SHARE

Wednesday, March 14, 2012

ஒற்றையாட்சிச் சிங்களம் ஒழிக! சுயநிர்ணய தமிழீழம் மலர்க!!


ஒற்றையாட்சிச் சிங்களம் ஒழிக! சுயநிர்ணய தமிழீழம் மலர்க!!
Sri Lanka's Killing Fields : War Crimes UnpunishedNext on Channel 4: Wednesday 14 Mar 2012 at 10.55pm(gmt)
====================================
படியுங்கள்! பரப்புங்கள்!!
“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` போர்க்குற்ற ஆவணப்படம் -2011- ஒரு மீளாய்வு http://senthanal.blogspot.com/2011/12/blog-post_21.html

பெண் போராளிகளைக் களங்கப்படுத்துவது உடன் நிறுத்தப்படவேண்டும்!

நிமிடத்திற்கு நிமிடம், தமிழ் இணைய ஊடகங்களால் நிர்வாணப்படுத்தப்படும் பெண் போராளிகள்!

சிங்களவன் செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக... மிக... அதிகமாக உள்ளது...' என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

'புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்... எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்...' என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன. அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை 'ப்ளாஷ்' தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகக் கொடூரமான ஈனச் செயலாகவே நோக்கப்படுகின்றது.

போர்க் குற்றப் படங்கள் தமிழ் மக்களுக்கான காட்சிப்படுத்தல்களுக்குரியவை அல்ல என்பதை பொறுப்பற்ற சில இணையத் தளங்கள் புரிந்து கொள்வதில்லை. கோரமான, கொடூரமான படங்களை இணைத் தளங்களில் பார்வைக்குப் பதிவு செய்வதை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும்  சிலரால் நடாத்தப்படும் இணையத் தளங்கள் தமிழ்ப் போராளிகளது கோரமாகக் கொலை செய்யப்பட்ட படங்களையும், பெண் போராளிகளது சீரழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆடைகள் அற்ற உடல்களையும் காட்சிப் பொருட்களாக்கியுள்ளன.

இந்த இணையத் தளங்களால் மின்னும் காட்சிகளாக்கப்பட்ட அந்தப் பெண் போராளி ஒருவேளை அதன் பொறுப்பாளர்களது தங்கையாக இருந்திருந்தால், தாயாக இருந்திருந்தால் இப்படித்தான் காண்பித்து நிறைவடைந்திருப்பார்களா? என சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

போர்க் குற்றத்திற்காக அடையாளப்படுத்த வேண்டிய காட்சிகளாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்களது முகங்களையாவது மறைத்திருக்க வேண்டும். நாகரீகமடைந்த ஊடகவியலாளாகள் கோரமான காட்சிகளை வண்ணமிழக்கப்பண்ணி, கறுப்பு வெள்ளையாகக் காட்சிப்படுத்துவதும் உண்டு. ஆனால், சில தமிழ் இணையங்கள் மனங்களில் எந்தவித சலனமும் இன்றி எங்கள் தேசத்தின் ஆன்மாக்களை நிர்வாணமாகவே காட்சிக்கு விடுவதில் போட்டி போடுவதைத்தான் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து மனம் கோணாமல் எங்கள் மக்களது மன வருத்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் கிடைக்கக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்களை அதற்குரிய இடங்களில் சமர்ப்பியுங்கள். உங்கள் இணையத் தளங்களில் அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவாகளது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ எங்கள் மனங்களை ரணப்படுத்துகின்றீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். எங்களில் பலர் அந்தப் படங்களில் உள்ளவர்களது இரத்த உறவுகள், தோழர்கள், பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என அத்தனை நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எங்கள் போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள். மரணித்த எங்கள் பெண் போராளிகளை நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணப்படுத்தாதீர்கள்!

- ஈழநாடு
==================
பிற்குறிப்பு:
இந்த இழிசெயலில் இறங்கியிருப்பவை  இணையங்கள் மட்டுமல்ல இனமானத் தமிழ்ச் சிங்கங்களும்தான். மேடைப்பேச்சுக்களில் இருந்து ஆவணப்படங்கள் வரை இந்த அயோக்கியத்தனம் மலிந்து கிடக்கின்றது. வை.கோவின் ஆவணப்படம் இதற்கு சிகரமாகவுள்ளது.
ஒரு ஆதாரத்துக்காக இவை தேவைப்பட்ட காலம் முடிந்துவிட்டது.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. `கற்பழிப்புக் காட்சியில் ` சுகம் காணுவது அற்ப  அரை  நிலப்பிரபுத்துவப் பண்பாடாகும்.

