SHARE

Monday, August 14, 2023

இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டமும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


 

லையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது.

அதற்கான ஆதரவு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்த போது அதில் நானும் எமது அமைப்பினரும் அதில் பங்குபற்றியிருந்தோம்.

அதில் கலந்துகொண்டிருந்த ஒரு பொதுமகன் என்னிடம் “ மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த சட்டத்திற்கு உங்கள் பாட்டனார் தலைமையில் உங்கள் கட்சி ஆதரவு வழங்கியமைக்காக இப்போதாவது மனிப்பு கேட்பீர்களா என கேட்டிருந்தார்.

எனக்கு மிக மனவேதனையை தந்த அந்த கேள்விக்கான தெளிவுபடுத்தலை நான் இங்கு செய்ய விரும்புகிறேன்.

இங்கு இந்த ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்திருக்கும் மலையக மலையக மக்களின் பிரதிநிதிகளாக இங்கு அமர்ந்திருக்கும் கெளரவ மனோ கணேசன் மற்றும் கெளரவ இராதாகிருஶ்னண் ஆகியோர் அம்மக்களின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் மிக தெளிவாக முன்வைப்பார்கள் என நம்புகிறேன் . மலையக மக்களின் பிரதிநிதிகள் தமது மக்களின் தேவைகளை வழமையாகவே மிக தெளிவாக முன்வைப்பவர்கள். அதில் என்னுடைய தலையீட்டிற்கு தேவையிராது என நம்புகிறேன். 

ஆதலால், இந்த சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் குறித்தான எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன்.


மலையக மக்களின் குடியுரிமையை பறித்த இலங்கை பிரஜா உரிமை சட்டத்தை (18/1948)  எமது கட்சி எதிர்த்தே வாக்களித்திருந்தது.

அந்த சட்டத்தில்  இரண்டு தலைமுறைகள் இலங்கையில் வாழ்ந்ததை சட்ட ஆவணங்கள்  மூலம் உறுதிப்படுத்தினாலேயே இலங்கை பிரஜா உரிமை மலையக மக்களுக்கு வழங்கப்படும் என சொல்லப்பட்டிருந்தது. அது அக்காலப்பகுதியில் மலையக மக்களால் ஒருபோதும் செய்யப்பட கூடியது அல்ல.அன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல இன்றும் கூட அப்படியான ஆவண சமர்ப்பித்தல் எந்தவொரு நாட்டிலும் இல்லை. மலையக மக்களை இந்த நாட்டில் உரிமையற்றவர்களாக மாற்றிய சட்டத்தை எனது பாட்டனார் ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முற்றுமுழுதாக எதிர்த்தே வாக்களித்திருந்தது என்பதை மிக தெளிவாக இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதன் பின்னர் இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர்  ஒரு  பல்லின பிரதிநிதித்துவ அரசை அமைக்க அழைப்பு விடுத்த பிரதமர் டி எஸ் சேனநாயக்காவுடன் நடந்த பேச்சுகளில் மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த இலங்கை குடியுரிமை சட்டத்தை மீளப்பெறுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நிபந்தனை விதித்திருந்தது.இந்த கோரிக்கைகளுக்கு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் டி.எஸ் சேனநாயக்க அரசு , ஏலவே நிறைவேற்றிய இலங்கை பிரஜா உரிமை சட்டத்தை மீள பெறுவதற்கு மறுத்திருந்தது. அதற்கு பதிலாக இந்திய- பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தை கொண்டுவரலாம் எனும் நிலைப்பாட்டை எடுத்தது( சட்ட இலக்கம் 3/1948). அதன் பிரகாரம் 10 வருடங்கள் இலங்கையில் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் எனும் நிலைப்பாட்டை டி. எஸ். சேனநாயக்க அரசு எடுத்திருந்தது.

ஆனால்  , நவீன உலகில் இருக்கும் நடைமுறையான ஐந்து வருடங்கள் இந்த நாட்டில் இருந்தமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உட்பட ஏனைய தமிழ் கட்சிகள் தமது தீர்வை  முன்வைத்திருந்தன. ஐந்து வருட கோரிக்கைக்கு இணங்க மறுத்த டி. எஸ். சேனநாயக்க , தமிழ் கட்சிகள் மற்றும் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு ஆகியோரின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக , ஒரு குடும்பம் 7 வருடம் இலங்கையில் இருப்பதை உறுதிப்படுத்தினால் இலங்கை பிரஜா உரிமையை பெறலாம் எனும் நிலைப்பாட்டிற்கு இணங்கிவந்தார். தனிநபருக்கு அந்த கால எல்லை 10 வருடம் எனவும் கூறப்பட்டு இந்திய- பாகிஸ்தான் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இந்திய- பாகிஸ்தான் குடியுரிமை சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே  அவர்கள் பிரஜா உரிமை பெற முடியும் என அரசு அறிவித்திருந்தது.

