SHARE

Monday, August 14, 2023

இன்னும் எத்தனை கறுப்பு மாதங்களை தமிழர் காணவேண்டும் தீர்வுக்காக!

13க்கு எதிராக சிங்கள பௌத்தத்தை அணிதிரட்டும் 

ரணிலின் உத்தி! 

பனங்காட்டான்

பதிவு அஞ்சு Sunday, August 13, 2023  கட்டுரை, முதன்மைச் செய்திகள்


தமிழருக்கான அதிகாரப் பகிர்வையும், அரைகுறை அதிகார மாகாண சபை முறைமையையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காகவே பதின்மூன்றாம் திருத்தத்தை மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு எடுத்துச் செல்ல முனைவதுடன், சகல கட்சிகளினதும் ஆலோசனையைக் கோரியுள்ள ரணிலின் இலக்கு இலகுவாக எட்டப்படுகிறதா? 

 

இன்றைய பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது 'இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ரணிலகுமாரா" என்ற வரிகளை வாய்க்குள் முணுமுணுப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

பதின்மூன்று பதின்மூன்று என்று வாய்ப்பாடாகச் சொல்லப்படும் அரசியல் திருத்தத்தை சிங்கள பௌத்த நெருக்கடிக்குள் தள்ளி, அதில் குளிர் காய்ந்து, எப்படியாவது முழுமையாக இல்லாமற் செய்ய வேண்டுமென்பதையே குறியாகக் கொண்டு ரணில் எடுத்துள்ள முயற்சி திசை தவறாது நகர ஆரம்பித்துள்ளதை ஒவ்வொரு கணமும் பார்க்க முடிகிறது. 

பதின்மூன்றுக்கு எதிராக சிங்களப் பெரும்பான்மையை, பௌத்த பீடத்தின் தலைமையில் அணி திரட்ட வேண்டுமென்ற ரணிலின் உத்தி வெற்றிகரமாக அதன் ஓட்டத்துக்கு தயாராகிறது. 

முன்னர் பல தடவை பதின்மூன்றாம் திருத்தத்தின் மூலம் பற்றி குறிப்பிட்டாயிற்று.  ராஜிவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒருவரையொருவர் மடக்கும் முனைப்பில் மேற்கொள்ளப்பட்ட 1987 யூலை ஒப்பந்தத்தின் கருவறைக் குழந்தை பதின்மூன்றாம் திருத்தம். இதிலிருந்து உருவானது மாகாண சபை முறைமை. 

இந்த ஒப்பந்தத்தில் ஜே.ஆர். கையொப்பமிடும்போது சிங்களத் தரப்பில் அவருக்கு பலமான எதிர்ப்பு இருந்தது. முக்கியமாக அவரது பிரதமர் ஆர்.பிரேமதாச, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் ராஜிவின் இலங்கை விஜயத்தையே புறக்கணித்தார்கள். ராஜிவ் மீதான கொலை முயற்சியும் கொழும்பில் இடம்பெற்றது. அப்போது விமல் வீரவன்ச தலைமையில் இயங்கிய ஜே.வி.பி. இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்து கொலைகளையும், தமிழர் வணிக நிலையங்களை அடித்து நொருக்கி தீமூட்டியும் வந்தது. 

எனினும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் தோல்வியடையும் என்ற பூரண நம்பிக்கையில் இந்த ஒப்பந்தத்தில் தாம் கைச்சாத்திட்டதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது சுயசரிதையான ஷமென் அன்ட் மெமரீஸ்| (ஆநn யனெ ஆநஅழசநைள) என்ற நூலின் 109ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 'கிழக்கு மாகாணத்தில் சிங்களவரும் முஸ்லிம்களும் இணைந்து அறுபது வீதமாக உள்ளனர். இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். இதனால் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறாது" என்று ஜே.ஆர். தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

