SHARE

Saturday, July 14, 2012

ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி- ஜூனியர் விகடன்

நிர்மூலம் ஆக்கப்பட்ட நிமலரூபன்! அடங்காத சிங்களவர் வெறி!


ஈழத்தில் இருந்து மீண்டும் ஒரு இரத்தச் செய்தி

[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 07:57.47 AM GMT ]



மண்ணில் புதையுறப்போகும் எனது கண்களைப் பார்வை இல்லாத ஒரு தமிழ் இளைஞனுக்குப் பொருத்துங்கள். அது, மலரப்போகும் விடுதலைத் தமிழீழத்தைக் காணும் என்று நீதிமன்றத்தில் கூறிய ஒரே காரணத்துக்காக, குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து, காலில் போட்டு மிதித்துச் சிதைத்தது சிங்கள இராணுவம்.

30 ஆண்டுகளுக்கு முன் வெலிக்கடைச் சிறையில் நடந்த அவலம், இன்றும் தொடர்கிறது இன்னும் கொடூரமாய்.

2009-ம் ஆண்டு மே மாதம் சிங்கள இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போர் முற்றிலும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

அப்போது, 4,500-க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சிங்கள அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல்... விசாரணையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கடந்த 27.5.2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் 'வழக்குப் போடு அல்லது விடுதலை செய்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஒரு மாதத்துக்குள் உங்களின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்’ என்று அப்போது வாக்குறுதி தரப்பட்டது. ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், வவுனியா சிறையில் இருந்த மூன்று அரசியல் கைதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அவர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படவே இல்லை.

இது புலிகள் மத்தியில் சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சிறையில் வேறென்ன செய்ய முடியும்? தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க 32 கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

அவர்களைச் சாப்பிட வைக்க சிங்கள அதிகாரிகள் பலாத்காரத்தைப் பிரயோகித்தனர். அப்போது அனைத்துப் புலிகளும் ஒன்று சேர்ந்து சிறை அதிகாரிகளை சிறைப்பிடித்துக் கொண்டார்கள். இது சிங்களத் தரப்பை ஆத்திரம்கொள்ள வைத்தது.

உரிமைக்காகக் குரல் கொடுத்த கைதிகள் மீது சிங்கள இராணுவத்தினர் தங்கள் வெறித்தனத்தைத் தீர்த்துக்கொள்ள ஓர் 'அரிய’ வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? சிறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லி சிறைக்குள்ளே கடுமையான தாக்குதலைத் தொடங்கினர்.

தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் அனைத்துக் கைதிகளையும் மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.

மயக்க நிலையிலேயே பலரை அனுராதபுரம் சிறைக்கும் பின்னர் மகர சிறைக்கும் கொண்டு சென்றுள்ளது சிங்கள காவல்துறை.

அங்கு, தமிழ்க் கைதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர். சிங்களக் கைதிகளைக்கொண்டு தமிழ்க் கைதிகளைத் தாக்கினர்.

பூட்ஸ் கால்களை நக்கச்செய்தும் முகத்தில் எச்சிலைத் துப்பி உதைத்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்போது தமிழ் அரசியல் கைதிகள் பலரும் கை, கால்கள் முறிக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடக்கின்றனர். அவர்களுக்கு மருந்தும் கிடையாது, உணவும் கிடையாது.

இந்தத் தாக்குதலில், மகர சிறைச்சாலை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிமலரூபன் என்ற 28 வயது இளைஞர் கடந்த 4-ம் தேதி இறந்து போனார்.
இவர் வவுனியாவில் உள்ள நெளுக்குளத்தைச் சேர்ந்தவர்.

இறந்த பிறகே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் நிமலரூபன்.
மாரடைப்பு வந்து இறந்ததாக சிங்களக் காவல்துறை சொல்கிறது.

'மாரடைப்பால் இறந்தவருக்கு உடம்பெல்லாம் இரத்தக் காயம் இருக்குமா?’ என்று கேட்கிறார்கள் தமிழீழ மனித உரிமை ஆர்வலர்கள்.

அடித்து உதைக்கப்பட்ட பல கைதிகள் இன்னமும் கோமா நிலையில் இருக்கிறார்கள்.

கிருபாகரன், முத்துராஜா தில்ரூகசன், சரவணமுத்து யோகராஜா போன்ற கைதிகள் கோமா நிலையிலும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இறந்த நிமலரூபனின் உடலை, அவரது சொந்த ஊரான வவுனியாவுக்கு எடுத்துச் செல்லக்கூட காவல்துறை அனுமதிக்கவில்லை.

அவருடைய பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும்... அவரது உடலை மகர பகுதியிலேயே அடக்கம் செய்து விட்டார்கள்.

ஊசலாடிக்கொண்டு இருக்கும் மற்ற தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை யார்தான் காப்பது?

இவ்வாறு இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி: தமிழ்வின்
===============================================================

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...