இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்.
மாவீரர் தினம் துயர் பகிரும் தூய தினம் என்பதோடு, அவர் தம் கனவாம் தமிழீழத் தாயகத்தை , அதன் சமுதாய அவசியத்தை, சமகாலச் சூழலில் ஆய்ந்தறிந்து,போராடுவதற்கான திட்ட தீர்மானங்களை வகுத்து வரையறுக்கும் தினமுமாகும்.தேசியத் தளபதி பிரபாகரனின் வருடா வருட மாவீரர் தின உரை இந்த கொள்கை அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அதை நாம் தொடர வேண்டும்.தொடர்வோம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே, மாணவர்களே,இளைஞர்களே, புலம் பெயர் இளையோரே;
இவ்வாண்டு மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்து மாவீரர் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு புறவய, அகவய சூழ் நிலைகள் பற்றிய ஆய்வு இன்றியமையாதது ஆகும்.அத்தகை ஒரு ஆய்வு இல்லாத நடைமுறை இயக்கம் தன்னியல்பானதாகி சந்தர்ப்பவாதத்துக்கு பலியாகும்.கடிவாளமில்லாமல் களமாடும்!
பக்ச பாசிசம் இம்முறையும் மாவீரர்களை நினைவு கூர நீதி மன்றத்தடையையும், படைபலத்தையும், அச்சுறத்தல்களையும் விடுத்து எச்சரித்துவருகின்றது.இந்த எச்சரிக்கைகளை எதிர்த்து மாவீரர் தினத்தை அநுஸ்டிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.பக்ச பாசிஸ்டுக்களின் `ஒரே நாடு ஒரே சட்டத்தை` நீதி மன்றங்களே ஏற்கவில்லை போலும்! சில நீதிமன்றங்கள் அநுமதி வழங்கியுள்ளன. சில அநுமதிக்கவில்லை!
ஏன் மாவீரர்களை நினைவு கூருவதை சிங்களம் தடை செய்கின்றது, வெறி கொண்டு பாய்கின்றது?
பக்ச பாசிஸ்டுக்கள், கோத்தா ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்த கடந்த இரண்டே ஆண்டுகளில் நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டனர். பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது.கடன் சுமை தலைக்கு மேல் சென்று விட்டது. அந்நியச் செலாவணி இன்மையால் இறக்குமதி நின்றுவிட்டது.வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை உயர்ந்துவிட்டது.பணவீக்கம் 8.3% என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அது 15 % அளவில் இருக்கும் பிற ஆய்வுகள்-எதிர்க்கட்சி- தெரிவிக்கின்றன.கடன் அடைப்பதற்கு கடன் வாங்குவது, கண் மண் தெரியாமல் பண நோட்டுக்களை அச்சிட்டு விடுவது, இந்த நிலையிலும் அவசியமற்ற ஆடம்பரச் செலவுகளைத் தொடர்வது என நாட்டை நடத்துகின்றது சிங்களம்.அதேவேளை விவசாய உற்பத்திக்கு அடிப்படைத் தேவையான உரத்தை இறக்குமதிக்கு பணம் இல்லாமல் இருக்கின்றது.இதனை மூடி மறைக்க சுகாதாரக் காரணம் கூறுகின்றது.இதனால் விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைந்து விவசாயப் பண்டங்களுக்கு பெருந் தட்டுப்பாடு நிலவுகின்றது.உணவுத் தட்டுப்பாட்டால்-ஏழை எளிய உழைக்கும் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.கிளர்ந்தெழுந்து வீதியில் இறங்கி ஆர்ப்பரிக்கும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகின்றது.கோவிட் தொற்றைக் காரணம் காட்டி மக்கள் ஓன்று கூடுவதைத் தடுக்கின்றது.மக்கள் நாட்டை விட்டு ஓடுகின்றனர்.
