Sunday 31 August 2014

``புலிப்பார்வையின்`` தயாரிப்பாளருக்கு - கனகரவி

புலிப்பார்வையின் தயாரிப்பாளருக்கு ஒன்றைச் செல்லியே ஆக வேண்டும் – கனகரவி
Posted on August 12, 2014 by natrisai.com
palachandran_4
தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் “பாலச்சந்திரன்” ஒரு மிகமுக்கிய பேசுபொருளாக கொள்ளப்பட்டுள்ளார். இந்திச் சிறியவனை வைத்துப் “புலிப்பார்வை” என ஒரு திரைப்படத்தை தமிழ்நாட்டில் இருந்து எடுக்கின்றனர் என அறிந்தவுடன் தமிழர் முதலில் பெரு மகிழ்வு கொண்டனர். அதில் தமிழ்நாடு தமிழீழம் புலம்பெயர்ந்த தமிழர் என தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாத நிலமை இருந்ததை நாம் சமூக வலைத்தளங்களில் தாராளமாகக் கண்டு கொண்டோம்.

அந்தப் படம் என்ன கதை சொல்லப் போகின்றதோ தெரியவில்லை. அதன் தயாரிப்பாளர்.பாரிவேந்தன் தமிழீழம் என்ற சொல்லை மிக மலினப்படுத்திப் பேசியமை அவரால் தயாரிக்கப்படும் புலிப்பார்வை பற்றி மில்லியன் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழீழத்தை ஒருவர் கேட்டார் அவரின் பின் ஒன்றரை இலட்சம் மக்கள் சென்று மடிந்தார்கள் என அவர் வாய் கூசாமல் சொல்வதைக் கேட்கின்ற போது தமிழர் நிச்சியமாக நெஞ்சுக்குள் குமுறியிருப்பர். வயிற்றுப்பிழைப்பிற்காக உயிர்களைப் பணமாக்கும் ஒரு கீழ்த்தர நிலையில் அவரை நோக்க முடிகின்றது.

பலச்சந்திரன் விடுதலைப்போராட்டத்தின் தலைமையான பிரபாகரனின் பிள்ளை என்பதற்காக முன்னிலை பெற்றவரில்லை. அதுவும் காரணமாக இருந்தாலும் வியற்நாம் போராட்டத்தில் ஆடையின்றி ஓடிவந்த கிம்பூக்கின் ஒளிப்படம் உலகளவில் போரை நிறுத்தக் காரணமானதாக அமைந்தது. பாலச்சந்திரனின் ஒளிப்படம் போரால் முடிவிற்குவராத தீர்வை நோக்கிய போராட்டத்தின் முக்கிய கூர்முனையாக நோக்கக் கூடியதாக அமைந்திருந்நது. இதனை புரிந்து கொள்ளக் கொஞ்சம் காலமெடுக்கும் போலவே தெரியும் வேளையில்….

பாலச்சந்திரனை ஆயுதமேந்திய போராளியாய் காண்பிப்பது மிகவும் கொடிய செயலாக கொள்ள முடிகின்றது. பாரிவேந்தனுக்குச் சொல்ல வருவது இதுதான் போராட்டத்தின் தெரியாத விடயங்களைக் கற்பனையால் தொகுத்து வழங்கி வரலாற்றுத் தவறை இழைக்காதீர்கள்! உண்மையில் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ்அன்ரனி சிறு வயதில் வரியாடையை விரும்பி அணிவார். 16 அகவையிலும் அவரை வரியுடன் கண்ட பிரபாகரன் வரியைக் கழற்றி வை போடுவதானால் பயிற்சியை முடித்துவிட்டு போடு என உறுதியாகக் கூறினார். பயிற்சிசை முடித்த பின்னரே அவரை வரியுடன் காணமுடிந்தது. இதுதான் பாலச்சந்திரனுக்கும்.. நீங்கள் காட்டுவது போல பாலச்சந்திரன் ஆயுதங்களை அப்படியே கையிலள்ளி அணைத்து வைத்திருக்க அவருக்கு அனுமதியில்லை.

