Wednesday, 11 July 2012

'இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம்'

புலையனின் புள்ளிவிபரம்!

[File Photo ENB]

'இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம்'- பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 ஜூலை, 2012 - 16:58 ஜிஎம்டி


இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், தாக்குதல், மனித உரிமை, கொலை, விடுதலைப் புலிகள், மஹிந்த ராஜபக்ஷ, போர்
மலையகத்தில் பதுளை மாவட்டம் தியதலாவ நகரில் அமைந்துள்ள இராணுவ அக்கடமியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வெளிநாட்டுத் தூதர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமொன்று நேற்று ஞாயிறுக்கிழமையும், நேற்று முன்தினமும் நடந்துள்ளது.

இங்கு பேசியிருக்கின்ற இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு அடங்கலாக சர்வதேச சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் இறுதிக்கட்டப் போர்ச் சம்பவங்கள் குறித்துதான் கவனம் செலுத்திவருவதாகக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

7 ஆயிரம் முதல் 40 ஆயிரம்பேர் வரையில் என அமைந்துள்ள இந்த எண்ணிக்கைகள் சுயாதீனமான ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் கூறப்பட்டவை என்றும் கோட்டாபய கூறியிருக்கிறார்.

ஆட்சேதங்கள் பற்றிய ஐநாவின் இலங்கைக்கான ஆய்வுக்குழுவின் அறிக்கையில், 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வரையான காலப்பகுதியில், அதாவது போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ம் திகதிக்கு சில தினங்களுக்கு முன்னர்வரை, 7,721 பேர் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 18,479 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டதாகவும் அதனைக் கருத்தில் கொள்ளாமலேயே ஐநாவின் நிபுணர்குழு 40,000 பேர் அளவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'தெளிவுபடுத்தவே சனத்தொகை கணக்கெடுப்பு'

இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருந்தபடியால்தான், அரசாங்கத்தின் சனத்தொகை புள்ளிவிபரத்துறை, வட மாகாணத்தில் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

இதன்படி, இறுதிக்கட்டப் போரின்போது, 8000க்கும் குறைவானவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் இவர்களில் விடுதலைப் புலிகளும், அவர்களால் கொல்லப்பட்ட பொதுமக்களும், மோதலின் இடைநடுவில் சிக்கிக் கொல்லப்பட்டவர்களும் அடக்கம் என்றும் கோட்டாபய கூறினார்.

'இறுதிக்கட்டப் போர் தொடங்கியபோது கிட்டத்தட்ட 25 ஆயிரம் விடுதலைப்புலிகள் இருந்தார்கள், அவர்களில் 12 ஆயிரம் பேர் வரையில் படையினரிடம் சரணடைந்துவிட்டார்கள். இதன்படி, கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்களின் எண்ணிக்கையை வைத்துப்பார்த்தால், கிட்டத்தட்ட 4600 போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் போரிடுவதற்காக விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இறுதிப்போரில் கொல்லப்பட்டதாகக்கூறப்படும் 7,896 பேரில் பெரும்பாலானவர்கள் புலிகள் தான் என்று வெளிநாட்டுத் தூதர்களின் பயிற்சி முகாமில் கோட்டாபய ராஜபக்ஷ கணக்குக் காட்டியிருக்கிறார்.

அதேபோல், 2009 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் 2,635 பேர் காணாமல் போயிருக்கிறார்கள், அவர்களில் பலர் வெளிநாடுகளுக்கு படகுகளில் சென்றுவிட்டார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை மற்ற நாடுகள் தந்து உதவவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அரசு யுனிசெஃப்பின் உதவியுடன் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும், வயது வந்தவர்கள் 1888 பேரையும், சிறார்கள் 676 பேரையும் கண்டுபிடித்துத் தருமாறு குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், காணாமல்போயுள்ள 64 வீதமான சிறார்கள் விடுதலைப் புலிகளால் படையில் சேர்க்கப்பட்டவர்கள் தான் என்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைப் படையினரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர், காணாமல்போனவர்கள் எத்தனைபேர் என்று எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய புள்ளிவிபரங்களை கோட்டாபய ராஜபக்ஷ இங்கு தெளி்வாக முன்வைக்கவில்லை.
மூலம்:பி.பி.சி.தமிழோசை

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...