இதனால் எழும் எதிர்ப்புகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள மக்களை தமக்குள் மோதவிடுகின்றது.இதற்காக மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றது.ஈழச் சோனகரை குறி வைத்து தாக்குகின்றது. ஈழ தேசிய முரண்பாட்டை மேலும் மேலும் கூர்மைப் படுத்துகின்றது.தமிழ்ப் பாதிரிகளை துணை சேர்த்துக் கொள்கின்றது.அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்து மென்மேலும் பாசிசமயப்படுகின்றது.அரசாங்கத்தையும் அமைச்சுக்களையும் தனது குடும்பத்துக்குள் சுருக்கிவிட்டது.2022 வரவு செலவுத் திட்ட த்தில் 65% மான நிதி ஒதுக்கீடு இந்தக் குடும்ப உறுப்பினரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்! அமைச்சுக்களை செயலிழக்கச் செய்ய `ஜனாதிபதி செயலகம்` என்கிற பாசிச முறையைக் கையாளுகின்றது.
இந்த பாசிச மயமாக்கலை எதிர்த்து தொடர்ச்சியாக வெகுஜனப் போராட்டங்களும், விவசாய எழுச்சிகளும், வேலை நிறுத்தங்களும் பரவலாக வெடித்துவருகின்றன.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்,
மலையகமும்,சோனகமும்,தமிழ் மக்களும் ஒன்றிணைகின்ற போக்காகும்.விவசாயப் பிரச்சனை சிங்களவர்களையும் இணைக்கக் கூடிய புறவய நிலமைகள் உள்ளன.
இது சிங்களத்தை அச்சுறுத்துகின்றது.
இவ்வாறுதான் இலங்கையின் உள்நாட்டு நிலைமை உள்ளது. ஆனால் இது பகுதி நிலைமை மட்டுமே!
கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடும் உலகமறுபங்கீடும்:
1987 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உலகம் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களாகப் பிரிந்திருந்தது.அமெரிக்கா தலைமையிலான ஒரு முகாமும், ரசிய சமூக ஏகாதிபத்தியம் தலைமையிலான ஒரு முகாமுமாக அது அமைந்திருந்தது. ரசிய சமூக ஏகாதிபத்தியம் முதலாளித்துவ மீட்சியால், ஆப்கான் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் என பலவழிகளில் சீரழிந்து பலவீனப்பட்டு இருந்தது. இதுவே இரட்டைத் துருவ உலக ஒழுங்கமைப்பு எனப்படுவது.
இந்த நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இரண்டு முகாம்களின் ஆசீர்வாதத்துடன்தான் கைச்சாத்தானது.
ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அது ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பாக மாறியது.பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டது.சோவியத் ஒன்றியத்தின் கீழ் கூட்டாட்சியில் இருந்து கிழக்கைரோப்பிய நாடுகள் அமெரிக்க, ஐரோப்பிய முகாமுடன் இணைந்தன.
மறுபக்கத்தில் முதலாளித்துவ மீட்சியாலும்,டெங்-ரொட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகளின் துரோகத்தாலும் சீரழிந்து பலவீனப்பட்டு பின் தங்கியிருந்த சீனாவும்-ரசியாவும் தம்மை அரசு முதலாளித்துவப் பாதையில் மீளக்கட்டியெழுப்பி வந்தன. மேலை ஏகாதிபத்தியத்தின் உலகமய பொருளாதார திட்டத்தை தன்வயப்படுத்தி சீனா உலகின் பண்ட உற்பத்திக்கு மலிவுத் `தாய்` ஆனது.சீன உழைக்கும் மக்களின் இரத்தம் குடித்து அசுர அரசு மூலதனத்தை உருவாக்கிக் கொண்டது.
அதைக்கொண்டு பெருவீதத் தொழில் துறையை உருவாக்கிக் கொண்டது.ரசியா எரிவாயு வளம், ஆயுத தளபாட உற்பத்தி என்கிற இரண்டு ஆயுதங்களைக் கொண்டு தன்னையும் மீட்டெடுத்துக் கொண்டது.
