காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் உடலுக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி
First Published : 29 Aug 2011 10:28:49 AM IST Last Updated : 29 Aug 2011 12:00:04 PM IST
காஞ்சிபுரம், ஆக. 28: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்று கோரி காஞ்சிபுரம் தாலூகா அலுவலகம் எதிரே செங்கொடி என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஒரிக்கையை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் செங்கொடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் எங்கும் பல்வேறு பேராட்டங்கள் நடத்து வருகின்றன.
இதே போன்று காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் செங்கொடி பங்கேற்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். கைப்பையுடன் வந்த செங்கொடி, பையில் வைத்திருந்த பெட்ரோல் கேன்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவி அதே இடத்தில் கருகி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரன் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment