Friday, 8 January 2010

ஜெனரலின் "நம்பிக்கையான மாற்றம்''

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் "நம்பிக்கையான மாற்றம்''.
தினக்குரல்
இலங்கையில் மாற்றமொன்று ஏற்படுவதற்கான எதிர்பார்ப்புகள் கைகூடிவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கும் எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தப் போவதாகவும் ஊழலை அழித்தொழிக்கப் போவதாகவும் ஊடக சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படுமெனவும் வாக்குறுதி அளித்தார்."சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கையர் நான், என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா, தான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று குறிப்பிட்டார்.

"நம்பிக்கையான மாற்றம்'' என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, ராஜபக்ஷகளின் கீழ் வாழ்க்கை கடினமாகியிருப்பதாகவும் ஊழல், இலஞ்சம் என்பன நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.


அவர் நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம் '' எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட "அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

No comments:

Post a Comment