SHARE

Friday, February 12, 2010

கொழும்பில் எதிரணியின் ஆர்ப்பாட்டம் நேற்றுப் பெரும் களேபரத்தில் முடிந்தது!

கொழும்பு, பெப்ரவரி 11
கொழும்பு, உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் புதுக்கடையில் எதிர்க்கட்சியினர் நேற்றுக் காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது அரச ஆதரவாளர் குழுவினர் என்று கருதப்படும் ஒரு கோஷ்டியினர் திடீர்த் தாக்குதல் நடத்திய மையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் பெரும் களேபரத்தில் முடிந்தது.
பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
நாடாளுமன்றம் கலைக்கப் பட்டுள்ள நிலையில், முன் னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தின ரால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நேற்றுக் காலை ஆரம்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி அப்பகுதி எங்கும் கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக் கப்பட்டிருந்தனர்.பிறேமதாஸ சிலைக்கு அருகில் வைத்துத் தாக்குதல்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தப் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ வின் சிலைக்கு அருகில் வந்தவேளை ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் திடீரெனத் தாக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக தாமும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுக்கின்றனர் எனக் கூறிய ஆளும் கட்சி ஆதரவாளர்கள், கற்களையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பதற்றம் நிலவியது.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல் காரணமாக பலர் காயமடைந்ததுடன், உயர் நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்தன.
பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மனுத்தாக்கல் செய்வதைத்தடுப்பதற்கான முயற்சி
இந்த மோதல்கள் காரணமாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். மூன்று பொதுமக்களும், இரு பொலிஸாரும் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான முயற்சி இதுவெனவும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட காடையர் குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தம் மீது தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எதிர்க்கட்சியினர் மீதே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...