SHARE

Monday, October 06, 2014

வடக்கில் மூன்று மாவட்டங்களில் மட்டும் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

வடக்கில் மூன்று மாவட்டங்களில் மட்டும் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

06 அக்டோபர் 2014


வடக்கில் மூன்று மாவட்டங்களில் மட்டும் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு -  வட மாகாண சபையில் விவாதம்?

வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நில சுவீகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக திரட்டப்பட்ட தகவல்களினடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 3 மாவட்டங்களில் மேற்படி அளவு நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவே இவர்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான அன்டனி ஜெயநாதன் மற்றும் து.ரவிகரன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 9 ஆம் திகதி மாகாண சபையில் காணி தொடர்பிலான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில், நாம் தொடர்ச்சியாக நில சுவீகரிப்பு தொடர்பாக தகவல்களை சேகரித்து வருகின்றோம் .

இதற்கமைய முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட தகவல்களினடிப்படையில், மாந்தை கிழக்குப் பகுதியில் சுமார் 400 ஏக்கர், புதுக்குடியிருப்புப் பகுதியில் 400 ஏக்கர் மற்றும் கரைத்துறைப்பற்று பகுதியில் வெலி ஓயா 2524 ஏக்கர் உட்பட பல இடங்களில் நிலம் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மொத்தமாக 4,349 ஏக்கர் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் ஒதியமலை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் மொத்தமாக 3 ஆயிரம் ஏக்கர் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அம்பகாமம் பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் விமானப்படையின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிகின்றோம். அவை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் மாங்குளம், முறிகண்டி பகுதிகளிலும் பெருமளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அறி கின்றோம். அவை தொடர்பான தகவல்களையும் நாங்கள் திரட்டிவருகின்றோம். எனினும் இது வரை எம்மால் சேகரிக்கப்பட்ட தகவல்களினடிப்படையில் மொத்தமாக ஒட்டுசுட்டான் பகுதியில் மட்டும் 11 ஆயிரம் ஏக்கர்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களுடைய நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையும் வழங்கப்பட்ட காணிகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடர்கின்றது. எனவே இந்தத் தகவ ல்களை முழுமையான தரவுகளுடன் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றனர்.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் திரட்டப்பட்டிருக்கும் நிலம் தொடர்பான தகவல்கள் குறித்து மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தகவல் தருகையில், வலிகாமம் வடக்கு, வலிமேற்கு, வலிதென்மேற்கு, அச்சுவேலி, எழுதுமட்டுவாள், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்களுடைய நிலங்களை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை படையினர், கடற்படையினர் ஆகியோரின் தேவைகளுக்காகவே சுவீகரிக்கப்படவுள்ளதாக சுவீகரிப்பு தொடர்பான பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனடிப்படையில் வலி. வடக்கில் 6381 ஏக்கர், வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர். இதில் 250 ஏக்கர் வரையிலான நிலம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் வருகின்றது.

இதனடிப்படையில் மொத்தமாக யாழ்.குடாநாட்டில் 7,167 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. மேலும் தகவல்களை திரட்டி வருவதுடன், நிலத்திற்குச் சொந்தமான மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகியோரின் எதிர்ப்பினால், எங்கள் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை பாதுகாத்து வருகின்றோம் என்றார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் நில அபகரிப்பு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.

 அன்புபுரம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர், மன்னார் வீதியில் ஆயிரம் ஏக்கர் என மொத்தமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை விடவும் உதிரிகளாக எடுக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பிலான தகவல்களை சேகரித்து வருகின்றோம். அவற்றையும் மாகாண சபையில் சமர்ப்பிப்போம்.

இதேபோன்று பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 9 பரப்பு நிலத்தை படையினருக்கு வழங்கவுள்ளதாக கரைச்சி பிரதேச செயலர் நில உரிமையாளருக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

மேலும் அதனை கையளிக்கும் நிகழ்வு 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும்,

பிரதேச செயலர் அறிவித்துள்ளார். இவ்வாறுதான் வடக்கில் நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது தொடர்பிலும் நாங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி விரிவாகப் பேசவுள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...