SHARE

Thursday, July 15, 2010

பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களுக்கு இனிக் கிடையாது!

பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களுக்கு இனிக் கிடையாது!
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

வேறு இடங்களில் காணி வழங்கப்படும் என்கிறது அரசு.
===========================================
'' நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா.''
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
===================================
யாழ் உதயன் கொழும்பு, ஜூலை 16
நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா.
அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இந்த நாட்டின் பாதுகாப்புக்கே முதலாவது இடமும் இரண்டாவது இடமும் மூன்றாவது இடமும் வழங்கப்படும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட வேண்டியது கட்டாயம். அமெரிக்கா கூட அந்நாட்டின் பாதுகாப்புக்காக கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது.
நாட்டில் தற்போது இருக்கின்ற பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம் களும் அவ்வாறே இருக்கவேண்டும். அந்தப் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களின் காணிகள் இருந்தாலும் கூட அந்தக் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டா. அத்தகையோருக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்படும்.
மீள்குடியேற்றம் துரித கதியில்
தற்போது மீள்குடியேற்றம் துரிதமாக இடம்பெறுகின்றது. சில மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் அல்லாது வேறு காணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 10 முதல் 15 வீதமான மக்களே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அது விரைவில் தீர்க்கப்படும்.
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது யுத்தம் முடிந்து இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற முடிந்தமை ஒரு பெரும் சாதனையாகும்.
கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. வன்னியில் சுமார் 15 லட்சம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 2 லட்சத்து 68ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இதற்காக அரசு 88ஆயிரம் கோடி ரூபாவைச் செலவுசெய்துள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றுவதில் எமது படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். துரிதமாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சிலர் அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து அவசரப்பட்டு மீள்குடியமர்த்தி மக்களுக்கு கண்ணிவெடிகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதற்கும் அரசு மீதே குற்றம் சுமத்தப்படும்.
இன்னும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்பட்டதும் அவர்கள் விரைவில் குடியமர்த்தப்படுவர் என்றார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...