இதன் மூலம் ஏறத்தாழ 85% மலையக மக்கள் இலங்கை குடியுரிமையை பெறக்கூடிய வாய்ப்பை பெற்றுகொடுத்தது. 85% மலையக மக்கள் குடியுரிமையை பெறக்கூடிய அந்த சட்டத்திற்கே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆதரவளித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக , அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் காங்கிரசில் பிளவு ஏற்பட்டு திரு செல்வநாயகம் அவர்கள் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஸ்தாபித்தார். அவர் தலைமையிலான தமிழரசுக்கட்சி, மற்றும் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன,   மலையக மக்களில்  ஏறத்தாழ 85 % ஆனவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ள கூடிய அந்த சட்ட மூலத்தை எதிர்த்திருந்தார்கள். ஐந்து வருடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆதாரத்தை சமர்ப்பித்தல் மூலம் பிரஜா உரிமை வழங்கும் கோரிக்கைக்கு டி. எஸ். சேனநாயக்க அரசு இணங்காதபடியால்  3-1949  ஏறத்தாழ 85 % மலையக மக்கள் பிரஜா உரிமை பெறக்கூடியதாக இருந்த இந்திய- பாகிஸ்தான் குடியுரிமை  சட்ட மூலத்தின் கீழ் பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனும் பிரசார இயக்கத்தையும் ஆரம்பித்து மலையக மக்கள் பிரஜா உரிமையை பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதை எதிர்த்து இருந்தார்கள்.

டி.எஸ். சேனநாயக்க அரசு இந்த சட்டத்தை மாற்றப்போவதில்லை என ஈற்றில் புரிந்து கொண்ட இவர்கள், கடைசி ஆறு மாத காலப்பகுதிக்குள் தமது கோரிக்கையில் இருந்து பின்வாங்கி  மலையக மக்களை பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள்.அந்த ஆறுமாத காலத்துக்குள்ளேயே தொண்டமான் உட்பட்ட சிலர் பிரஜா உரிமையை பெற்றுக் கொண்டார்கள். 

ஆனால் இந்த சட்டமூலத்தின் கீழ் விண்ணப்பிக்கவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்ற சாமானிய மலையக மக்கள், விண்ணப்பத்திற்கான எதுவித ஆவணங்களின் ஆயத்தமும் இல்லாத நிலையில் திடீரென இறுதி ஆறுமாதங்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாத துரதிர்ஷட நிலைக்கு உள்ளானார்கள்.ஏறத்தாழ 85% வீதமானோர் பிரஜா உரிமை பெற கூடிய சட்டமூலத்தை எமது கட்சி ஆதரித்ததே தவிர எதிர்க்கவில்லை.உண்மையில் அதை எதிர்த்தது தமிழரசுக்கட்சிதான் . அந்த நிலைப்பாட்டில் கூட இறுதி கட்டத்தில் மாற்றத்தை செய்ததால்  வெறும் 15% ஆன மலையக மக்களே  பிரஜா உரிமை பெற கூடியதாக இருந்தது. 85% மலையக  மக்கள் பிரஜா உரிமை பெறும் சந்தர்ப்பத்தை வீணாக இழந்திருந்தோம். தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் இந்த சட்டமூலத்தினை பகிஷ்கரித்தமையால்  ஏறத்தாழ 85% மலையக மக்கள் நாடற்றவர்கள் ஆனார்கள்.இந்த 85% மலையக மக்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்த 85% மலையக மக்களின் ஏறத்தாழ அரைவாசிபேர் நாடற்றவர்களாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள் . 

இந்த இடத்தில் மீண்டும் தெளிவாக ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.

 மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த 18/1948 இலங்கை பிரஜா உரிமை சட்டத்தை எமது தமிழ் காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்த்தே இருந்தது . பறிக்கப்பட்ட பிரஜா உரிமையை மீள வழங்கும் 3-1949 இந்திய- பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தையே எமது அமைப்பு ஆதரித்திருந்தது. 

இந்தவிடயத்தில் 100 % வெற்றியை பெறுவது தான் வெற்றி, மாறாக  ஆககுறைந்தது   85 வீதமாவது வெற்றியை பெறுவதற்கு சம்மதித்தமை வெற்றியல்ல என குற்றம் சுமத்தப்பட்டால் , 85% மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக  மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.

ஆககுறைந்தது 85 % மலையக மக்கள்  பிரஜா உரிமையை பெறக் கூடிய சட்டமூலத்தை ஆதரித்தது , பிழையென கூறுபவர்கள் , அந்த 85% மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு , அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட ஏதுவாக அமைந்த சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை எதுவித தயக்கமோ கூச்சமோ இன்றி ஆதரித்தார்கள்.  அந்த மக்களின் மூதாதையர் இந்தியாவில் இருந்து வந்ததை தவிர இந்தியா பற்றி எதுவுமே தெரிந்திராத , இலங்கையிலேயே பிறந்து இலங்கையராகவே வாழ்ந்த அந்த அப்பாவி மலையக மக்களினை இந்தியாவிற்கு நாடுகடத்திய சிறிமா -சாஸ்திரி உடன்படிக்கையை ஆதரித்து மலையக மக்களுக்கு  மிகப்பாரிய துரோகத்தை இழைத்தவர்களும் மலையக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இறுதியாக இந்த இடத்தில் மலையக மக்கள் குறித்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரான எமது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன்.

மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த தரப்பினாலும் நேர்மையாக முன்வைக்கப்படும் எந்த திட்டத்தையும் முழுமனதோடு எதுவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்போதும் தயாராகவே இருக்கும் .

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

தலைவர் 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...