Monday, March 12, 2012

மக்களுக்கு கூற முடியாத சம்பந்தனின் ஜெனீவா ரகசியம்?

``மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது, அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக   ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது, ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளது.``  இரா.சம்பந்தன்.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் முயற்சி – இரா.சம்பந்தன்.
12. Mar, 2012 Categories: Srilankan News

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதப்புரைகளில் திருத்தங்களை செய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் முயற்சி
எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதனால் ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடையும் வரை அரசாங்கத்தை
சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறிய சம்பந்தன், அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை தொடர்பான விவகாரங்களை கையாள ஜெனீவாவில்
கூட்டமைப்பின் சார்பில் பிரதிநிதி ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள் தமிழ் நாளேடுகளின் பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோதே சம்பந்தன் இவ்வாறு கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழத் தேசிய கூட்டமைப்பு ஏன் பங்குகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கமளித்த சம்பந்தன் சர்வதேச
நாடுகளினுடைய ஆலோசணைகளை மீறி செயற்பட முடியாது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் மற்றும் சர்வதேச கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தங்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய சம்பந்தன் அதன் ஓரு கட்டமாகவே அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சென்றிருக்கலாம் என தமிழ் மக்களில் அனேகமானவர்கள் கூறுவது நியாயமானதுதான் என்று தெரிவித்த அவர், அவர்களுடைய உணர்வுகளை கூட்டமைப்பு மதிக்கின்றது என்றும் தெரிவித்தார். ஆனால் மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது என்று குறிப்பிட்ட அவர், அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது என்றும், ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கும் என்று
கூறமுடியாது என்று தெரிவிக்கும் சம்பந்தன், ஆனாலும் முதன் முறையாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறு வேண்டிய
கடப்பாடு ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இவ்வாறான ஒரு இடத்தில் இருந்துதான் தமிழர்தரப்பு மேலும் பல முன்னேற்றகரமான
செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மீது உள்ள கோபங்களை
உடனடியாக தீர்ப்பதற்கு மனித உரிமைச் சபையின் கூட்டத்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.

அதற்கு மேலும் சில நகர்வுகள் தேவைப்படுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். அதேவேளை இலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளை பிளவு
படுத்தியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவு படுத்த அரசாங்கம் முயற்சித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனாலேயே தமிழ்
தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஒரேயொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான பியசேனவை அரசாங்கம் களவாடியதாக குற்றமச்hட்டிய
சம்பந்தன், அத்துடன் நின்றுவிடாது தொடர்ந்தும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி: தீபம் தொலைக்காட்சி இணையம்.

Saturday, March 10, 2012

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு

பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு; வரணியில் இறந்த சிறுமி தொடர்ந்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளானார்

வரணி இடைக்குறிச்சியில் தற்கொலை செய்தார் என்று கூறப்படும் சிறுமி கடந்த மூன்று வருடங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வன்னியில் நடந்த இறுதிப் போரில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். வறுமை காரணமாக தாயார் சிறுமியை ஹற்றனில் கிறிஸ்தவ மதகுரு இயக்கி வந்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த இல்லத்தில் சிறுமியைச் சேர்க்கும் போது அவருக்கு வயது 15 என்று அவரது தாயார் தெரிவித்தார்.

ஹற்றன் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த போது சிறுமி பாலியல் ரீதியாகத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் கருத்தரித்தார். பின்னர் அவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இந்தச் சிறுமி மீதான துஸ்பிரயோகம் தெரிய வந்ததை அடுத்து மதகுரு நடத்தி வந்த சிறுவர் இல்லம் அதிகாரிகளால் மூடப்பட்டது என்றும்
தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே அந்த மதகுரு இடைக்குறிச்சியில் தனது இல்லத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் இறந்து போனதற்கும் மதகுருவே பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறுமியின் தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

வரணியில் தங்கியிருந்தபோது திருமணமான ஆண் ஒருவருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டது என்றும் அது கைகூடாத நிலையிலேயே
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

 சிறுமியை சக பெண்ணாக மதிக்காமல் காமப் பொருளாகப் பார்க்கப்பட்டமையும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தமையும் உரிய அன்பு
கிடைக்காமையுமே சிறுமியின் இந்த துயர முடிவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, போரின் பின்னர் வடக்கில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் இது வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச்
சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

இதேகாலப் பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு இந்த
எண்ணிக்கை 102 ஆக இருந்து. 2011ஆம் ஆண்டு இது 182 ஆக அதிகரித்திருக்கின்றது.

பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இப்போது இடம்பெற ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என மருத்துவர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.

"சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச்
செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார் அவர்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள்
அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

நன்றி: யாழ் உதயன்

Wednesday, March 07, 2012

சிங்களமே, செங்களமாடிய புலிப் பெண் போராளிகளை விடுதலை செய்!

சர்வதேசப் பெண்கள் தினம்
மார்ச் 8 2012


சிங்களமே,
தமிழினி உள்ளிட்ட யுத்தக் கைதிகளானஅனைத்து விடுதலைப் புலிப் பெண் போராளிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

 == புதிய ஈழப்புரட்சியாளர்கள் ==

சிறுமி லக்சினியின் கோரக்கொலை, EPDP இன் மற்றொரு கொடுமை!



வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை; உடல்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிப்பு: ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர் கைது

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து ஏற்படாமல் காப்பாற்றியதுடன் அவரைக் கைது செய்தனர். 
 
 கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்று நெடுந்தீவு மக்கள் கூறுகின்றனர். ஆனால் வழக்கம்போல, சந்தேகநபர் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
 ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையில் மூன்றாவது சந்தேகநபர் ஜெகதீஸ்வரன். ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னணித் தளபதியாக இருந்தவரான நெப்போலியனின் வலதுகரமாகச் செயற்பட்டவர் என்றும் நெடுந்தீவு வாழ் மக்கள் கூறினர். 
 
மூன்று மாதங்களுக்கு முன்னர் "பிஸ்ரல்'' துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்று கடற்படையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த முறைப்பாடு
தொடர்பில் ஒவ்வொரு வாரமும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் இவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

 கடந்த இரு நாள்களுக்கு முன்னும் வேறு இரு சிறுமிகளை தனியிடத்துக்கு தவறான நோக்கத்துடன் அணுகினார் என்று இவர் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இவர் லக்சினியை மிருகத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை அங்கு கொண்டுசென்று விடுவதாகக் கூறித் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றே இவர் இக் கொடூரத்தைப் புரிந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடயம் தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த நெடுந்தீவு மக்கள் நெடுந்தீவு பத்தாம் வட்டாரத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டுக்குள் புகுந்து அவரை நையப்புடைத்தனர். தாக்கியபடியே கடற்கரை நோக்கி ஜெகதீஸ்வரனை அவர்கள் இழுத்துச்சென்ற போது இடைமறித்த கடற்படையினரும்
பொலிஸாரும் அவரைக் காப்பாற்றிக் கைது செய்தனர். (காணொளி)

 "இல்லையேல் நாங்கள் அந்த .......யை அடித்தே கொன்றிருப்போம்'' என்றார் நெடுந்தீவு வாசி ஒருவர்.

 சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலையிலேயே சென்றுவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தினார்.

உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெடுந்தீவு மயானத்தில் நேற்றைய தினமே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது.

சந்தேகநபர் நேற்று மாலை நெடுந்தீவுப் பொலிஸாரால் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
யாழ் உதயன்

மேலதிக செய்திகள்

* நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் 12வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.  நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா இந்த  மாணவி நேற்று காலையில் கடைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் அவரை பெற்றோர் தேடிய போது கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலத்திற்கு அருகில் வெற்று சாராயப் போத்தல்கள் காணப்பட்டன. அத்துடன் இந்தச் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் இந்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது.நெடுந்தீவு சிறிலங்கா படையினரினதும், ஈ.பி.டி.பியினரதும் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
============
* கொலை வழக்கின் சந்தேக நபரான 31 வயதான கந்தசாமி ஜேகதீஸ்வரன் (கிருபா) என்னும் நபரை நெடுந்தீவு காவல்துறையினர் நேற்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மேற்படி வழக்கினை விசாரணக்கு எடுத்துக்கொண்ட நெடுந்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.உதயகுமார் வழக்கினை விசாரணை நடத்திய பின்பு எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Sunday, March 04, 2012

வெளிச்சத்தில் ஐ.நா.குறித்த மாயைகள்

ஐ.நா.மனித உரிமைப் பேரவைப் பிரேரணை இலங்கைக்கு சார்பான பிரேரணையே!

அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையைக் காப்பாற்றும் பிரேரணையே!
இரா.துரைரத்தினம்
அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்பதுதான்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரச்சாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா மூக்குடைபடப்போகிறது என அற்பசொற்ப ஆசையில் இருக்கும் எங்கள் தமிழ் மக்களுக்கு நான் சொல்லும் விடயம் கசப்பானதாக இருக்கலாம்.

ஏனெனில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் அனுப்புகிறது என நம்பியதைப்போல இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு மாயைக்குள் அமெரிக்காவை மலைபோல் நம்பியிருப்பதை உணர முடிகிறது.

அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை விடுதலைப்புலிகளை காப்பாற்ற தான் கப்பல் அனுப்ப போவதாக அமெரிக்கா சொன்னதாக நான்
கேள்விப்படவில்லை. ஆனால் தமிழர்கள் சிலர்தான் அப்படி ஒரு கதையை எழுப்பிவிட்டு அதை மலைபோல நம்பி இறுதியில் மண்கவ்வினார்கள்.
அதேபோல ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா வெட்டி வீழ்த்தப்போகிறது, பண்ணிப்படைக்கப்போகிறது என வருகின்ற செய்திகளைப்பார்த்து நிட்சயம் தமிழ் மக்கள் மலையளவு நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானது என அமெரிக்காவோ அல்லது இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கும் நாடுகளோ சொல்லவில்லை.

அமெரிக்காவும் கனடாவும் ஒஸ்ரேலியாவும் தென் ஆபிரிக்காவும் சில விஷயங்களைத் சிறிலங்காவுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றன.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரப்போகிற தீர்மானம் எத்தகையது என்பதனை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாம் கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால்
நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை அவர்கள் தெளிவபடுத்தியிருக்கிறார்கள். தாம் இலங்கை தொடர்பாக கோரப்போவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையோ அல்லது மனித உரிமை
விசாரணையோ அல்ல என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட  நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு  கோரப்போகிறோம் என்பதனையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிறிலங்காவுக்கு எதிரானதா?
அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா நேசநாடு ஒன்றோ கொண்டுவர இருக்கும் பிரேரணையில் கோரியிருப்பது  நல்லிணக்க ஆணைக்குழு கூறியிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்பதுதான். நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் எவையும் சிறிலங்கா அரசுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரானதோ அல்ல. அப்படி இருக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறுவது சிறிலங்காவுக்கு எதிரான
பிரேரணை என எப்படி கொள்ள முடியும்?

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச படிப்பினைகள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை  அமைத்தன் நோக்கமும், நல்லிணக்க ஆணைக்குழுவின் இலக்கும்.

அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை சிறிலங்காவுக்கு எதிரானதா அல்லது சிறிலங்காவை காப்பாற்றுவதற்காகவா என்பதை புரிந்து கொள்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொண்டால் போதும். இது மிக இலகுவானதாகும்.

சிறிலங்கா போர்க்குற்றத்தைப் புரிந்ததாக சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த நிபுணர்குழு அறிக்கை வெளியானதையடுத்து, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையில் தாம் சிக்கிவிடலாம் என்ற அச்சத்தில் அதிலிருந்து தப்புவதற்காகவும், சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காகவும் மகிந்த ராசபக்ச நியமித்த ஆணைக்குழுதான் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.

தனக்கு மிகவும் நெருக்கமானவர்களையே இந்த ஆணைக்குழுவில் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம் மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றுவதாகும்.

அந்த இலக்கை மிகக்கச்சிதமாக நல்லிணக்க ஆணைக்குழு நிறைவேற்றியிருந்தது.  இறுதிப் போரின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை
பாராட்டிதுடன் பொதுமக்கள் இழப்பிற்கு சிறிலங்கா இராணுவம் காரணமல்ல என்ற நற்சான்றிதழையும் வழங்கியிருந்தது. இழப்புக்கள் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கருதினால் உள்நாட்டில் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்திருந்திருந்தது. சர்வதேச
விசாரணையை நல்லிணக்க ஆணைக்குழு முற்றாக நிராகரித்திருந்தது.

ஆகவே நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் அதன் பரிந்துரைகள் என்பதும் முழுக்க முழுக்க மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும். மகிந்த ராசபக்ச அரசை காப்பாற்றுவதற்காக மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் பிரேரணை எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை என்று சொல்ல முடியும்?

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னால் அல்லது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என கோரும் பிரேரணையை அமெரிக்காவோ அல்லது அதன் நேசநாடுகளோ கொண்டுவந்தால் அதை
இலங்கைக்கு எதிரான பிரேரணை என்று கூற முடியும். ஆனால் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையோ மகிந்த ராசபக்சவின் அரசை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும்.

எனவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவருகிறது என்ற பிரசாரங்களும், அதற்காக இலங்கை எடுத்து வரும் ஆரவார பிரசாரங்களும் அமெரிக்கா, சிறிலங்கா என்ற நண்பர்களின் கூட்டு நாடகமாகும்.

இந்த பிரேரணையை சிறிலங்கா ஏன் தனக்கு எதிரான பிரேரணை என பிரசாரம் செய்கிறது?
அமெரிக்கா இந்த பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றுவதால் மகிந்த இராசபக்ச தலைமையிலான அரசுக்கு ஒரு துளி கூட ஆபத்தோ, நட்டமோ, நெருக்கடியோ ஏற்படப்போவதில்லை. அந்த பிரேரணை வெறும் செயலற்ற பிரேரணையாகவே மாறும். மறுபுறத்தில் சிறிலங்காவை பாராட்டி ஊக்குவிக்கின்ற பிரேரணையாக கூட மாற்றப்பட்டு அது நிறைவேற்றப்படலாம்.

இரண்டு காரணங்களுக்காக சிறிலங்கா இந்த பிரேரணையை தனக்கு எதிரானது என காட்ட முற்பட்டிருக்கிறது.

ஒன்று: உள்நாட்டில் விலைவாசி ஏற்றத்தால் நாட்டுமக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழக் கூடிய அபாயகரமான கட்டம் காணப்படுகிறது. அரசுக்கு எதிரான மக்களின் மனநிலைகளை மாற்ற வேண்டுமாயின் சிங்கள மக்களின் உணர்வுகளை தட்டிவிட்டு வெற்றிகாண வேண்டும். கடந்த காலங்களில் யுத்தவெற்றிகளை காட்டி சிறிலங்கா அரசாங்கம் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வந்தது. போர்வெற்றியை காட்டி அந்த மாயைக்குள் வைத்திருந்ததால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடிந்தது.

ஆனால் அந்த போர் வெற்றிமாயைகள் கலைந்து மக்கள் விலைவாசி ஏற்றம் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் நாடு சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள வேண்டும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என மக்களை திசை திருப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இதற்காகவே அரசாங்கத்திற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக
நாடுகளினால் தமது நாட்டிற்கு நெருக்கடி வந்திருப்பதாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறது.

இரண்டு: போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தனது நாட்டிற்கு எதிராக மேற்குலக நாடுகள் பிரேரணையை கொண்டுவருவதாக பிரசாரம் செய்து வருகிறது.

அமெரிக்காவோ அல்லது மேற்குலக நாடுகளோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என எண்ணியிருந்தால் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எண்ணியிருந்தால் ஆகக்குறைந்தது ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும்
பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரேரணையை கொண்டு வந்திருக்க வேண்டும்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறுவதன் உண்மையான பக்கம் என்ன என்றால் சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என மகிந்த அரசை காப்பாற்ற
முற்பட்டிருக்கிறது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த போது தமிழ் மக்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அதனை நிராகரித்திருந்தன. உள்ளுரில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தன.
தமிழ் மக்களாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்த மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதா என சிறிலங்கா அரசாங்கம் ஏங்கியிருந்த வேளையில் அதற்கு கைகொடுப்பதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே அமெரிக்கா இந்த நாடகத்தை ஆடுகிறது. சிறிலங்கா நீதிவிசாரணைகளை மேற்கொள்ளும் மனித உரிமையை பேணும்
ஜனநாயக நாடு என்ற அங்கீகாரத்தை சர்வதேச மன்றத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் மேற்கொள்ளும் நாடகம்தான் இது.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை அமெரிக்காவுக்கு இருந்திருக்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்திருக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் நி்புணர்குழு அறிக்கையைத்தான்.

இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் வருகிறது. தங்கத்தாம்பாழத்தில்தமிழீழத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பெற்றுத்தரப்போகின்றன என மாயைக்குள் தமிழ் மக்களை வைத்திருந்தார்களோ அதே போன்றுதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்க பிரேரணை கொண்டுவருகிறது என பிரசாரத்தை ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன. முக்கியமாக தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா கொண்டுவரப்போவது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல என்பதே உண்மை.

இரா.துரைரத்தினம்

நன்றி தினக்கதிர் இணையம் Published on March 1, 2012-9:13 am  

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...