `ஆட்சி மாற்றம்` என்பதாகவே இருந்தது.வெகுஜனங்களின் வெஞ்சினத்துக்கு அஞ்சி இராணுவமும் பதுங்கி இருந்து ஒரு தற்காலிக சமரசம் செய்து கொண்டது.

முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டாலும் ஆட்சி மாறவில்லை.இராணுவம் ஆட்சியில் அமர்ந்து கொண்டது.மீண்டும் இராணுவத்துடனான மோதல் தொடங்கியது.ஆப்கான் யுத்தத்தில் வடக்குக் கூட்டமைப்பு என்கிற காவாலிக்கூட்டத்தோடு அணிசேர்ந்து தலபானை வீழ்த்த முயன்றதுபோன்று, இதுவரையும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக அமெரிக்கா பரப்பி வந்த அனைத்து ஜனநாயக இலட்சியங்களையும் ஒரே இரவில் மண்மூடிப் புதைத்துவிட்டு, பகிரங்கமாக கை குலுக்காமல் தன் கற்பைக் காத்துக்கொண்டு, திரை மறைவில் மோசி அரசுடன் பஞ்சணை அமைத்துக் கொண்டது.

காசாப் போரில் ராஜதந்திர மகுடம் ஏந்தி எட்டு நாட்களுக்குப் பின்னால் ஒரு போலியான தற்காலிக யுத்த நிறுத்தம் ஏற்பட்ட கையோடு தனது வலிமையப் பற்றிய முற்றிலும் தப்பான கணக்கோடு அதிகாரத்தை ஏகபோகமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

இதுவரையான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மோசியின் கனவு நனவாகும் எனத் தோன்றவில்லை.எகிப்த்திய வெகுஜனங்களின் அரசியல் விழிப்புணர்வு அதை அநுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது அரசியல் ஏஜென்டுகளான என்.ஜி.ஓ க்களும், ஊதுகுழல் ஊடகங்களும் சொந்தப்புத்தியற்ற புத்திஜீவி்களும், புரட்சிக்கு பல வர்ணங்கள் தீட்ட முயலுகின்றனர். இந்த `அரபு வசந்தம்` என்பதும் அத்தகைய ஒன்றுதான்.

இவர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் முரட்டுப் பிடிவாதமுள்ள வரலாறு புரட்சியின் நிறம் சிவப்பு என்பதை உறுதி செய்தே தீரும்.அது ஆட்சிமாற்றத்தோடு நிற்காது அரசுமுறையையும் மாற்றும்.மக்கள் ஜனநாயக தேசிய சுதந்திரக் குடியரசுகள் வேண்டுமென்று கோரும்.

எகிப்து அதற்கு கண்முன்னான சாட்சியம் ஆகும்.

தேவையானது எல்லாம் எகிப்திய சமூகபொருளாதாரப் படிவத்தில் இருந்து எழுகின்ற சமூகவர்க்கங்களின் ஆய்வில் அடிப்படையில் வகுத்துக்கொள்ள வேண்டிய திட்டம்  தான், அதன் மீதமைந்த கட்சி தான்.

இப்பெரும் அறிவுப் பணியை எகிப்திய பாட்டாளி மக்களின் முன்னணிப்படை  நிறைவேற்றி போராடும் வெகுஜன மக்களுக்கு கையளிக்கும் என்று நம்புவோமாக!

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...