SHARE

Thursday, November 07, 2024

இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ காலமானார்.


இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார்.

1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான `அது` 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவர், தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர், சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விவாதங்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டு ஆழ்தடங்களை பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் `தமிழ் நிதி' விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது. 

'மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று' என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ⇾

மு.பொ வின் பன்முக படைப்பாளுமை பற்றிப் பேசும் நூல் 'இலக்கியத் தொடுவானை நோக்கி – மு.பொ பற்றி'

எம்.கே.முருகானந்தன்

தமிழில் இலக்கியம் என்றால் செய்யுள் இலக்கிய மட்டுமே என்றிருந்த காலம் கரைந்து போய் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்துவிட்ட இன்றைய நாளில். தனி ஒருவரே செய்யுள் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், விமர்சனக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, என்று இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது கைவண்ணத்தை ஆழமாகப் பதித்தபடி ஈழத்து இலக்கியத் துறையில் இயங்கி வருகிறார் என்றால் அது மு.பொ ஒருவராக மட்டுமே இருக்க முடியும். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் படைப்புகளைத் தந்திருப்பது அவரின் மற்றொரு தனிச் சிறப்பு.

இப்படிப்பட்ட ஒருவரது படைப்புகள் பற்றிய மற்றவர்களது பார்வைகளின் சில கீற்றுக்கள் தொகுப்பாக வந்திருப்பதுதான் 'இலக்கியத் தொடுவானை நோக்கி – மு.பொ பற்றி' என்ற நூலாகும். இவற்றில் சில முழுமையான விமர்சனக் கட்டுரைகளாகும். வேறு சில சிறு குறிப்புகளாகும். ஒரு சில அவரது நூல்களுக்கான முன்னுரைகள், இன்னும் சில கடிதங்களாக எழுதப்பட்டவற்றிலிருந்து பெறப்பட்டவை. 

இவற்றைக் கைக்குக் கிட்டியபடி அள்ளிப் போடாது, கவிதைகள் ஆங்கிலம், கவிதைகள் தமிழ், சிறுகதைகள், நாவல்கள், நாடகம், இலக்கிய ஆக்கங்கள் மீதான திறனாய்வுகள், சிறுவர் ஆக்கங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கௌரவிப்பும் பாராட்டுகளும், நேர்காணல்கள், மு.பொ வின் வெளிவராத ஆக்கங்கள். என்று வகைப்படுத்தப்பட்டுள்ளமையால் வாசிப்பு சுவார்ஸமாகிறது. இவற்றில் கவிதைகள் பற்றிய கட்டுரைகள் ஏழு அடங்குகின்றன. ஏனையவை விடயங்கள் பற்றி ஓரிரு கட்டுரைகளே அடங்குகின்றன.

கவிதை நூல்கள் பற்றி அதிக கட்டுரைகள் வந்திருப்பதற்கு காரணம் அவரது கவிதைகளே அதிகளவு நூல்களாக வந்திருக்கிறது என எண்ணினால் அது தவறானது. அவரது எந்தப் படைப்பை எடுத்துப் படித்தாலும், அவை சிறுகதைளாக இருந்தால் என்ன நாவலாக இருந்தால் என்ன கட்டுரையாக இருந்தால் அவற்றிடையே கவித்தும் பொசிந்து கொண்டிருப்பதை எல்லோரும் அனுபவித்திருக்கிறோம். 

இதைத்தான் பேராசிரியர் சிவத்தம்பி 'கவிஞனாக இருப்பதற்கு யாப்பறிவு. சொல்வளம். ஆகியவை முக்கியமல்ல. கவித்துவ உள்ளம் முக்கியம்.கவித்துவம் இல்லாது கவிதைகளை ரசிக்க முடியாது. கவித்துவம் உள்ள வாசகர்களிடத்து அவர்களின் கவித்துவ உள்ளத்தை மேலும் செழுமைப்படுத்தும் கவிதைகளை மு.பொ எழுதுகிறார்' என்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி.

