சிறிலங்கா மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு திட்டமிடுகிறதா? - முஸ்லிம்கள் கேள்வி
[ திங்கட்கிழமை, 11 யூன் 2012, 09:18 GMT ] [ நித்தியபாரதி ]
சிறிலங்காவானது மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு வழிவகுக்கின்றதா? முஸ்லீம் மக்களின் வணக்கத் தலங்களான பள்ளிவாசவல்கள் மீது
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் சிறிலங்காவில் மற்றுமொரு இனக் கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக அமையும்
என்கின்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான கொந்தளிப்பின் மத்தியில், சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்கள்
தொடர்பில் விசாரணை மேற்கொள்வதானது முஸ்லீம் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது விசனத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். அனுராதபுரம், தம்புள்ள, குருநாகல, மற்றும் தற்போது கொழும்பு, தெகிவளை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முஸ்லீம்களின் புனித இடங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லீம்கள் தமது மத உரிமையையும், தமக்கான கௌரவத்தையும் பாதுகாப்பதற்காக, பூகோள ரீதியாக எழுந்த
சியோனிச அச்சுறுத்தலை எதிர்ப்பதில் ஒன்றாக, ஒற்றுமையாக நின்று போராடி அதற்காக தமது வாழவை அர்ப்பணித்துள்ளனர். இதேபோன்று இவர்கள் Evangelicals மற்றும் இந்தியாவின் Rashtriya Swayamsevak Sangh போன்ற தீயசக்திகளிடமிருந்து தமது மதத்தைக் காப்பதற்காக ஒன்றுதிரண்டனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் படி, சிறிலங்காவில் தற்போது எழுந்துள்ள முஸ்லீம்களுக்கு எதிரான முரண்பாடுகள் தொடர்ந்தால் உலகெங்கும் வாழும்
முஸ்லீம் இனத்தவர்கள் தமது அடையாளத்தைக் காப்பதற்காக எதிர்வுகூற முடியாத, மிக ஆபத்தான சூழலை உருவாக்கலாம். சிறிலங்காவில் 30
ஆண்டு கால யுத்தம் முடிவுற்றதன் பின்னர், முஸ்லீம்கள் இவ்வாறானதொரு ஆபத்தை நாட்டில் உருவாக்கினால் இந்த அழிவை இத்தீவானது
இலகுவாக சமாளித்துவிட முடியாது என்பதை உணர்வுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும்.
மே 2009ல் புலிகள் அமைப்பை சிறிலங்காப் படைகள் தோற்கடித்ததன் பின்னர், முஸ்லீம் மக்களதும், இவர்களது மத வழிபாட்டு இடங்களில்
ஊறுவிளைவிக்கும் செயற்பாடுகளில் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஈடுபடுகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்த விரும்பும்,
அவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்ற தேசியத்தை தமது அதிகாரப் போக்கால் கட்டுப்படுத்த நினைக்கும் 'தீவிர தேசியவாதிகள்'
(ultranationalists) இவ்வாறான இஸ்லாமிய மத அழிப்பு நடவடிக்கைகக்கு காலாக இருப்பதாக முஸ்லீம்கள் சந்தேகிக்கின்றனர்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தீவிர தேசியவாதிகள், சியோனிசத்தைக் கட்டிக் காக்கும் இஸ்ரேலிய நாட்டின் உந்துதலில் சிறிலங்காவில் வாழும்
முஸ்லீம்களின் இன, மத அடையாளங்களை அழிப்பதில் முன்னின்று செயற்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. இத் தீவிர தேசியவாதிகள்
சிறிலங்காத் தீவைக் கூறுபோடுவதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செயற்படுகின்றார்கள். இந்த அடிப்படையில், முஸ்லீம்கள் மீது வெறுப்பை
வளர்ப்பதானது தீவிர தேசியவாதிகளினதும், சியோனிஸ்ட்டுக்களுக்கும் இடையிலான ஒத்த காரணியாகும்.
