SHARE

Tuesday, May 07, 2013

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தல்

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தல்

திகதி நிர்ணயிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாக ஜனாதிபதி வெலிஓயாவில் தெரிவிப்பு
(வெலிஓயாவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்)


வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தேர்தலை நடத்துவதற்கான வெற்றிகரமான சுபவேளையை நிர்ணயிக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார். வெலிஓயா பிரதேச மக்களுக்கு மஹாவலி காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் இது பற்றி தெரிவித்த ஜனாதிபதி மக்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

வெலிஓயா மக்களுக்கு மஹாவலி காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று வெலிஓய மஹாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டி சில்வா, ரிசாட் பதியூதின், குணரத்ன வீரக்கோன், திஸ்ஸ கரலியத்த பிரதியமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, எஸ்.எம். சந்ரசேன உட்பட பிரதியமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:

மகாவலி திட்டத்தை ஆரம்பித்த நாள் முதல் இருந்து வரும் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குப் படிப்படியாக நாம் தீர்வு பெற்றுக் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் மஹாவலி மக்களுக்கான சுபீட்சமான யுகம் உருப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் வழங்கி வரும் மானியம் மற்றும் சலுகைகளினால் எம்மால் அரிசியில் தன் னிறைவு காண முடிந்துள்ளது. அதனால் கோதுமை மா கொள்வனவு செய்வதை நாம் குறைத்து விலையிலும் சிறு மாற்றம் செய்துள்ளோம். அரிசி உணவைப் பெரும்பாலும் உட்கொள்ளுமாறு நாம் தெரிவிக்கின்றோம். டாக்டர்களின் அறிவுரையும் அதுதான். இதனால் கோதுமை மாவின் விலை அதிகரித்து அரிசியின் விலை குறைவடைந்துள்ளதைக் காண முடிகிறது.

அரசாங்கம் உரமானியம் வழங்கி வருகையில் உரமானியம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மோசமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உரமானியம் முறையாக வழங்கப்படுவதில்லை என விமர்சிக்கும் அவர்கள், மறுபுறம் இரசாயன உரம் காரணமாக விவசாயிகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இது விடயத்தில் கவனமெடுப்பதில்லை எனவும் கூறி வருகின்றனர்.

நாம் எத்தகைய விமர்சனங்கள் பிரசாரங்களுக்கு மத்தியிலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதில்லை. எனினும் கடந்த காலங்களை சிந்திக்காமல் செயற்படுபவ ர்களும் உள்ளனர்.

நாம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ஆட்சியை முன்னெடுப்ப தால்தான் ஏனைய கட்சிகளும் அரசியல் நடத்த முடிகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

யுத்த காலத்தில் வெலிஓயா மக்கள் பட்ட துயரங்களை நாம் அறிவோம். பயங்கரவாத தாக்குதலில் பெருமளவிலான மக்கள்பலியாகியுமுள்ளனர். சிறிபுர, பராக்ரமபுர உட்பட பல பகுதிகள் இரத்தக் காடாகக் காட்சியளித்ததை நாம் காண முடிந்தது. நாம் இப்பிரதேச மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். சில நாடுகள் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்ய உதவி செய்த போதும் இப்பகுதியை அபிவிருத்தி செய்வதில் அக்கறை கொள்ளவில்லை.

எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் வெளிநாடுகளின் நிதியை எதிர்பார்த்திராமல் எமது அரசாங்கத்தின் நிதியிலேயே அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இப்பகுதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இப்பகுதி மக்கள் தமது பிள்ளைகளின் கல்வியைக் கருத்திற் கொண்டு ஏனையவற்றை விட அதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ள மக்கள் அதனைத் தமது சொத்தாக பாதுகாக்க வேண்டும். அதனை விற்று விடும் சிலர் சம்பந்தமாக அறிய முடிந்தது. அவ்வாறு செயற்பட வேண்டாம்.

நாம் நாட்டைப் பாதுகாத்துள்ளோம். பிளவுபட்ட நாட்டை ஒன்றிணைந் துள்ளோம். எல்லைக் கிராமம் என்ற பெயரை இல்லாதொழித்துள்ளோம். நாடு பிளவுபடும் உடன்படிக்கையை நாம் கிழித்தெறிந்திராவிட்டால் இன்று எமக்கு நாடு இருந்திருக்காது. நாடு இரண்டாகப் பிளவுபட்டிருக்கும்.

இப்போதும் நாட்டைத் துண்டாடும் எதிர்பார்ப்பிலேயே சில சக்திகள் செயற்படுகின்றன. மீண்டும் இந்த நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை.

கடந்த நான்கு வருடங்களில் நாம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளன. இடம்பெயர்ந்து முஸ்லிம், சிங்கள மக்களையும் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்த வருகிறோம். முஸ்லிம் மக்கள் புலிகளால் 2 மணித்தியாலயங்களுக்குள் துரத்தப்பட்டு கடந்த 19 வருடங்களாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கள மக்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் வாழ்கின்றனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசியமாகும். நாடு என்ற ரீதியில் கடந்த 4 வருடங்களில் நாம் பல துறைகளையும் கட்டியெழுப் பியுள்ளோம். பல அமைச்சுக்களினூடாக தொடர்ந்தும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்வோம். அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்ரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், விவசாயிகளுக்கு இயற்கைப் பசளையை உற்பத்தி செய்யும் உபகரணங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. (ஸ)

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...