SHARE

Monday, October 06, 2014

கொழும்பில் இரு தமிழ் பாடசாலைகள் தேவை: பந்துலவிடம் மனோ கணேசன் கோரிக்கை

கொழும்பில் இரு தமிழ் பாடசாலைகள் தேவை: பந்துலவிடம் மனோ கணேசன் கோரிக்கை

[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 07:55.56 AM GMT ]

கொழும்பு மாநகரில் மேலதிகமாக  இரண்டு தமிழ் தேசிய பாடாசாலைகளை உருவாக்கி தருமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று காலை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனைவை தொடர்பு கொண்ட மனோ கணேசன் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஜமமு ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வளர்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், இன்னமும் முறையாக வளர்ச்சியடையாத மாகாணசபை பாடசாலைகளை, தேசிய கல்லூரிகளாக சீரமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் சில மாகாணசபை பாடசாலைகள், மத்திய அரசினால்  சுவீகரிக்கப்படுகின்றன.

இவற்றில் தற்போது சிங்கள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பின் தமிழ் பாடசாலைகளான, கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தையும், வடகொழும்பு இந்து கல்லூரியையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஜமமு தலைவர்  மனோ கணேசனின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கோரியுள்ளார்.

இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்த, அமைச்சர் இது தொடர்பில் எழுத்து மூல விபரங்களை உடன் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேற்படி கோரிக்கையையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வாழும்  258,655 தமிழர்களில் சுமார்  70 விகிதமானோர் கொழும்பு மாநகரில் வாழ்கின்றார்கள்.

கொழும்பு மாநகரில் வாழும் தமிழர்களில் 60 விகிதமானோர், அதாவது 106,325 பேர் வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தொகுதிகளில் மாத்திரம் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் பாரம்பரியமாக தென் கொழும்பு பகுதியிலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக கருதப்படும் பிரபல தேசிய தமிழ் பாடசாலைகள் அமைந்துள்ளதால், அரசாங்க பாடசாலைகளை நாடும் மத்திய வருமானம் கொண்ட தமிழ் பெற்றோர்கள் இப்பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்த்திட பெரும்பாடு படுகிறார்கள்.

எனவே தமிழர்கள் கொழும்பில் அதிகம் வாழும் வடக்கு, மத்திய கொழும்பு வலயத்தில் இன்னமும் இரண்டு தேசிய தமிழ் பாடசாலைகளை உருவாக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது வேண்டுகோளின்படி மத்திய கொழும்பின் கணபதி இந்து மகளிர் வித்தியாலயம், வடகொழும்பு இந்து வித்தியாலயம் ஆகிய மாகாணசபை பாடசாலைகளை, தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும்படி சிபார்சு செய்கின்றேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...