1987ல் அறுபது வீதமாக இருந்து கிழக்கின் சிங்கள முஸ்லிம் சனத்தொகை அதன் பின்னைய 35 ஆண்டுகளில் இடம்பெற்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் எழுபது வீதத்தை தாண்டிவிட்டது என்பதையும், 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நிரந்தர இணைப்பு ரத்தாகி விட்டது என்பதையும், இன்று சர்வஜன வாக்கெடுப்பு கோரும் தமிழ் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

மறுபுறத்தில், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னர் புதுடில்லி திரும்பும் வழியில் சென்னை மரீனா கடற்கரையில் மாபெரும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த ராஜிவ் காந்தி அதில் உரையாற்றினார். 'தமிழ்நாட்டில் நீங்கள் அனுபவிக்கும் உரிமைகளிலும் பார்க்க கூடுதலானவற்றை இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு உங்கள் முன்னால் வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தபோது கடல் அலையை மேவிய கையொலி எழுந்தது. 

நடந்தது என்ன? பதின்மூன்றாம் திருத்தமும் மாகாண சபையும் மெல்லிழையில் ஊசலாடுகின்றன. முன்னர் ஒரு தடவை கூறியது போன்று குரங்கு அப்பம் பங்கிட்ட கதைபோல பதின்மூன்றாம் திருத்தத்தில் கூறப்பட்டவைகளை பிய்த்துப் பிடுங்கும் போக்கில் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இல்லாமற் செய்ய ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இலங்கையின் பிரதான சிங்கள கட்சிகள் அனைத்திலும் அமைச்சர் பதவிகளை வகித்து, இன்று எந்தக் கட்சியும் இல்லாது நிற்கும் ஜி.எல்.பீரிஸ் முதன்முறையாக ஓர் உண்மையை சில நாட்களுக்கு முன்னர் வாய் திறந்து கூறியுள்ளார்.  'பதின்மூன்றாவது திருத்தம் என்பது இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியதில்லை" என்ற அவரது கூற்று ரணிலை அப்பட்டமான பொய்யர் என்று அம்பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துக்கானதாயினும் சொல்லப்பட்ட விடயம் நூற்றுக்கு நூறு உண்மையானது. 

1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அமலாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு அவர் ஓய்வு பெற்ற 1988க்கு முன்னரான பதினொரு வருடங்களுக்குள் பதினேழு திருத்தங்களைக் கண்டன. பதினெட்டு முதல் இருத்தொன்று வரையான திருத்தங்கள் அதன் பின்னர் நிறைவேற்றப்பட்டவை. இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டவை. 

எனவே இவைகளை நடைமுறைப்படுத்தும் முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ரணிலுக்கு உண்டு. அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்ட வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான இவர் அமைச்சரவை நியமனங்கள், அமைச்சரவை மாற்றங்கள், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் அனைத்திலும் தமது அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்தி வருகிறார்.

ஜனநாயக வரம்புக்குட்பட்ட தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் போன்றவற்றை பாதுகாப்பு படையின் பலத்தை பயன்படுத்தி முறியடிக்கும் சர்வாதிகார செயற்பாடுகளிலும் ஜனாதிபதி என்ற பதவி வழி வந்த நிறைவேற்று அதிகாரத்தையே பயன்படுத்தி வருகிறார். 

ஆனால், பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்று வரும்போது மட்டும், நாடாளுமன்றமே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்றும், தம்மை ஒரு றப்பர் முத்திரை போலவும் காட்டிக் கொள்வது உலுத்தத்தனமான அரசியல். 

கடந்தாண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாக அறிவித்தபோது நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி எதுவும் இவர் கூறவில்லை. பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்படும் என்று அறிவித்தபோது நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சை ஆரம்பித்தபோதும் நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி மூச்சு விடவில்லை. 

சகல கட்சிகளையும் இணைத்து பேச்சு நடத்தும்போது திடீரென தாம் அதிகாரமற்றவர் போன்றும், நாடாளுமன்றமே அதியுயர் பீடம் என்பது போலவும் காட்ட வேண்டிய தேவை எவ்வாறு ஏற்பட்டது. 