இறுதியாக ஆப்கான் ,ஈராக்,சிரிய போரின் பின்னணியில் , சீனாவும் ரசியாவும் தம்மை ஏகாதிபத்தியமாக வளர்த்து உருவாக்கிக் கொண்டன.
கிரிமியாவிலும், சிரியாவிலும் ரசிய தலையீடு,
ஹொங்கொங்லிலும், தாய்வானிலும், இலங்கையிலும் சீனத் தலையீடு,
மீண்டும் இரட்டைத்துருவ ஒழுங்கமைப்பு:
ஆக மீண்டும் ஒரு இரட்டைத்துருவ உலக ஒழுங்கமைப்பு ஏற்பட்டது.
அமெரிக்க ஐரோப்பிய முகாம்-சீன ரசிய முகாம்.
இந்த இரண்டு முகாம்களினதும் முரண்பாடு, மற்றும் மோதல்களின் அடிப்படை, உலகை மறுபங்கீடு செய்து தீருவதாகும். இது 1987 நிலையில் இருந்து பண்பு ரீதியில் வேறானது,மிகத் தீவிரமானது, பெரிய யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடியது.
மேலும் அமெரிக்க ஐரோப்பிய முகாம் உள் முரண்பாடுகளால் சிக்குண்டு சிதறுண்டு பிளவுண்டு கிடக்கிறது.துருக்கி ஒரு NATO நாடாக உள்ள போதும் ரசியாவுடனான அதன் உறவு நெருக்கமடைந்து வருகின்றது. NATO விற்கு மாற்றான ஒரு இராணுவக் கூட்டை அமைக்க வேண்டுமென பிரான்ஸ் கோரிவருகின்றது.BREXIT, ஆங்கிலக் கால்வாய் குடியேற்றப் பிரச்சனையால் பிரான்சும் இங்கிலாந்தும் மோதிக்கொள்கின்றன. ரசியாவிடமிருந்து எரிவாயு பெறும் எண்ணெய்க்குழாய் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவும்- ஜேர்மனியும் (ஐரோப்பாவும்) வாய்ச் சண்டையிடுகின்றன. தேசிய இனப்பிரச்சனை,பிரிவினை இயக்கங்கள் எழுந்து வருகின்றன.
இவ்வாறு மேற்கு முகாம் தற்காப்பு நிலையில் (Defensive) உள்ளது.
சீன ரசிய ஏகாதிபத்திய முகாம் உறுதியாகவும், நிலையாகவும், பலமாகவும் இருக்கின்றது. தாக்குதல் நிலையில் (Offensive) உள்ளது. ரசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வருகின்றது.
உலகம் அமெரிக்க ஐரோப்பிய முகாமுக்கும், சீன ரசிய முகாமுக்கும் இடையில் பங்கிடப்படுகின்றது.நாடுகள் இந்த இரண்டு முகாம்களின் பின் அணிதிரளுகின்றன. இந்தியா அமெரிக்க ஐரோப்பிய முகாமுடன் அணிசேர்ந்துள்ளது.
இலங்கை மறுபங்கீடு உலக மறுபங்கீட்டின் ஒரு பகுதியே!
இத்தகைய சூழலில் தான் இலங்கை சிக்குண்டுள்ளது.ஆப்பிழுத்த குரங்கு போல் மாட்டுப்பட்டுப் போய் உள்ளது.அமெரிக்க ஐரோப்பிய முகாமுக்கும், சீன ரசிய முகாமுக்கும் இடையில் பங்கிடப்படுகின்றது.எவ்வளவு தான் முயன்றாலும் இலங்கை இந்திய விரிவாதிக்க வட்டத்தை விட்டு சிங்களம் வெளியேறுவது அவ்வளவு இலகானதல்ல.ஈழ தேசிய இனப்பிரச்சனை இச்சிக்கலின் ஒரு பகுதியாகிவிட்டது .
