SHARE

Monday, December 08, 2025

இலங்கையில் புவி நடுக்கம் -புலமைசார் விளக்கம்


இலங்கையில் புவி நடுக்கம் -புலமைசார் விளக்கம்

நான் இலங்கையின் புவி நடுக்கம் தொடர்பான சாத்தியத் தன்மை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் பதிவு ஒன்றினை இட்டிருந்தேன்.

அது தொடர்பாக ஒரு சிலர் அறிவியல் ஆதாரமற்று விமர்சிக்கின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. பொதுவாக ஒரு கருத்து தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனம் எப்பொழுதும் வரவேற்கக் கூடியது. ஆனால் அது வெறும் வாய்ச் சொல்லில் இருக்காமல் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு இணைந்து இருப்பது தான் விரும்பத்தக்கது.
மனதில் சில காழ்ப்புணர்வுகளை வைத்துக்கொண்டு எழுந்தமானமாக விமர்சிப்பது கற்றோர் என்று கூறுவோருக்கு அவ்வளவு பொருத்தம் இல்லாதது.
மிக நீண்ட காலமாக புவியியல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட புவிநடுக்க வலயங்கள், எரிமலை வலயங்கள், கவசத்தகட்டு எல்லைகள் போன்றவற்றினை மட்டும் கருத்தில் கொண்டு, ஆய்வு ஆதாரங்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முடிவுகளினடிப்படையிலான எந்தவிதமான இற்றைப்படுத்தலும் இல்லாமல் அல்லது ஆராய்ச்சி கட்டுரைகளை வாசித்தறியாமல் சாதாரண மனிதர்கள் போல ஒரு பொது விமர்சனத்தை முன்வைப்பது கற்றோருக்கு???????? ஏற்புடையதல்ல.
அத்தகைய விமர்சனங்களை முன்வைப்போர் கூறும் பொய்யான கருத்துக்கள் உங்களைப் பிழையாக வழிநடத்தும் என்பதனால் அது தொடர்பான சில கருத்துக்களை ஆதாரங்களோடு மறுக்கின்றேன்.
1. இலங்கைக்கு புவி நடுக்க வாய்ப்பே இல்லை:
என்னுடைய பதில்: இலங்கை 1615 ஏப்ரல் 14 ம் திகதி ( ஒல்லாந்தர் காலத்தில்) கொழும்பு துறைமுகத்தை அண்மித்து பெரிய புவிநடுக்கத்தை அனுபவித்துள்ளது. இதனால் 2000பேர் இறந்துள்ளனர். அதன் பின்னரும் சிறிய அளவிலான பல நூற்றுக்கணக்கான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.( ஆய்வுக்கட்டுரைகள் ஆதாரமாக இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் Screen shot பிரதிகளும் இணைத்துள்ளேன்)
2. இலங்கைக்கு புவிநடுக்க வாய்ப்பு உள்ளதென நான் தான் முதன்முதலில் கூறுகின்றேன்.

என்னுடைய பதில்: பலர் பல காலமாக இலங்கைக்கு புவிநடுக்க அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். இலங்கையின் மிக முக்கியமான புவிச்சரிதவியல் பேராசிரியர் அதுல சேனரத்ன இதனைப் பல காலமாக கூறி வருகின்றார். அவர் கடந்த 2023 இலேயே எச்சரித்துள்ளார்.
( The Morning News Paper Article)
ஆதாரம் இணைத்துள்ளேன்.
3. கவசத்தகட்டு எல்லைகளில் தான் புவி நடுக்கம் நிகழும். இலங்கை இந்தோ ஆசியக் கவசத்தகட்டின் மையத்தில் மையத்தில் உள்ளதனால் புவிநடுக்க வாய்ப்பு இல்லை.
என்னுடைய பதில்: கடந்த 100 ஆண்டுகளில் 47% மான நில நடுக்கங்கள் தகடுகளின் விளிம்புகளில் இல்லாமல் உட்பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளன. இதற்கு தகடுகளுக்குள்ளான சிறு தகடுகளின் விருத்தியே( Intra Plate Development) பிரதான காரணம். இதனைப் பற்றிய தெளிவிருந்தால் புவி நடுக்கம் பற்றிய அமைவிடத் தெளிவு இருந்திருக்கும்.
4. புவியியலில் கவசத்தகட்டு எல்லைகளில் தான் புவி நடுக்கம் நிகழும் என படித்தேன். படிப்பித்தேன். இலங்கையில் நிகழாது.
எனது பதில்: புவியியல் பாடத்திட்டத்தில் புவிக்கவசத்தகட்டு எல்லைகளில் அல்லது விளிம்புகளில் அதிக அளவிலான நிலநடுக்கம் நிகழும் என்று தான் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் தகடுகளின் உட்பகுதிகளில் நிகழாது என எவ்விடத்திலும் கூறப்படவில்லை.
5. அனர்த்த விழிப்பூட்டல் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து:
எனது பதில்: ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு அறிவியல் தொடர்பான கருத்து வெளியிட்டால் அதனை ஆதார பூர்வமாக அறிவியல் அடிப்படையில் தான் நிராகரிக்க வேண்டுமே தவிர முற்றிலும் பொருத்தமேயில்லாமல் பொறாமையும், காழ்ப்புணர்வும், வஞ்சக எண்ணமும் கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான கருத்து என திரிபு படுத்துவது தவறானது.
6. அடிப்படை அறிவற்ற கருத்தே இலங்கைக்கு புவி நடுக்கம் பற்றிய கருத்து.
எனது பதில்: எனது கல்வித் தகுதி பற்றி நான் கூறுவது முறையல்ல. ஆனாலும் கல்வித்தகுதி குறிப்பாக எனது கலாநிதிப் பட்டத்தை நான் எந்தத் துறையில் செய்தேன்?, எப்போது பூர்த்தி செய்தேன்?, எங்கே பூர்த்தி செய்தேன்?, யார் என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளர்கள்? எவை எனது ஆய்வுப்புலம்? எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளேன்? எத்தனை ஆய்வு நூல்கள் எழுதியுள்ளேன்? எத்தனை விருதுகள் பெற்றுள்ளேன்? எந்த வயதில் பல்கலைக்கழக ஆசிரியர் பணியில் இணைந்தேன் என்பது போன்ற விபரங்களை எனது பல்கலைக்கழக இணைய தளத்தில் யாரும் பாரக்கலாம்.
" கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே தவிர, கருத்துக்களைக் காழ்ப்புணர்வு கொண்டு கறைப்படுத்தக்கூடாது".
என் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில், அறிவியல் சார்ந்த விவாதத்தில் போதுமான ஆதாரங்களோடு முன்வைக்க தயாராகவுள்ளேன்.
இறுதியாக:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.(குறள்: 504)

நாகமுத்து பிரதீபராஜா

08.12.2025 திங்கட் கிழமை இரவு 10.00 மணி

No comments:

Post a Comment

இலங்கையில் புவி நடுக்கம் -புலமைசார் விளக்கம்

இலங்கையில் புவி நடுக்கம் -புலமைசார் விளக்கம் நா ன் இலங்கையின் புவி நடுக்கம் தொடர்பான சாத்தியத் தன்மை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் பதிவு ஒ...