இந்தியா புறப்படும் முன்னர் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுடனான பேச்சின்போது பொலிஸ் அதிகார நீக்கம் பற்றிச் சொன்னார். இல்லாத ஒன்றை நீக்கப்போவதாக அவர் சொன்னபோது இருக்கும் அதிகாரங்களுடன் மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு சகலரும் கேட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதில் அடக்கம். ஆனால், மழுப்பல் பதிலளித்துவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டார். 

இந்தியப் பிரதமரை சந்தித்தபோது பிரச்சனைத் தீர்வுக்கான தமது முன்மொழிவை அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், நாடு திரும்பியதும் அவ்விடயம் தொடரும் எனவும் அவரிடம்; தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் வந்தன. ஆனால், தமிழ்க் கட்சிகளை சந்தித்த கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தவும் ரணிலிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். 

நாடு திரும்பிய ரணில் சகல அரசியல் கட்சிகளிடமும் பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை இந்த மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் வேண்டினார். அதற்கிடையில் கடந்த 9ம் திகதி இது தொடர்பான உரை ஒன்றை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது நாட்டின் அபிவிருத்திக்கு பதின்மூன்றாம் திருத்த நடைமுறை அவசியமானது என்று பெரும் குண்டொன்றை தூக்கி வீசியதோடு இதற்குத் தேவையான ஆலோசனைகளை அரசியல் கட்சிகளிடம் கேட்டார். 

இவைகளை கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, பதின்மூன்றாம் திருத்தம் வெட்டித் தள்ளி சீரழிக்கப்படப் போகிறது அல்லது இதற்குப் பதிலாக இன்னொன்று உப்புச் சப்பில்லாததாக உருவாகப் போகிறது என்பது வெளிச்சமாகத் தெரிகிறது. வழமைபோன்று தேசிய நல்லிணக்கம், அபிவிருத்திக்கான துரித நடவடிக்கைகள் என சர்வதேசத்தை வளைத்துப்போடும் சொல்லாட்சிகளை தமதுரையில் தாராளமாக பயன்படுத்தியுள்ளார். 

அதேசமயம், மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டம் தயாரிக்கப்படுவது, மாகாண சபைகள் செயற்படும்வரை ஆளுனர்களுக்கு ஆலோசனை வழங்க சபைகள் அமைக்கப்படுவது, மாகாணத் தேர்தல் வாக்களிப்பில் மாவட்ட விகிதாசார முறைமையை நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது என்பவை இவரது உத்தேச திட்டத்தில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பதின்மூன்றாம் திருத்தம் நாட்டைப் பிளக்கும் என்ற அறிவிப்பை பௌத்த மகாநாயக்கர்கள் பகிரங்கப்படுத்தி பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இதற்கு ஆதரவான குரல்கள் தெற்கிலிருந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 

ரணில் எதனை எதிர்பார்த்து காய்களை நகர்த்தினாரோ அது அதுவாக இயங்க ஆரம்பித்துள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு பதின்மூன்றாம் திருத்தம் அவசியமென ரணில் கூறியபோது சகல பிரச்சனைகளின் தீர்வுக்கும் இதனையே சர்வரோக நிவாரணியாக அவர் நினைத்ததுபோல கருத இடமளித்தது. ஆனால், சகல பிரச்சனைகளையும் ஒரேயடியாக தீர்த்துக்கட்ட பதின்மூன்றை ரணில் கையில் எடுத்தாரென்பது இப்போது பரகசியமாகியுள்ளது. 

சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்த சிங்கள பௌத்த மேலாண்மையை, பதின்மூன்றை ஆயுதமாக்கி எழுப்பியுள்ளார் ரணில். இன்னும் எத்தனை கறுப்பு மாதங்களை தமிழர் காணவேண்டும் தீர்வுக்காக!

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...