துப்பாக்கிச்சூட்டில் மீனவர் பலி: சிலாபத்தில் பெரும் பதற்றம் _
வீரகேசரி இணையம் 2/15/2012 12:39:29 PM 7 எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து சிலாபம் நகரில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில்
சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் முதல் சிலாபம் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தொடர் பதற்றநிலை காணப்பட்டு வந்த நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, இச்சம்பவம் இடமடபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிலாபம், நீர்கொழும்பு மீனவர்கள் வீதியில் இறங்கி பலமணி நேரம் ஆர்ப்பாட்டம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு கண்டனம் .
தினக்குரல்Tuesday, 14 February 2012 09:44 Hits: 71 .
.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மானியம் வழங்கக் கோரியும் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை வீதிகளில் இறங்கி பலமணி நேரம் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததோடு மீன் பிடிப்புக்காக கடலுக்கும் செல்லாது தொழில் புறக்கணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் இந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் நேற்று மாலை படையினருக்கும் மீனவர்களுக்குமிடையே மோதல்களும் இடம்பெற்றது.
இதேவேளை அனைத்து மீனவர்களுக்காகவும் முன்னெடுக்கும் இவர்களின் போராட்டங்களுக்கு தாமும் ஆதரவை வழங்குவதாக வட மாகாண மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நீர்கொழும்பு குடாப்பாடு மற்றும் கடற்கரை தெரு பகுதியை சேர்ந்த மீனவர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தங்களுக்கு எரிபொருள் வழங்கக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மஹவெவ, மாரவில, வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் இறங்கிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்தும் படகுகளை வீதிகளுக்கு கொண்டு வந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக கொழும்பு சிலாபம் வீதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெரியமுல்லை பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமையினால் அந்த வழியூடாக ரயில் போக்குவரத்தும் முழுமையாக
பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்சேவை குருநாகல் வரையே நடைபெற்றது.
மீனவர்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததோடு கொச்சிக்கடை நகரில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் நேற்று மாலை வரை ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
இதேவேளை நீர்கொழும்பு பகுதிக்கு வந்த பிரதியமைச்சர் சரத்குமார மற்றும் மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் அங்கு மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். எனினும் தீர்வு கிடைக்கும்
வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையெனவும் அதுவரை கடலுக்குச் செல்லப் போவதில்லையெனவும் மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான சிறியரக படகு மீனவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்களுக்கு எரிபொருளை மானிய விலையில் வழங்குவதாக அரசாங்கம் கூறுவதனை நம்ப முடியாதெனவும் இலங்கை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க ஏற்பாட்டாளர் ஹேர்மன் குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய மட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்குவதாக வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணையை பெரும்பாலும் நம்பியிருக்கும் வட பகுதி மீனவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக யாழ். மாவட்ட கடல் தொழிலாளர் உதவிப் பணிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் கோரிக்கை கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் இதன்
அடிப்படையில் மானிய முறையில் எரிபொருள் வழங்க முடியாது போனால் இன்று ஒன்று கூடி ஆராய்ந்து மீன்பிடி நடவடிக்கைகாக இன்று கடலுக்கு செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தென்பகுதி மீனவர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் நடக்குமாக இருந்தால் அதற்கு முழு ஆதரவையும் வழங்குவோமென வடமாகாண மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அப்பகுதி மதகுருமார் பேச்சுகள் நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததையிட்டு மாலை 6 மணியின் பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கையில் படையினரும் பொலிஸாரும் இறங்கினர்.
இதற்கு பதிலடியாக மீனவர்கள் கல்வீச்சை நடத்தவே அப் பகுதியில் பெரும் பதற்றமும் மோதல் நிலையும் உருவானது.ஆர்ப்பாட்டக்காரர்களையும் அப் பகுதியை சேர்ந்தவர்களையும் படையினரும் பொலிஸாரும் தடியடி நடத்தி விரட்டவே அப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மீனவர்களுடன் சேர்ந்து படையினர் மற்றும் பொலிஸார் மீது கல்வீச்சை நடத்தினர். எங்கும் பெரும் களேபர நிலை ஏற்பட்டது.
========
இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்வு வீரகேசரி இணையம் 2/15/2012 3:28:13 PM 12
மின்சாரக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும்.
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தினால் இந்த மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின் கட்டணங்கள் பின்வரும் அடிப்படையில்அதிகரிக்கப்பட்டுள்ளன.
00 – 30 வரையான அலகுகளுக்கு 25 சதவீதமும்
31 – 60 வரையான அலகுகளுக்கு 35 சதவீதமும்
61 மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment