35 ஆண்டுகளின் பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.
- பாவனை நேரம் காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மட்டுமே.
- வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்த, திருப்ப தடை,
- பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுக்க தடை.
- பாதசாரிகள் (கால் நடைபயணம் ) தடை.
- பாரவூர்திகள் செல்வதற்கு தடை.
- பயண வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டருக்கு மேல் தடை.
- சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
மேற்படி கட்டுப்பாடுகளை மீறுவது சட்ட நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.
ஆகிய எச்சரிக்கைகள் அடங்கிய அறிவிப்புப் பலகை வீதியில் தமிழ் மொழியில் மட்டும்,சரியாகவும் தெளிவாகவும் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிகிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் , இன்றைய தினம் வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!
இந்நிலையில் , அப்பகுதி மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாவிட்டபுரம் சென்ற பக்தர்களை அதிகாலையில் “சோதித்த” பிரதமர் பாதுகாப்பு பிரிவு!
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கினர்.
சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் செல்லவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான காவற்துறையினர், காவற்துறை விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டது.
அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு சென்ற குருமாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் படையினர் அனுமதித்தனர்.
இதனால் பக்தர்கள் இன்னல்களை எதிர்கொண்டனர்.
கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல் படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்தனர்.
அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் சாப்பாத்துக்களுடன் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தது
அச்சுவேலி கூட்டுறவு சங்க காணியும் விடுவிப்பு:
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில் , பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது .
யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் பங்கேற்றார்.
பாதுகாப்பு கெடுபிடிகள்
பிரதமர் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தனர்.
எனினும் பலரும் விசனம் தெரிவித்த நிலையில் ஆலய தர்மகார்த்த முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதாகத் தெரிகின்றது.
GTN April 10,11, 2025, Lanka Sri With ENB Inputs
No comments:
Post a Comment