விடுதலைப்புலிகளில் சிறார்கள் இருந்தனர் என்பதை நான் மறுக்க விரும்பவில்லை. பிரபாகரனே 17 அகவையில் போராடப் புறப்பட்டவர். தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் பலர் சிறார்களாகப் போராட்டத்தில் இணைந்தவர்கள்… பலரிருந்தனர். ஆனால் அனைத்துலக மட்ட அழுத்தங்கள் தொடர் எச்சரிக்கை மற்றும் உள்ளக ஆராய்வுகளை அடுத்து 18 அகவைக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் இணைந்தால் அவர்கள் 24 மணிநேரத்திற்குள் பெற்றோரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவுறத்தல் கட்டாயமாக்கப்பட்டது. (இதனை புலிகளிற்கு வால் பிடிப்பதாக எவரும் எண்ணிவிட வேண்டாம்)

எனவே! இன்று போர்க்குற்றம் மற்றும் இன அழிப்புப் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாலச்சந்திரனைப்பற்றி ஏராளம் கேள்விகளிற்கு நேரில்பாரத்தவரின் பதிலில்லாத நிலையில் – வரியுடன் அவனைக் காட்டி கையில் கைத்துப்பாக்கி கனரக போர்க்கருவிகளையும் கொடுத்து வணிகம் பார்க்க முற்படுவது மிக மோசமான பிழைப்புவாதமாகவே நோக்க முடியும். அத்துடன் ஒருவர் தமிழீழம் எனப் போனார் அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சிலரும் ஆதரவு இவர்கள் என்னத்தைக் கண்டனர் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றனர் என வரலாறு தெரியாது வாய்திறப்பதை மிகவும் குறைச்சலான நிலைக்குள் வைத்தே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டு அரசியலை 13 அம் நூற்றாண்டை நோக்கியும் கொஞ்சம் பாருங்கள். அப்படியொரு மானமுள்ள தமிழன் தமிழ் நாட்டில் இன்றும் இருக்கின்றான் என்பதற்கு முத்துக்குமார் செங்கொடி போன்றவர்கள் சாட்சிக்கு எடுக்கவல்ல போற்றுதலுக்கு உரியோராய்த் தெரிகின்றனர். போராயுத விரும்பிகளாக இருந்த சிங்களப் பேரினவாதிகள் – தமிழரைப் பலியெடுத்தது விடுதலைப் புலிகள் போர்க்கருவிகளை எடுத்தபின்னர் தோற்றம் பெற்றதென யாரும் நினைத்தால், அதனைப் போன்ற அறியாமைக்கு பதில் கூற தமிழில் சொற்களைப் புதிதாக தேடித்தான் பார்க்க வேண்டும். அப்படி அறியாமையுடையோர் வாயை உண்பதற்கு மட்டும் திறக்கலாம்…. என்ன செய்வது இன்னும் நிறையவே செய்திகள் உள்ளன சொன்னால் மட்டும் நீங்கள் அப்பிடியே விழத்து திருந்தி தமிழரின் உரிமை பாதுகாப்பு பற்றிச் சிந்திப்பீர்களாக்கும்? போரிலக்கியங்கள் ஈழத்தில் ஏராளம் உண்டு. அவற்றை எடுத்து நேர்மையாக திரைப்படமாக்க இந்த உலகத்தில் இன்னும் துணிவு வரவில்லை என்பதால் தான் திரைப்பட வணிகத்திற்கு மட்டும் தமிழரின் உயிரால் எழுதப்பட்ட வரலாற்றின் கதைகளில் நுணிகளை மேய்ந்து கற்பனைகளை இணைத்து, இருண்மைக்குள் புதைகின்றீர்களாக்கும். உங்கள் கருத்து எதுவாகினும் எங்கள் உண்மைகள் இப்படி ஏராளம் கிடப்பில் கிடக்கின்றன. முடிந்தால் நேரமிருக்கும் போது தேடியறிந்து நிதானமாகப் பேசுங்கள்!

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...