SHARE

Tuesday, November 17, 2015

`மக்கள் போராடுவார்கள்`- முதல்வர் வாக்குறுதி, போராட்டம் ஒத்திவைப்பு.

டிசம்பர் 15க்கிடையில் அரசு தீர்வுகாணாவிட்டால், போராட்டம் தொடரும்: தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

இது தொடர்பில் அவர்கள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு கையளித்த கடித விபரம் வருமாறு:

தமிழ் அரசியல் கைதிகள் 

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் 

கனம் ஐயா

உண்ணாவிரதத்தை நிறுத்துவது தொடர்பாக:

தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது விடுதலையை வலியுறுத்தி, 12.10.2015 அன்று, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். இன்று புதிய மகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக கைதிகளின் விடுதலை தொடர்பாக பொறிமுறை ஒன்று வகுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்ததாக, எம்மிடம் நேரடியாகத் தெரிவித்தார். 

இதற்கிணங்க நாங்கள் எமது போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டோம். அத்துடன் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக, ஆக்கபூர்வமான அதாவது எமக்குத் திருப்தியளிக்கத்தக்க வகையிலான தீர்வு கிடைக்காத பட்சத்தில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து போராட்டத்தை ஆரம்பிப்போம் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை இரா.சம்பந்தன் அவர்களிடம் கையளித்திருந்தோம்.    

நவம்பர் 7 ஆம் திகதி வரை திருப்திகரமான தீர்வு எதுவும் கிடைக்காமையால், நாம் 8 ஆம் திகதி முதல் நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. நேற்றைய தினம் 16 ஆம் திகதி எமது உண்ணாவிரதப் போராட்டம் 9 ஆவது நாளைப் பூர்த்தி செய்திருந்தது. எம்மில் பலருடைய உடல்நிலை மிக மோசமடைந்திருந்தது. 

இந்த நிலையில் புதிய மகசின் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், எம்மை எமது போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியிருந்தார். 
வடமாகாண சபை உறுப்பினர்களும், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், புலம்பெயர் சமுதாயமும், மக்களும் ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையடையும் வரையில் போராட்டத்தைக் கொண்டு செல்வார்கள் என்று எமக்கு நம்பிக்கையோடு உறுதியளித்தார். 

பின்னதாக அமைச்சர் சுவாமிநாதன் அவர்களோடு, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் புதிய மகசின் சிறைச்சாலைக்கு வருகை தந்து, கைதிகளினால் கோரப்பட்டிருந்த புனர்வாழ்வு பெறுவதற்கான விண்ணப்பத்தை அரசு சாதகமாகப் பரிசீலிப்பதாகவும், முதற் கட்டமாக (நவம்பர் 16 ஆம் திகதியில் இருந்து) பத்து நாட்களுக்குள் முதல் தொகுதி கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியளித்தனர். 

மேலும், கைதிகள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் கட்டம் கட்டமாக, முற்றாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோர் கொள்கையளவில் இணங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தனர். 

இச்சூழ்நிலையில் கைதிகளாகிய நாம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக, கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது என உணராத பட்சத்தில், நாம் ஏதாவது ஒரு வழிமுறையில், சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.

இங்ஙனம்

தமிழ் அரசியல் கைதிகள்   

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...