நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!
அன்னா அசாரே தலைமையிலான 'ஊழல் எதிர்ப்பு இந்தியா' என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான "ஜன் லோக்பால்" சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
வரலாறு காணாத மாபெரும் ஊழல்கள்
சோனியா-மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சி, வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் சிக்கியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ.1,76,000 கோடி, காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாட்டில் ரூ.70,000 கோடி, ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், ஆதர்ஷ் வீட்டுமனையில் ரூ.60,000 கோடி ஊழல், பன்னாட்டு முதலாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் நிலத்தைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்ற பேரில் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி, இரும்பு போன்ற கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடம் தாரை வார்த்ததிலும் பல லட்சம் கோடிகள் அரசின் கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு ஊழல், ஊழல் எங்கெங்கு காண்கிலும் ஊழல் என சோனியா-மன்மோகன் கும்பல் ஊழலில் திளைத்து வருகிறது.
அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பும், உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு (Global Financial Integrity - GFI) என்ற தொண்டு நிறுவனமும், மன்மோகன் கும்பலின் ஆட்சி ஆசியாவிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று அறிவித்தன. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட GFI என்ற நிறுவனம் அமெரிக்காவின் போர்டு பௌண்டேஷன் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். அன்னா அசாரே இயக்கத்தின்
தலைமையிலுள்ள குழுவினரில் பலர் இந்த நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெற்றுதான் செயல்பட்டுவருகின்றனர்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2010ஆம் ஆண்டு நடத்திய ‘ஊழல் பற்றிய உலகளாவிய மக்களின் கருத்து’ என்ற ஆய்வின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் கட்டுக்கடங்காமல் செழித்து வளர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நிதி
பரிமாற்றங்கள், புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளின்கீழ் பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக சூதாட்டக்காரர்கள் பெருமளவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் அது கூறுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது: கார்ப்ரேட் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் - சர்வதேச சட்டங்களையும், தேசிய சட்டங்களையும் புறக்கணித்தும், இரகசிய வழிமுறைகளைக் கையாண்டும் சட்ட விரோதமான முறையில் ஆண்டொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் நாடு கடந்து கடத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு என்ற நிறுவனம் வரி ஏய்ப்பின் மூலமும், கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும், சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தவறான விலை நிர்ணயித்ததன் மூலமாகவும், ஊழல் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21,300 கோடி அமெரிக்க டாலர்கள் பணம் (ரூ.9,58,500 கோடி) வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இதில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி டாலர்கள் 1991-க்குப்பின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப்பின் பதுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.
எனவே ஊழலின் அளவு பிரம்மாண்டமாக பெருகிவருவதும், வெளி நாடுகளில் பதுக்கப்படுவது அதிகரித்து வருவதும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளால் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிவிட்டது.
( மேலும் )
No comments:
Post a Comment