1983 இற்கு முன்பிருந்தது போல இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை அல்ல.1983 இற்குப் பிந்தி இருந்தவாறு இது பிராந்தியப் பிரச்சனையுமல்ல. 2009 இற்குப்பின்னால் -யுத்தத்தில் சீனத் தலையீட்டோடு-இது உலக மறுபங்கீட்டுப் பிரச்சனையின் பகுதியாகிவிட்டது.இது படிப்படியாக மாறியும் வளர்ந்தும் வருகின்றது.
சில தினங்கள் முன்பான `தமிழ் மக்களோடு இணைந்து பயணிக்கும்` அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கை இதில் ஒரு திருப்புமுனை ஆகும்.
இது 1983 ஜூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து `` தமிழர்களைக் காக்க இந்தியாதலையிடும்`` என்பதற்கு ஈடானதும், புதிய-இன்றைய-பரிமாணம் கொண்டதுமாகும்.
சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம்.
இந்தச் சந்திப்பில் பரிமாறப்பட்ட கருத்துக்களாக பொது வெளியில் சொல்லப்படுகின்ற விடயம் முழு உண்மையுமல்ல. உண்மையைத் தேடுவதற்கான சில தகவல்கள் மட்டுமே.நமது நாடாள மன்ற வாதிகளும்,சிவில் சமூகத்தினரும், ஆய்வாளர்களும்,அறிவியக்கக் காரர்களும் ஒரு சேர எம்மை ஏமாற்ற முயலுகின்றனர்.
உண்மையில் இது 1983 ஜுலை இனப்படுகொலைக்குப் பின்னால் சமஸ்டிக் கட்சிக்கும் இந்திய அரசுக்கும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்த பேச்சு வார்த்தை, -பிரபாகரன் மிகச்சரியாக முன் அனுமானித்தவாறு-இறுதியில் தேசிய இனப்பிரச்சனைக்கு எந்த ஜனநாயகத் தீர்வையும் வழங்காமல் ,இந்திய விவாதிக்க நலனை உறுதிசெய்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதக் களைவு மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தத்திலும் முடிந்தது.அந்த யுத்தத்தில் இந்தியா தோற்றாலும் 2009 இல் வென்றது.
இந்தியப் படையின் ஆக்கிரமிப்புக்கும் சமஸ்டிக் கட்சிக்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளின் மறுபிறப்பு இன்று நிகழும் அமெரிக்கத் தலையீடு..!
தமிழ் மக்களோடு இணைந்து பயணிக்கும் இந்த அமெரிக்கத் திட்டம், சிங்களத்தை அடிபணியச் செய்யவும், சீன சார்புப்போக்கை தடுத்து நிறுத்தி,ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உலக மேலாதிக்க மறுபங்கீட்டு நலனை அடைவதற்கான அரசியல் தலையீட்டுப் பிரகடனம் ஆகும்.இந்தியத் துணையில் நடக்கும் அரசியல் தயாரிப்பாகும். இத்தகைய ஒரு அரசியல் தயாரிப்புக்காலம் இல்லாமல் இராணுவத்தலையீட்டை நடத்த முடியாது.
இந்தலையீட்டுக்கு அழைப்புவிட `தமிழ்க் கட்சிகள்` என்கிற ஒரு தேச விரோத அடிமைக் கும்பல் இருக்கின்றது.
அல்லாமல் `நம்மவர்கள்` நம்புவது போல,நம்மை நம்ப வைக்க முயலுவது போல அமெரிக்க இந்திய முகாமுக்கு, ஈழ தேசிய இனப்பிரச்சனையில் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் `தமிழர்கள் மக்களா, மாக்களா` என விவாதம் நடத்தக்கூடாது.
தமிழர்கள் தம்மை மக்கள் என்று கருதுவதற்கு -அழைத்துக் கொள்வதற்கு இலங்கையில் எந்தத் தடையுமில்லை.மக்கள் என்கிற சொல் கொண்ட பல சட்டபூர்வ அரசியல் கட்சிகள் இலங்கையில் உண்டு.அவை தேர்தலில் போட்டியிடுகின்றன.இதற்கு எதற்கு அமெரிக்கா?
