Saturday 25 September 2021

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இயற்கை எய்தினார்.


 தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இயற்கை எய்தினார்.

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று  (25-09-2021 )சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்  வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். 

சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், பியானோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக் தேறிய பெருமைக்குரியவர்.

வடஇலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரிய தரம் வரை கற்றுத்தேறி சங்கீத,  மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் பெற்ற பின்னர், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுன்கலைக் கல்லூரியில் இசைக்கலாமணி பட்டம் பெற்று, அங்கு ஐந்து ஆண்டுகள் இசை விரிவுரையாளராகவும் பணியாற்றிவர்.

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக இருந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிருந்தார். 

இலங்கை இந்து கலாசார அமைச்சினால் இசை நடன ஆசிரியர்களுக்கு என நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை மேற்படிப்பை மேற்கொண்ட வர்ண ராமேஸ்வரன், தமிழகத்தின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான திருவாரூர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும் இசை மேசை ரி.எம். தியாகராஜன் , கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ரி.வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுத்தேறி, தமிழ்நாட்டில் பல இசைக்கச்சோிகளையும் நடத்திப் பலரதும் பாராட்டைப் பெற்றவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து  போராட்டத்திற்காக பல  விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். அதில் மாவீரர் நாளில் மட்டும் ஒலிப்பரப்பாகும் பாடலான `மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி` என்ற (ஈழப்புலவன் புதுவை இரத்தின துரையின்) பாடல், வர்ண ராமேஸ்வரானால் பாடப்பட்டது. அத்துடன் பல மாவீரர்கள் நினைவுப் பாடல்கள், போராட்ட வெற்றிச் சமர் பாடல்கள், நல்லை முருகன் பாடல்கள் என அவரால் பாடப்பட்ட பாடல்கள் பல எம்முன்னே இருக்கின்றன.



அந்த ஆலமரம் -:வர்ண.ராமேஸ்வரன்

(தீபன் விளையாட்டுக்கழகத்தின் தாயக நிதிசேகரிப்பு நிகழ்ச்சியில் வர்ண.ராமேஸ்வரன் பாடிய பாடல் )


1997 ஆம் ஆண்டு தமிழர்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் புறநானூறு பாடல்கள் பலவற்றை நவீன இசையில் இசையமைத்து (இவருடன் வேறு நபர்களையும் இணைத்து) இசைநாடகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் முன் அரங்கேற்றி பாராட்டைப் பெற்றிருந்தார். இதில் அன்று இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகள் குறித்த இசை நாடகத்தில் பாடல்களைப் பாடி நடித்திருந்தார்கள்.

கனடாவுக்கு- ரொறன்ரோவுக்குப் புலம் பெயர்ந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க, நடன அரங்கேற்றங்களுக்கு முன்னணிப் பாடகராக விளங்கினார். வர்ணம் இசைக் கல்லூரியை அவர் அங்கு உருவாக்கி பல நகரங்களில் இசை வகுப்புக்களை நடாத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வர்ணம் ஒன்லைன் இணைய இசைக்கல்லூரியை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்திருந்தார்.

அத்துடன் கனடாவில் தாயகப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் `தாய்` அமைப்புடன் இணைந்து அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல போராட்டங்களுக்கான பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது இங்க நினைவூட்டத்தக்கது.

அவர் வாழ்ந்த காலத்தில் தாயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனும் புலம் பெயர் நாட்டில் தாயகம் நோக்கிக் கனடாவில் செயற்பட்ட  தாய் அமைப்புடனும் இறுவரை நின்று போராட்டத்தை வலுவாக்கும் இசைத்துறை ஊடான தனது கடமைகளை  முடிந்தளவு செய்து தனது இசைப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்தவகையில் எம்முன்னே வாழ்ந்த அந்த தேசப் பற்றாளனை நாமும் ஒரு கணம் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவதே அவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையாகும்.

நன்றி: பதிவு இணையம்.சாதனா Saturday, September 25, 2021  கனடா

அஞ்சலி:

ஈழத்து இசைச்சொத்து இசைக்கலைமாமணி வர்ணராமேஸ்வரன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். தமிழீழம் துயிலும் இல்லம் பாடலை பாடிய தமிழீழம் தந்த ஒப்பற்ற இசைக்கலைஞரை இழந்துவிட்டோம். இசைப்பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து தனது இனிய குரல்வளத்தால், இசையால் எல்லோர் இதயங்களையும் தம்வசப்படுத்தியவர்.எம் தேசப்பாடகன் என உரிமையாய் பெருமிதம் கொண்டோம்.எத்தனையோ கனவுகளை சுமந்து கூவித்திரிந்த ஈழக்குயில் ஒன்று எமை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு ஓய்ந்து போனது.

உங்களோடு பேசிய நாட்கள்,வார்த்தைகள் எல்லாம் கண் முன் நிழலாடுகிறது.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்!

நன்றி:Face Book


No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...