SHARE

Sunday, November 20, 2011

முள்ளிவாய்க்கால்



தலைப்பிடப்படாத கதை

பெரியப்பா அவசரமாக தொடர்பு கொண்டு முதல் இரண்டு முயற்சிகள் தோற்றுப் போய்விட்டன மூன்றாவது முயற்சிக்கு தங்கள் உதவி தேவை என்றுகேட்டார். தங்களுக்குச் செய்யாத உதவியா? விபரமாகச் சொல்லுங்கள் என்றேன். பதிலளித்த பெரியப்பா எனது முக்கியமான நண்பர் ஒருவர்நெடுங்காலமாக குடும்பப் பிரச்சனை ஒன்றில் சிக்குண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன். அந்தப் பிரச்சனையானது அவருக்கு ஒரு குழந்தையைப் பிரசவிக்க அவரது மனைவி மறுத்து வருகிறார் என்பதாகும்.(அல்லது கணவனோடு கூடி வாழ மனைவி மறுக்கின்றார் என்பதாகும்.) இது முற்றி அவரது மனைவி விவாகரத்துக்கோரி நிற்கின்றார்.. இப்பிரச்சனையில் தலையிட்டு குழந்தையைப் பிரசவிக்க தங்கள் உதவி தேவை என்றார். 

மேலும், சித்தப்பா இதற்கு முழு உதவியும் வழங்குவார் என உத்தரவாதமும் தந்தார்.

முடிந்தவரைக்கும் முயல்கிறேன் என்று நான் வாக்குறுதி அளித்தேன். 

இது முதலாய் அந்தப் பேதைப் பெண்ணுடன் தொடர்பு கொள்ள முயன்றேன்.இறுதியாக அவளது தத்துத் தந்தை மூலம் அத் தொடர்பு கிட்டியது.  எனது முதல் சந்திப்பில் தங்கள் குடும்பச் சச்சரவை தீர்ப்பதற்கு நான் ஒரு சமாதான நடுநிலையாளனாக பங்கு கொள்ள விரும்புகிறேன் என்பதைத் தெரியப்படுத்தினேன். கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டனர். அவ்வேளையில், விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை,இணைந்து குடும்பம் நடத்துவதே ஒரே வழி என்ற கணவனின் மற்றும் பெரியப்பா, சித்தப்பா ஆகியோரின் கூடவே என்னுடையதும் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்தேன். தத்துத்தந்தை இதை தலையாட்டி ஏற்றுக்கொண்டார். பெருந் தந்தைக்கோ இதில் பெரிதும் உடன்பாடு இருக்கவில்லை. 

தத்துத்தந்தையைப் பற்றிக்கொண்டு இந்த இணக்கப்பாட்டு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு நாள் கணவன் தன் வழக்கமான மூர்க்க சுபாவத்தால் அவளின் ஒரு கையை அறுத்தெறிந்து விட்டான். மற்றொரு நாள்  நான் கண்டறிந்து கொடுத்த, கணவனின் திடீர் நண்பன் மாடிப் படியில் இருந்து குப்புறத் தள்ளி அவளது வலது காலை உடைத்து விட்டான். இன்னொரு நாள் தன் பங்குக்கு சித்தப்பன் சமையல் அறையில் திட்டமிட்டு விசவாயுத் தீயை எரிய வைத்து அவளது கண்களைக் குருடாக்கி திருமுகத்தையும் கருக்கிவிட்டான். 

 இப்போதும் நான் அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே குழந்தைப் பேறுகாணும் முயற்சியில் உறுதியாகவே இருந்தேன். 

இத்தருணத்தில் கணவன் படுக்கைக்கு சென்றபோது,  அவளுக்கோ எதிர்ப்பதற்கு கையிருக்கவில்லை,  காலிருக்கவில்லை, கண்கள் கூட இருக்கவில்லை. கணவன் குடும்பம் நடத்தினான்.

அத்தோடு நான் விலகிவிட்டேன். 

பின்னால் அப் பேதைப் பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட போது ஒரு அதிர்ச்சியான செய்தி வந்தது, அவள் கருச்சிதைந்து காற்றோடு கலந்து விட்டாள் என்று.  

அதைத் தொடர்ந்து இத் `திருக் குழந்தை` முயற்சி, கருச்சிதைவில்  முடிந்ததற்கான காரணங்களை ஆராய்ந்த மருத்துவர் குழு, அவளின் 
கைதறிக்கப்படாமல், கால் முறிக்கப்படாமல், முகம் எரிக்கப்படாமல், விழிகள் அகல விரிந்து கிடந்திருந்தால் இது சுகப்பிரசவமாய் முடிந்திருக்கும் என 
அறிக்கை வெளியிட்டது.

கூடவே இக்கருச்சிதைப்புக் குற்றத்தைத் தண்டிக்க வேண்டுமென ஆய்ந்தறிந்து வெளியிடப்பட்ட மனித நேய ஆவணம் ஒன்று அந்தப் பேதைப் பெண் 
தன் கருவில் சிதைக்கப்பட்ட உயிருக்கு ”சமாதானம்” எனப் பெயரிடுமாறு 
அடி இடுப்பில் எழுதி வைத்திருந்ததாகக்  கண்டுபிடித்திருந்தது.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...