கிழக்கில் மலையகக் குரல்
எப்போதெல்லாம் அதிகாரத்தின் பிடியிலிருந்து மக்கள் விடுபடுகிறார்களோ அப்போதொல்லாம் அவர்கள் சுதந்திர உணர்வு பெறுகிறார்கள். மேலும் சுயமாக சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள், இதன் பொருட்டு அமைப்பாக்கியும் கொள்கிறார்கள். இத்தகைய நிகழ்வானது உலகு தழுவியும் உள்நாடு தழுவியும் நிகழ்கிறது. புவியியலில் உலகின் தட்ப வெப்ப நிலை மாற்ற (Global Warming- Climate Change) எதிர்ப்பியக்கம், அரசியலில் பாலஸ்தீன ஆதரவு இயக்கம், இலங்கையில் அரகளைய ஆட்சிக் கவிழ்ப்பு இயக்கம், இவையெல்லாவற்றிலும் இத் தன்னியல்பான போக்கையே காண்கிறோம். இத்தகைய ஒரு உலகளாவிய மக்கள் இயக்கம் வீச்சுடன் செயற்பட்டு வருகிறது. இதுபோலத்தான் டிட்வா புயல் அனர்த்தத்திலும் இலங்கையில் மக்கள் செயற்பட்டு வருகிறார்கள்.அபரிமித உற்பத்தி உருவாக்கிய உலகின் தட்ப வெப்ப நிலை மாற்றத்துடன், இலங்கை அடங்கலாக, அண்மையில் ஆசியப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட அனர்த்தங்கள் நேரடித் தொடர்புடையவை என்பதை பூகோள விஞ்ஞான ஆய்வுகள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டன.இதனால் இவ் அனர்த்தங்களில் இருந்து மனிதகுலம் விடுபடுவதும், தான் வாழ்வதற்குரிய ஒரேயொரு பூமிக்கிரகத்தைப் பாதுகாப்பதுமான அரசியல் கடமையை மனிதகுலம் சுமந்துள்ளது.அதேவேளை உடனடிக் கடமைகளாக இவ் அனர்த்தங்களை எதிர்கொண்டு வாழ்வைக் கட்டமைத்து நகர்கின்ற பணியும் இணைகின்றது.தன்னியல்பான மக்கள் அமைப்புகள் இதற்கே முயல்கின்றன. அவற்றை ஆதரித்து ஊக்குவிப்பது அத்தியாவசியக் கடமையாகும்.
'வேள்வி' வெள்ள நிவாரணப் பணிக்கான உதவி கோரல்.
இலங்கையில் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் வீசிய சூறாவளியினால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணப் பணிகள் தொடர்பாக:
வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஒர் சமூக நிறுவனமாகும். எமது ஒன்றியமானது சமூக, பொருளாதார, கலாச்சார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.
எமது ஒன்றியமானது பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி வலையமைப்பின் ஒரு சுயாதீன அங்கமாக தேசிய ரீதியாக செயற்பட்டு வருகின்றது. இவ் வலையமைப்பின் ஊடாக மலையக மக்கள், சிங்கள மக்கள், தழிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து சமூக,பொருளாதார, கலாச்சார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மேம்படுத்தல், சமூக ஒருமைப்பாடு என பல்வேறு சமூக நல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிலையில் இலங்கையில் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையக பகுதிகளில் பல உயிர் இழப்புகளும், வீடு சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், விவசாயம் மற்றும் தொழில் துறைகளும் முற்றாக பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் கஸ்டமான நிலையில் இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளார்கள்.
இது போன்று மகாவெலி ஆறு பெருக்கெடுத்ததால் திருகோணமலை, மன்னார், பொலனறுவை போன்ற பல மாவட்டங்களைச் சார்ந்த பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தற்போது இவர்களுக்கான உணவு, உடை, உறையுள், குடி நீர், மருத்துவம், சுகாதார தேவைகள் என பல உடனடித் தேவைகள் காணப்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு நிவாரண உதவியினை மேற்கொள்வதற்காக எமது வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் கிராம மட்டத்தில் இயங்கும் எமது வலையமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அவர்களின் கிராமங்களிலுள்ள மத ஸ்தலங்கள், அரச நிறுவனங்கள், பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கிராமம் கிராமாக உடனடி நிவாரண பொருட் சேகரிப்பு செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இந் நிவாரண உதவிச் செயற்பாடுகள் ஊடாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொதுக் குழுக்கள் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக ஒவ்வொரு கிராமமாக இந் நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இச் சூறாவளியால் மறைமுகமாக அம்பாறை மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் அனர்த்தத்தால் ஏற்பட்ட மின் தடை காரணமாக ஒரு வாரத்திற்கு மேலாக அம்பாறை கரையோர பிரதேசங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் பலரின் தொழில்கள் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக மிகவும் கஸ்டப்படுகின்றார்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், விவசாயிகள், சிறு தொழிலாளர்கள் என பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உதவிகளும் தற்போது தேவைப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறு, இச் சூழ்நிலையில் இவ் அனத்த நிவாரணப்பணியில் ஈடுபடும் இதர பல நிறுவனங்களோடு இணைந்து வேள்வி அமைப்பும் செயற்படுகின்றது.
தற்போது வேள்வியின் நிவாரண பணி இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கையை தொடர்வதற்கும், பெண்களுக்கே உரித்தான சுகாதார தேவைகளை நோக்கி எமது பணி தொடர்கிறது.
இச் சமூகப்பணிக்கு தயவு கூர்ந்து தாராளமனதுடன் நிதி, பொருள், மற்றும் சரீர உதவிகளை வழங்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புக்கு:
தவிசாளர்
moreliffa72@gmail.com
velvieastsrilanka@gmail.com
------------------------------------------------------
நிதி உதவிக்கு- வேள்வி வங்கி கணக்கு:
Hatton National Bank
Velvi Women's Development Organization
A/C 091020433556
Branch No:91
Kalmunai
Sri Lanka
தாழ்மையுடன்
மு.றெலிபா பேகம்,
தவிசாளர்
வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம்.
குறிப்பு: நிதி செலவிடல்,மற்றும் வேள்வி நடவடிக்கைகளின் விபர அறிக்கை வேண்டுவோருக்கு வழங்கி வைக்கப்படும்.
-----------------------------------------------------------------------------
| கல்முனை-சாய்ந்தமருது பள்ளிவாசலின் டித்வா புயல் நிவாரணப்பணி |
------------------------------------------------------------------------------------------------------
மலையக தொழிலாளிகளின் சம்பள உயர்வை பரிபூரணமாக வரவேற்கிறோம் - எதிர்ப்பவர்களை கண்டிக்கின்றோம்!!
கிழக்கிலிருந்து வேள்வி பெண்கள் அமைப்பினரின் குரல்

No comments:
Post a Comment