
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி
விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி செய்தியாளர்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
'கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையையும் அதிமுக முன்வைக்கவில்லை' எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
'ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக - பாஜக கூட்டணி உருவாக்கும்' என தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அதிமுக - பாஜக, கூட்டணி வரலாறு
(1998 முதல் 2025 வரை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக 'இயல்பான' கூட்டணி கடந்து வந்த வரலாறு)
நித்யா பாண்டியன் பிபிசி தமிழ், சென்னை 11 ஏப்ரல் 2025
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இவ்விரண்டு கட்சிகளும் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்து சந்திக்கவில்லை.
இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 10 அன்று தமிழ்நாடு வந்தார். ஏப்ரல் 11 அன்று அதிமுக தலைமையை நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
''இந்த கூட்டணி 1998-ஆம் ஆண்டில் இருந்தே இருக்கும் கூட்டணிதான். தொடர்ச்சியாக பல தேர்தல்களை சேர்ந்தே சந்தித்தோம்'' என கூட்டணியை உறுதிப்படுத்திய பின்னர் அமித் ஷா கூறினார்.
ஆட்சியைக் கவிழ்த்த கூட்டணி
முதன்முறையாக இவ்விரண்டு கட்சிகளும் 1998-ஆம் ஆண்டு சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டன. அந்த தேர்தலில் பாஜக 24 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 18 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றார் வாஜ்பாய்.
1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா மற்றும் அவரின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அவருக்கு சொந்தமான ரூ.11.59 கோடி மதிப்பிலான சொத்தை இணைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மாநிலத்தில் இருந்த திமுக ஆட்சியை கலைக்க பாஜக அரசுக்கு கடுமையான அழுத்தத்தை அதிமுகவினர் கொடுக்க துவங்கினார்கள். அத்துடன் மேலும் சில கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அதற்கு அன்றைய வாஜ்பாய் அரசாங்கம் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இந்த சமயத்தில் வாஜ்பாயுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சுப்ரமணிய சுவாமியின் உதவியோடு சோனியா காந்தியை ஒரு தேநீர் விருந்தில் சந்தித்தார் ஜெயலலிதா என்று குறிப்பிடுகிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி. ஜெயலலிதா, தனக்கு மற்றொரு வாய்ப்பு இருப்பதை பாஜகவுக்கு உணர்த்தும் நோக்கில் அந்த சந்திப்பு இருந்தது.
இந்தநிலையில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையொட்டி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் (269-270) பாஜக அரசு கவிழ்ந்தது.
அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதிமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால் 2004-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது.
12 ஆண்டுகள் கழித்து அமைக்கப்பட்ட கூட்டணி
இருக்கட்சிகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைக் கலைவதற்காக பலகட்ட பேச்சுவார்த்தைகள் இவ்விரண்டு தரப்பிலும் நடைபெற்றது.
அதிமுக கூட்டணியின்போது "பல இரவுகளை தூக்கமின்றி கழித்தேன்" என்று வாஜ்பாய்கூறியதுண்டு என மூத்த பத்திரிக்கையாளரான பிரியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"ஜெயலலிதாவும் கூட என்னுடைய வாழ்நாளில் இனி ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று 1999-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி வைத்தது. அனைத்து தொகுதியிலும் தோல்வியைதான் தழுவியது இந்த கூட்டணி," என்று தெரிவித்தார் பிரியன்.
அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளாக பாஜக அதிமுகவுடன் கூட்டணி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.
"2014 தேர்தலில், உண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற பிரசாரங்கள் அனைத்தும், 'லேடியா மோடியா?' என்று இருந்ததை நாம் நினைவு கூற வேண்டும். நரேந்திர மோதி மீது ஜெயலலிதாவுக்கு ஒரு மரியாதை இருந்ததே தவிர, அவர் இறந்த பிறகுதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி மலர்ந்தது. ஆனால் அதற்கெல்லாம் அரசியல் ஆதாயங்களும் காரணங்களும் இருக்கின்றன," என்றும் பிரியன் தெரிவித்தார்.
இணைந்து பிரிந்த கூட்டணி
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அதிமுக பாஜகவுடன் இணைந்து 2019 நாடாளுமன்ற தேர்தலையும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் சந்தித்தது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் கூட, தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறவில்லை பாஜக. அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றியை உறுதி செய்தது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடர்ந்தது. ஆனால் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. நான்கு தொகுதிகளை பாஜக வென்றது.
அதன் பின்னர் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுகவை விமர்சனம் செய்து வந்ததும், அதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக வார்த்தைப் போரில் ஈடுபட்டதும் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கூட்டணி பிரிந்தது.
'இயல்பான கூட்டணி' - அமித் ஷா
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பின் போது பாஜக சார்பில் அமித் ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
"தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ள இதர கட்சிகளுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் வர இருக்கின்ற தேர்தலை இணைந்து சந்திக்க உள்ளது'' என அப்போது அமித் ஷா கூறினார்
மேற்கொண்டு பேசிய அவர், "தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கும்," என்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக இவ்விரு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது என கூறிய அவர், "1998-ஆம் ஆண்டில் முதல் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை தொடர்ந்து அமைத்து வருகிறது. இது ஓர் இயல்பான கூட்டணி. பல தேர்தல்களில் இந்த கூட்டணி தொடர்ந்து போட்டியிட்டுள்ளது. ஒரு நாடாளுமன்ற தேர்தலில், இந்த கூட்டணி 39 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டார்.
அமித் ஷா, அதிமுக பாஜக கூட்டணி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், தமிழ்நாடு பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கூட்டணியாகவே ஆட்சி அமைப்போம். அந்த கூட்டணி ஆட்சி பழனிசாமி தலைமையில் தான் நடைபெறும் - அமித் ஷா
உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது
இந்த கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "கூட்டணியாகவே ஆட்சி அமைப்போம். அந்த கூட்டணி ஆட்சி பழனிசாமி தலைமையில்தான் நடைபெறும்," என்று கூறினார்.
பாஜகவுடனான இந்த கூட்டணியில் இடம் பெற அதிமுக ஏதேனும் நிபந்தனைகளை வைத்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அதிமுக எந்தவிதமான நிபந்தனையும் முன்வைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார் அமித் ஷா.
இந்த கூட்டணியில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித் ஷா, "அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது," என்று பதில் அளித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
No comments:
Post a Comment