SHARE

Thursday, April 17, 2025

பலஸ்தீனர்களின் பாரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ள காசா

 


🟠பலஸ்தீனர்களின் பாரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ள காசா
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் 23 பேர் பலி; உயிரிழப்பு 51,000 ஆக அதிகரிப்பு

தினகரன் April 17, 2025 

காசா பகுதி பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கான ‘பாரிய மனிதப் புதைகுழியாக’ மாறியுள்ளது என்று மருத்துவ தொண்டு அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் நேற்று (16) காலை மேலும் 23 பேர் வரை கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காசாவின் தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேலியப் படை வீடுகளை தகர்த்து வருவதோடு இஸ்ரேல் நடத்திய நேரடி தாக்குதல் ஒன்றில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதி ஒருவரான அமெரிக்க படை வீரர் ஈடன் அலெக்சாண்டர் உடனான தொடர்பை இழந்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இஸ்ரேலிய வான் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரான பட்மா ஹசுனாவும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் காசா போரில் மக்கள் படும் வேதனைகளை புகைப்படங்களாக வெளியிட்டு வந்தவராவார்.

Interactive_Gaza_foodaid_timeline-1742987531

காசா நகரில் இருக்கும் மேலும் பல வீடுகளையும் இஸ்ரேலிய இராணுவம் இடித்துத் தகர்த்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளர். கடந்த சில நாட்களில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்த பகுதிகளிலேயே அது இவ்வாறு செய்துள்ளது. எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு வலயங்களின் விரிவாக்கமாக இது உள்ளது என்று இஸ்ரேலிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘காசா பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களுக்கு உதவ வருபவர்களுக்கு பாரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. நாம் நேரடியாக அழிவுகள் மற்றும் காசாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை பார்த்து வருகிறோம்’ என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் காசாவுக்கான அவசர ஒருங்கிணைப்பாளர் அமன்டே பசெரோல் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களுக்கு மத்தியில் ஹமாஸ் போராளிகளின் பிடியில் இருந்த இஸ்ரேலிய அமெரிக்க பணயக்கைதியான 21 வயது ஈடன் அலெக்சாண்டர் உடனான தொடர்பை இழந்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் இருந்த இடத்தின் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல்களை நடத்தியதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

2023 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கடத்தப்பட்ட 251 பணயக்கைதிகளில் தொடர்ந்து 59 பேர் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் 24 பேர் தொடர்ந்து உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் ஐந்து அமெரிக்க பிரஜைகள் இருப்பதாகவும் அவர்களில் அலெக்சாண்டர் மாத்திரமே உயிருடன் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் (15) பணயக்கைதிகளின் குடுபத்தினருக்கு விடுத்த எச்சரிக்கையில், இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்தால் எஞ்சியுள்ள பணயக்கைதிகள் சவப்பெட்டியிலேயே திரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 51,000 ஐ தொட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பதோடு இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளன. குறிப்பாக இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தின் பின் கடந்த மார்ச் 18 ஆம் திகதி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 4,302 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் காசாவுக்கான எரிபொருள், மருந்து மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் காசாவில் தொடர்ந்து செயற்பட்டு வரும் ஒருசில மருத்துவமனைகளில் மருந்து விநியோகங்கள் தீர்ந்து பணிகளில் இடையூறு ஏற்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் தவிக்கின்றனர், மேலும் எல்லைக் கடவைகள் மூடப்பட்டதால் அவர்களின் துன்பம் மோசமடைந்து வருகிறது’ என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘இஸ்ரேலின் கொள்கை தெளிவானது என்பதோடு காசாவுக்கு எந்த மனிதாபிமான உதவியும் அனுமதிக்கப்படாமாட்டாது’ என்றார். ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தத்தை மீண்டும் எட்டும் முயற்சியில் கட்டார், எகிப்துடன் அமெரிக்காவும் மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இதில் இஸ்ரேல் பரிந்துரைத்திருக்கும் ஆறு வார போர் நிறுத்தத்தில் ஆயுதங்களை களைவதற்கு விடுத்த அழைப்பை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இந்தப் பரிந்துரையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவது பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று மூத்த பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எகிப்து ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த போர் நிறுத்த பரிந்துரை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 🔺 

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...