Tuesday, 25 March 2014

இனப்படுகொலை விசாரணையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு விலக்களித்தது அமெரிக்கா!

விசாரணைக் காலவரையறையை வகுத்து இந்தியாவின் ஆதரவை 
உறுதிப்படுத்தியது அமெரிக்கா

[ செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014, 00:15 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவில், 'விரிவான சுதந்திர
விசாரணை'க்கான காலவரையறையை நிர்ணயித்து, இந்தியாவின் ஆதரவை
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாக
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு
விடப்படுவதற்கான இறுதியான தீர்மான வரைவு, அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் நேற்று உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதில், இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் முன்னைய வரைவுகளில் இல்லாத வகையில், நல்லிணக்க
ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப்பகுதி என்ற புதிய காலவரையறை
இறுதி வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2002 பெப்ரவரி 21ம் நாளுக்கும், 2009 மே 19ம் நாளுக்கும் இடைப்பட்ட
காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே இந்த விசாரணைகள்
மேற்கொள்ளப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவினது ஆதரவைப்
பெறுவதற்காக, இந்தியாவினால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தி, அதன் ஆதரவு
பெறப்பட்டுள்ளது என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் நடந்த முறைசாராக் கலந்துரையாடல்களில், முன்மொழியப்பட்டுள்ள விசாரணைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின்
விசாரணைக்காலத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கக் கூடாது என்று இந்தியா
வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின் முழுக்காலப்பகுதி குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற
சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு முரணான நிலைப்பாட்டை இந்தியா
கொண்டிருந்தது.

போரின் ஒரு காலப்பகுதி குறித்து மட்டும் விசாரிக்கப்படுவது நியாயமற்றது
என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார் என்றும் அந்தச்
செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...