எட்டு சிங்கள மொழி மூல இணையத்தளங்களும், பத்து ஆங்கில மொழி மூல இணையத்தளங்களும், சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் இனத்தவர்கள்
சிங்களவர்களுக்கும், பௌத்தர்களுக்கும், சிறிலங்கா நாடு முழுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிப்பதாக இணைய வழிமூலம் பரிப்புரையை
மேற்கொண்டதைத் தொடர்ந்தே முஸ்லீம்களுடான பிரச்சினை ஆரம்பித்தது. பலாங்கொடவிலிருந்து 15 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குராகல
என்கின்ற இடத்திலுள்ள Daftar Jailani பௌத்தர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித பிரதேசம் என உரிமை கோரியதைத் தொடர்ந்தே இவ்விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
அத்துடன் சிங்களவர்களை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிவிடுவதை நோக்காகக் கொண்டு இவ் இணையத்தளங்கள் ஆக்கங்கள் மற்றும் நூல்கள்
போன்றவற்றைப் பிரசுரிக்கத் தொடங்கின. முஸ்லீம் எதிர்ப்பு மனநிலையைத் தூண்டிவிடுவதற்கான பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கும், முஸ்லீம்கள் சவுதி அரேபியாவுக்கும் அனுப்பப்பட வேண்டும் என இவ்வாறான பரப்புரை
நடவடிக்கைகளில் எடுத்துக் கூறப்பட்டது. தமிழ் மக்களை முதலில் கவனித்து விட்டு அதன்பிறது முஸ்லீம்களைக் கவனிக்க இருப்பதாகவும்
எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தற்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் பலவீனமாக இருப்பதால் முஸ்லீம்களை
இந்நாட்டை விட்டுத் துரத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது தீவிர சிங்கள தேசியவாதிகள் தமது துப்பாக்கிமுனையை தற்போது
முஸ்லீம்கள் நோக்கித் திருப்பிவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு யூன் 14 அன்று புத்த பிக்குகளின் தலைமையில் சிங்களக் காடையர்கள் அனுராதபுரத்தில் பல நான்கு நூற்றாண்டு காலப் பழமை
வாய்ந்த Sheikh Sikkandar Waliullah மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவ் அழிப்பு நடவடிக்கையானது சிறிலங்கா காவற்துறையினர் பார்த்துக் கொண்டிருக்க அவர்களது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று இவ்வாண்டு ஏப்ரல் 20 அன்று, புத்த பிக்கு ஒருவரின் தலைமையின் கீழ் காடையர்களால் தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல்
நடாத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இது இந்நாட்டின் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவமாகக் காணப்படுகின்றது.
இதேபோன்று கொழும்பு, புள்ளேர்ஸ் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த புத்தபிக்கு ஒருவர் அங்கே பிரார்த்தனை மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார். சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ச்சியாக இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால், இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இடம்பெறக் காலாக உள்ளன.
இதேபோன்று குருநாகலவிலுள்ள ஆரியவத்தை என்கின்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 25 அன்று புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் காடையர்கள் சிலர் தெகிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலிலும்
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்டனர்.
இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்துள்ளதாக முஸ்லீம் மக்கள்
வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறிலங்காப் பிரதமர் டீ.எம்.ஜெயரட்ண, தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிப்பதற்கான உத்தரவை
வழங்கியிருந்தமையும் முஸ்லீம் சமூகத்தை விசனம் கொள்ள வைத்துள்ளது.
இந்நடவடிக்கையை ஆறு மாத காலம் வரை ஒத்திப்போடுவதென சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடித் தீர்மானித்த போதிலும், முஸ்லீம்
பிரதிநிதிகள் எவரும் இதற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களமானது
சிறிலங்காவில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற செயல்கள்
உண்மையில் இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமும் முஸ்லீம் மக்களின் உரிமைகளை மதிக்காது புறக்கணிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
அல்குவைதா மற்றும் தலிபான் போன்றவற்றுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களைத் தடை செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம்
ஈடுபடவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் தலிபான் மற்றும் அல்குவைதாவுடன் தொடர்புபட்டவர்களை அடையாளங்
காணமுடியுமா என்கின்ற கேள்வி நிலவுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளால் அமுல்படுத்தப்பட்ட சியோனிச நிகழ்சி நிரலா?
என்கின்ற கேள்வி எழுகின்றது.
