பத்திரிகையாளர் முன்பாக நாம் பேச்சு நடத்துவது கிடையாது
அண்மையில் லண்டனில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்யஹய்ம், தென்னாபிரிக்கப் பிரதிநிதி மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இரகசியமாக அரங்கேற்றப்பட்டது,இக்கூட்டம் அம்பலமான வேளையில் அது பற்றிக் கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் இப்படிக்கூறினார்.
"காணிகள், அரசியல் கைதிகள் விடுவிப்பு சம்பந்தமாகத் தெற்கிலே தேவையில்லாத பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த விடயத்தை அளவுக்கு மீறி அரசியல் மயப்படுத்துகிறார்கள்.
மீண்டும் புலிகளுக்கு இடங்கொடுக்க தற்போதைய அரசு முனைகிறது என்று பொய்யாகப் பரப்புரை செய்கிறார்கள்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது சகாக்களும். இப்படி வீணான சர்ச்சைகளுக்கு இடங் கொடுக்காமல் இருப்பதற்காகவே பேச்சுக்களைத் திரை மறைவில் நடத்தியிருந்தோம்'' என்றார் அவர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி நாட்டில் நடத்தும் இரகசியக் கூட்டங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் கூறினர்.
சர்வதேச விசாரணையில் இருந்து முன்னைய ஆட்சியாளர்களையும் படைத்தரப்பையும் காப்பற்றுவதற்காக இந்தப் பேச்சுக்கள் நடைபெறுகின்றதா என்று சில கூட்டமைப் பினரும் கேள்வி எழுப்பினர். பதிலுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்குவதற்காக பேச்சு நடக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவரும் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
வெளிநாட்டில் நடந்த எமது கூட்டம் முடிவடைந்த பின்னர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தோம். எதற்காகக் கூட்டம் கூட்டப்பட்டது என அதில் கூறியிருந்தோம்.
காணிகள் விடுவிக்கப்படுதல், விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்துக் கொடுத்தல், அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பன பற்றியும் கதைக்கப்பட்டது.
அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாகப் பகிரங்கப்படுத்தப்படாத உரையாடல்களில் ஈடுபடவிருந்தோம். ஆனால் கூட்டம் பற்றிய செய்தி வெளியில் கசிந்துவிட்டது. அதனால் அது பெரிய சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது.
சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பதிலை வழங்கியுள்ளோம். ஆனால்
என்ன பேசினோம், என்ன முடிவு எடுத்தோம் என்ற முழு விடயங்களையும் நாங்கள் கூறப்போவதில்லை.
பத்திரிகையாளர் முன்பாக வைத்து நாம் பேச்சு நடத்துவது கிடையாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.கஸ்டமான, சவாலான அரசியல் சூழ்நிலைகளில் அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது - என்று மேலும் தெரிவித்தார் சுமந்திரன்.
- See more at: http://onlineuthayan.com/News_More.phpid=884254082214888187#sthash.73rwZIUs.dpuf
No comments:
Post a Comment