``மக்கள் என்றால் ஏறத்தாழ தேசம் என்பதைக் குறிப்பதாகும்`` என நமது அறிவியக்கக்காரர்கள் அடித்துச் சத்தியம் செய்கின்றனர்.
இந்த `ஏறத்தாழ` என்கிற இடைச்செருகல் இவர்களுக்கு ஏன் தேவைப்படுகின்றது.அப்படியானால் அது எத்தனை வீதமான தேசம்? 5% ? 10%? 30,40,50%? .......?
எனவே அமெரிக்க இந்திய முகாமுக்கு, ஈழ தேசிய இனப் பிரச்சனையில் உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள்,
- வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை,
- திம்புக்கோரிக்கைகளை,
- 33 ஆண்டுகால யுத்தத்தின் அடிநாதமான விடுதலைப் புலிகளின்,ஜனநாயக ரீதியான ``புலிகளின் தாகம் தமிழீத்தாயகம்,
- புலம்பெயர் தமிழரின்,``தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்``,
- 2009 தேசிய இனப்படுகொலை,
- அதற்குப் பிந்திய 12 ஆண்டுகளில் சிங்களத்தின் நடத்தை
ஆகியவற்றைக் கருத்தில் எடுத்து, சிங்களம் வரையவுள்ள புதிய அரசியல் யாப்பில்,
ஆறாவது திருத்தத்துக்கு மாற்றாக, ஈழதேசிய சுயநிர்ணய உரிமையை, பிரிவினைப் பொதுவாக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஆயுதம் ஏந்தும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்.
``பாரதூரமான`` குற்றமிழைத்தவர் உட்பட அனைத்து யுத்தக் கைதிகளும், அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை விடுவிக்க வேண்டும்.
நில அபகரிப்பை நிறுத்த வேண்டும்,அபகரித்த நிலங்களை திரும்பக்கையளிக்க வேண்டும்.
33 ஆண்டுகால ஈழ தேசிய ஒடுக்குமுறை யுத்தத்திற்கு நஸ்ட ஈடு செலுத்த வேண்டும்.
யுத்த பூமியை மீள் நிர்மாணம் செய்யவேண்டும்.
ஈழ தேசிய இனப்பிரச்சனையை,பிரிவினைக் கோரிக்கையை, பொது வாக்கெடுப்பு முழக்கதை ஒருபோதும் மேலாதிக்க விரிவாதிக்க நலன்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
இந்த ஜனநாயகக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் எமது ஆரம்பக்கேள்விக்கு வருவோம்:
ஏன் மாவீரர்களை நினைவு கூருவதை சிங்களம் தடைசெய்கின்றது,வெறி கொண்டு பாய்கின்றது?
ஏனென்றால் இதை அனுமதித்தால் மேற்கண்ட கோரிக்கைகளுக்கான ஒரு ஜனநாயக இயக்கம் தோன்றிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
சிங்களம் மட்டுமல்ல இரண்டு ஏகாதிபத்திய முகாமும்தான். இந்தியாவும் தான்.
இதனால் சீன முகாமை எதிர்த்து, அமெரிக்க இந்திய முகாமோடு அணிசேரும் செயல் வழி இலக்கு (Tactics), நமது தொலை வழி இலக்கு (Strategy) (மக்கள் ஜனநாயக் குடியரசு முழக்கத்தை நோக்கி மக்களை வழி நடத்த ஒருபோதும் உதவாது,மாறாக இடைவழிச் சமரசத்துக்கே இட்டுச் செல்லும்.
எனவே இடைவழிச் சமரசங்களை முறியடித்து, ஈழம் காண ஊற்றெடுக்க இவ்வாண்டு மாவீரர் தினத்தில், மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில், ஒரு புதிய ஈழ புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்க அணி சேருமாறு அழைக்கின்றோம்.
எல்லாப் புகழும் மாவீரருக்கே! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
26-11-202021
No comments:
Post a Comment