SHARE

Sunday, January 12, 2025

எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானார்!

 எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானார்!

இலங்கை மலையக தமிழ் இலக்கியத்தை, அதன் பல்வேறு வடிவங்களில் அது தனது சமகாலத்தை பதிவு செய்தன் வரலாற்றை அறிய அல்லது ஆய்வு செய்ய முயலுகின்ற எவரும் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களை விலக்கிச் செல்ல இயலாது. அந்த அளவுக்கு அவர் அந்த உலகோடு பின்னிப் பிணைந்தவர்.

தனது 80 வருட வாழ்வில் சுமார் 65 ஆண்டுகள் அந்த உலகத்தில் வாழ்ந்தவர் அந்தனி ஜீவா அவர்கள்.

பத்திரிகைத் துறையை ஒரு பாட நெறியாகக் கற்று பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்.

சுதந்திரன் (சமஸ்டிக்கட்சியின் அதிகாரபூர்வமற்ற அரசியல் ஏடு), மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழுந்து, குன்றின் குரல், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

பல்வேறு இலக்கிய வடிவங்களில் சுமார் 25 இற்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய முதல் நாடகமான 'முள்ளில் ரோஜா' 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு இலங்கை அரசு தடை விதித்தது. 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தினார்.

இவற்றோடு கூடவே அடுத்த இளம் தலைமுறையினரை எழுத்துலகில் ஈர்ப்பதற்கும் இவர் அயராது உழைத்துள்ளார்.

கருத்து நிலைகளுக்கு அப்பால், ஓரு சாதாரண மனிதருக்கு  இது ஒரு வாழ் நாள் சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஜனநாயகம் குறித்த பிரச்சனையில் அவரது தனிப்பட்ட கொள்கை நிலையை அறிவதற்கு, இந்த வாழ் நாள் சாதனை குறித்த ஒரு புறவய விஞ்ஞான ஆய்வு தேவை.இது மலையக வரலாற்றை அறிவதற்கும் துணை செய்யக் கூடும்.

அவர் வளர்த்த தலைமுறை இதைக் கட்டாயம் செய்யவேண்டும்.

அவர் எழுதிய நூல்களின் பட்டியல்:

  • அ.ந.க ஒரு சகாப்தம்
  • அக்கினிப் பூக்கள் (1999)
  • அன்னை இந்திரா (1985)
  • அமைதி கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது
  • ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
  • இவர்கள் வித்தியாசமானவர்கள்
  • ஈழத்தில் தமிழ் நாடகம் (1981)
  • ஒரு வானம்பாடியின் கதை (தன் கதை, 2014)
  • கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002)
  • காந்தி நடேசய்யர் (1990)
  • குறிஞ்சிக் குயில்கள் (2002)
  • குறும் பூக்கள்
  • சி. வி. சில நினைவுகள் (2002)
  • சிறகு விரிந்த காலம் (2007)
  • சுவாமி விபுலாநந்தர்
  • திருந்திய அசோகன் (2003)
  • நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் (2003)
  • பார்வையின் பதிவுகள்
  • மலையகம் வளர்த்த கவிதை (2002)
  • மலையக மாணிக்கங்கள் (1998)
  • மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002)
  • மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005)
  • மலையகமும் இலக்கியமும் (1995)
  • முகமும் முகவரியும் (1997)

தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் எழுத்துக்களைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், (2000)), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் மேற்காட்டிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

அந்தனி ஜீவா இலங்கை அரசின் சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அந்தனி ஜீவா (1944.05.26 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார். இவரது தந்தை செபஸ்டியன்; தாய் லட்சுமி அம்மாள். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

அந்தனி ஜீவா நேற்று முன்தினம்(10-01-2025) அன்று காலமானார்.

அந்தனி ஜீவாவின் இறுதிக்கிரியை கிருலப்பனை பொது மயானத்தில் இன்று (12) நடைபெற்றது.

ஒரு வானம்பாடி ஓய்ந்தது.

அது வானில் பறக்கவிட்ட பாடல்கள் ஆய்வாகும்.

அது வரை மலையகம் ஓயாது. 

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.

தோழர்கள் சார்பில் (சுபா) 12-01-2025

நன்றி:தகவல்கள் நூலகம்,விக்கிப்பீடியா, ஊடகங்கள்.


No comments:

Post a Comment

Donald Trump: சட்டம் தண்டிக்காது விட்ட குற்றவாளி-அறிக்கை

Trump avoids punishment at hush-money sentencing By  Luc Cohen  and  Jack Queen  January 11, 2025 NEW YORK, Jan 10 (Reuters) - U.S. Presiden...