சிறிலங்காவானது சுதந்திரம் பெற்றதிலிருந்து தான் எதிர்நோக்கிய மிகக் கடினமான சூழலிருந்து தற்போது மீள்கின்றது. உள்நாட்டிலும் அனைத்துலகிலும் சிறிலங்கா தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. மே 2009ல் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டதன் பின்னர் சிறிலங்கா மீது மேற்குலகம் வெறுப்புடன் காணப்படுகின்றது. யுத்தம் நிறைவுற்ற மாதங்களிலும், எப்போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்களாக முஸ்லீம்கள் மட்டுமே காணப்பட்டனர்.
சிறிலங்காத் தீவுடன் நட்பைப் பேணிக் கொள்வது என்பது தவிர, ஒரு மில்லியன் வரையான சிறிலங்கர்களுக்கு முஸ்லீம் நாடுகள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. ஒரு வாரத்துக்கு முன்னர், சிறிலங்காவில் 40 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் தாதிமார் பயிற்சி மையம் ஒன்றை அமைப்பதற்கான உடன்பாட்டை சவுதிஅரேபிய அரசாங்கம் எட்டியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பார்க்கில், சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களையும் முஸ்லீம் சமூகத்தவர்களையும் விரோதிக்க விரும்புவது யார்?
உலக சமூகத்தின் ஒரு பகுதியான நவீன பூகோளத்தில் வாழ்கின்றோமே தவிர, மத்திய கால உலகில் வாழவில்லை என்பதை சிறிலங்காவில் வாழும்
காடையார்கள் உணரவில்லையா?
சிறிலங்காவில் 30 ஆண்டுகாலம் தொடரப்பட்ட இனப் போரின் பின்னர் நாட்டில் வாழும் அனைத்து இனங்களையும் ஒன்றுசேர்ப்பதற்கான வாய்ப்பு
இதுவாகும். இவ்வாறான விவகாரங்களில் கவனத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக சிறிலங்காவில் வாழும் தீவிர தேசியவாதிகள் பள்ளிவாசல்கள் மீதும்
இஸ்லாமிய குர் ஆன் போன்ற புனித நூல்களின் மீதும் தாக்குதல் நடாத்துவதற்கான காரணம் என்ன? இது தாம் பாதுகாப்பதாக கூறிவரும் தமது
சொந்த நாட்டிலேயே பிளவுகளை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் உணரவில்லையா? பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, நாட்டில் தற்போது அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், ஊழல், சட்ட மீறல்கள், மதுபானப் பாவனை, பாலியல் துர்நடத்தைகள் போன்ற பல்வேறு மீறல்களுக்கு எதிராக தீவிர தேசியவாதிகள் ஏன் பரப்புரை மேற்கொள்ள முடியாது?
இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்களை விதைக்கும் இணையங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன? அதாவது ஒன்றுகூடல்கள், போக்குவரத்து
மற்றும் காடையர்களைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு செலவுகளை ஈடுசெய்வதற்கு இவ்
இணையத்தளங்களுக்கு நிதி வழங்குவது யார்? போன்றவை விடை காணாத வினாக்களாகும்.
சிறிலங்காவானது 1948ல் சுதந்திரம் பெற்றபோது அரசியல், பொருளாதார, ஒற்றுமை போன்றவற்றில் சிறந்து விளங்கியதுடன், நாட்டில் ஒருமைப்பாடு,
நேர்மை போன்றவை நிலைத்திடவும் திறவுகோலாக இருந்த சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் நாங்கள் இன்று எங்கே நிற்கிறோம்?
இது எவ்வாறு நடந்தது?
சிறிலங்காத் தீவில் வாழும் பல்லின சமூகங்களை ஒன்றிணைத்து நாட்டை ஒற்றுமையுடன் ஆட்சி செய்யவல்ல ஒருவரை இன்னமும் இந்த நாடு
பெற்றுக் கொள்ளவில்லை என்பது கெட்ட வாய்ப்பாகும். இந்தப் பூமிப்பந்தில் சிறிலங்காத் தீவானது உயிர்பெற்று நிலைத்து நிற்பதற்கு சிங்கள, தமிழ்,
முஸ்லீம் மற்றும் ஏனைய இனத்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டிய காலம் இதுவாகும். இந்த நல்வாய்ப்பை அனைவரும் இறுகப் பற்றிப்பிடிக்க
வேண்டும்.
செய்தி வழிமூலம் : By Latheef Farook - Sunday Times
மொழியாக்கம் : நித்தியபாரதி
நன்றி: புதினப்பலகை
No comments:
Post a Comment