"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள்,
எம் இனத்தை மறக்கலாமா?
நம் இருப்பை இழக்கலாமா?"
தமிழ்த் தேசத்தை நேசித்த போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாவலாகவே இது இருக்கிறது.
போராட்ட காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் போராளிகள் எதிர்கொண்ட சவால்கள், அவர்களின் வீர தீரச் செயல்கள், அவர்களின் தியாகம், அவர்களின் காதல், அவர்களின் சமூகப் பணிகள், அவர்கள் கொண்டிருந்த தேசத்தின் மீதான பக்தி என எல்லாவற்றையும் சொல்லும் நூலாக மட்டும் இல்லாமல், ஒரு ஆதாரமான ஆவணப்படுத்தலாகவும் இருக்கிறது.
போரின்போது போராளிகளின் சாகசமும் வீரமும் தியாகமும் இந்த உலகம் அறிந்தது. ஆனால் அவர்களுக்குள் இருந்த ஈரம், சமூக அக்கறை, சின்னச் சின்னக் காதல், ரசனைகள், நட்பு, பாசம் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறது இந்த நாவல்.
போருக்குப் பின் ஒரு இமயத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்தவன் கதைபோல, தம் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிப் பணியாட்களாக வேலை செய்யும் அரசர்களாக மாறிப்போன போராளிகளின் மனநிலையைத் தெட்டத் தெளிவாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இந்த நாவல்.
போருக்குப் பின் அவர்கள் சிறையில் அனுபவித்த துயரம், அவர்களின் மர்மமான மரணம், அவர்களைத் தொற்றிக்கொள்ளும் நோய், அவர்களின் குடும்பப் பிரிவுகள், அவர்களை இந்தச் சமூகம் இப்போது எப்படி மதிக்கிறது என்ற உளவியல் கண்ணோட்டமாகவே இந்த நாவல் அமைந்திருக்கிறது.
நாவல் ஆசிரியர் ஒவ்வொரு பாத்திரத்தையும் படைக்கும்போது, அதன் மனம் சார்ந்த உளவியலைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். பாத்திரங்களைப் படித்தே அந்தப் போராளிகளின் மனநிலையை, அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை, சமூகச் சவால்களை, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டத்தை நாங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஒவ்வொரு நிலப்பரப்பையும் அந்த நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள், குருவிகள், மரங்கள், உணவுப் பழக்கம், விவசாய முறைகள், இயற்கை காட்சிகள் என அந்தப் பகுதியை படம் பிடித்துக் காட்டுவது மிகச் சிறப்பாக இருக்கிறது.
போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வியலை அது புடம்போட்டுக் காட்டுகிறது.
குறுகிய காலத்துக்குள் மாறிப்போன எங்கள் மனநிலை, மேலிருந்து கீழே விழுந்தவர்கள் எழுந்து வருவதற்காகப் போராடும்போதும் அவர்கள் இன்னும் அந்தத் தாக்கத்துக்குள் இருக்கும் விதம், மீண்டும் மீண்டும் அவர்களை அச்சமூட்டும் இராணுவத்தின் தலையீடுகள் எல்லாவற்றையும் இந்த நாவல் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
இன்றும் ஈழ மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டுவதோடு, இந்த மண் விடுதலைக்காகப் போராளிகளின் ஆயுதப் போராட்டம் ஓய்ந்த பின்னும் அவர்கள் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நாவல்.
அவர்கள் வாழ்வியலுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் குடும்பங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களின் நோயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் அவர்கள் கைது செய்யப்படலாமோ என்ற அச்சமான மனநிலையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் மிகப் பெரும் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு அவர்கள் இந்த உளச்சிக்கலுக்குள் தள்ளப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் தீபச்செல்வனின் தேசியம் சார்ந்த எழுத்தாணி இந்த நாவலில் எழுதி வடித்திருக்கிறது.
இது போர் வீரர்களின் இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட வீர செயல்களைத் தாண்டி, அவர்களின் வாழ்வியல் சோகத்தையும் சேர்த்துப் பதிவு செய்து செல்கிறது.
தேசியம் சார்ந்த படைப்பாளிகள் இவ்வாறான படைப்புகளை வெளியிடும்போது, அந்தப் போர்க்களத்தில் நின்று தங்கள் உயிரை, அங்கங்களை, வாழ்வை, இளமையை எல்லாவற்றையும் தியாகம் செய்த போராளிகளைக் கௌரவிப்பதாக அமைவதோடு அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியாகக்கூட இது இருக்கலாம்.
ஒருவேளை இக்காலத்தில் வாழ்பவர்கள் தேசத்தைக் காணாமல் கூட கண் மூடலாம். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இல்லாமல் கண் மூடிவிடக் கூடாது என்பதற்காக இந்த நூல்கள் அவர்களுக்காகவே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பக்கமும் வாசித்து முடிக்கும்போது கண்ணீரால் நனைந்து போகிறது. அங்கங்கே காதல், குறும்பு, நகைச்சுவை உணர்வு மனதை தேற்றினாலும், சோகச் சுமைகளே சுற்றி இருக்கிறது இந்த நாவல்.
இது ஒரு போர் வீரனின் வாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். இருந்தாலும், உலகத்தால் தோற்கடிக்கப்பட்ட எங்கள் போராட்டத்தின், எமது போராளிகளின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த "சயனைட்" நாவல்.
வட்டக்கச்சி வினோத்
நன்றி.
No comments:
Post a Comment