Saturday, 10 March 2012

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு

பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு; வரணியில் இறந்த சிறுமி தொடர்ந்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளானார்

வரணி இடைக்குறிச்சியில் தற்கொலை செய்தார் என்று கூறப்படும் சிறுமி கடந்த மூன்று வருடங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வன்னியில் நடந்த இறுதிப் போரில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். வறுமை காரணமாக தாயார் சிறுமியை ஹற்றனில் கிறிஸ்தவ மதகுரு இயக்கி வந்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த இல்லத்தில் சிறுமியைச் சேர்க்கும் போது அவருக்கு வயது 15 என்று அவரது தாயார் தெரிவித்தார்.

ஹற்றன் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த போது சிறுமி பாலியல் ரீதியாகத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் கருத்தரித்தார். பின்னர் அவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இந்தச் சிறுமி மீதான துஸ்பிரயோகம் தெரிய வந்ததை அடுத்து மதகுரு நடத்தி வந்த சிறுவர் இல்லம் அதிகாரிகளால் மூடப்பட்டது என்றும்
தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே அந்த மதகுரு இடைக்குறிச்சியில் தனது இல்லத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் இறந்து போனதற்கும் மதகுருவே பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறுமியின் தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

வரணியில் தங்கியிருந்தபோது திருமணமான ஆண் ஒருவருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டது என்றும் அது கைகூடாத நிலையிலேயே
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

 சிறுமியை சக பெண்ணாக மதிக்காமல் காமப் பொருளாகப் பார்க்கப்பட்டமையும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தமையும் உரிய அன்பு
கிடைக்காமையுமே சிறுமியின் இந்த துயர முடிவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, போரின் பின்னர் வடக்கில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் இது வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச்
சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

இதேகாலப் பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு இந்த
எண்ணிக்கை 102 ஆக இருந்து. 2011ஆம் ஆண்டு இது 182 ஆக அதிகரித்திருக்கின்றது.

பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இப்போது இடம்பெற ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என மருத்துவர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.

"சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச்
செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார் அவர்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள்
அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

நன்றி: யாழ் உதயன்

No comments:

Post a Comment