ஆம் இவரது 

'எங்கும் அலைகள் 

எறியும் கடல் நடுவே 

குந்தியிருக்கும்றொபின்சன் குருசோப் போல,

பேரறியா நச்சுப் 

பிரண்டை விளைகின்ற

ஓர் தீவில் வந்தே

ஒதுங்கிக் கிடக்கிறேன் '

 என்ற பிரசித்த கவிதை பற்றிக் கவிஞர் முருகையன் பேசும் போது இவரது கவித்து ஆற்றல் பற்றி

'இவ் வரிகளிலே நல்ல கவிதைக்குரிய அம்சங்கள் சில பொருந்தி மிளிர்வதை நான் காண்கிறேன். உவமைச் சிறப்பு எனவோ, குறியீட்டுச் சுட்டல் எனவோ, உணர்வெழுப்பும் உத்வேகம் எனவோ, படிவங்களின் பயில்வு எனவோ விமர்சகர்கள் பலபடியாக விபரிக்க முன்வரலாம்.  எப்படி விபரித்தாலும் சரியே ....... ஒரு மனக்காட்சியை வரைந்து காட்டுகின்றன. ஒரு எண்ணப்படத்தை இவை தீட்டுகின்றன' என்கிறார்.

ஈழத்துக் கவிதைத் துறையில் புகழ் பெற்ற மற்றொரு கவிஞர் மு.பொ வின் கவித்துவம் பற்றி  கூறுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்

'ஸ்தூலத்தில் நின்று சூக்குமத்தைக் காட்டுவதும். சிறப்பிலே காலூன்றிப் பொதுவினை எட்டுவதும்,புறக்காட்சிப்படிமங்களிலே தொடங்கி அகக்காட்சிப் பாடல்களை வெளிப்படுத்தித் தந்து காட்டிவிடுவதுமே உயரிய கவிதையின் பண்பு' என்று கவிஞர் முருகையன் 1970 ஆண்டிலேயே இவரைச் சிலாகித்துக் கூறியிருப்பதைப் பார்க்கும் போது, பிறப்பிலேயே கவித்துவம் இவரிடத்தில் சூல்கொண்டிருந்ததாகவே தெரிகிறது. 

இந்த விளக்கப் பின்புலத்தில் அந்தக் கவிதை வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள் புதிய காட்சிகள் உங்களுக்குத் தோன்றும். முக்கியமாக இன்றைய கோட்டா மஹிந்த ஆட்சி அலங்கோல ஆட்சியில் ஏன் பிறந்தோம் இந்த நாட்டில் என்ற உணர்வு தோன்றாத பொதுமகன் இருக்கவே முடியாது.

மு.பொ வின் குந்தி சேத்திரத்தின் குரல் கவிதை பற்றிய சோ.பா வினது கட்டுரையானது கலாபூர்வமானது. மு.பொ வின் நயமான கவிதை வரிகள் ஊடாகவே கட்டுரையை நகர்த்தும் அழகு அற்புதமானது. கட்டுரையைப் படிக்கிறோமா கவிதையைப் படிக்கிறோமா என்ற எண்ணங் கூட எழாதவாறு அந்த வரிகளில் முழ்கிவிடுகிறோம்.

மற்றொரு இடத்தில் அதே கவிதை பற்றி 'இது மு.பொ தரும் நவபாரதம். இதில் வரும் கௌரவரை சகுனியை ஒப்பந்தம் கிழிந்ததை. பழைய புதிய பாண்டவர்களை எங்களால் இனங்காண முடிகிறது. T.S.Eliot யைப் போல தொன்மத்திலிருங்து மு.பொவும் ஊட்டம் பெறுகிறார்' என்கிறார்.. 

'பொன்னம்பலத்தின் பலம் அவருடைய தத்துவத்தளமே. அவர் கவிதை நுதலும் பொருள் சிலருக்கு புரியாது போனால், அதற்கும் அதுவே காரணம்; T.S.Eliot  எழுதிய கவியும் பலருக்குப் புரிவதில்லைதான';  பக்க 41 சோ.ப

கவிதைகளுக்கு அப்பால், இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய சுருக்கமான கருத்துரைகளும் இந்த நூலில் அடங்குகின்றன. அவை பெரும்பாலும் இவரது தேடல் உந்துதுல் பற்றியும். கவித்துவ நடை பற்றியும், தத்துவார்த தளம் பற்றிம் சிலாகித்துப் பேசுகின்றன.  'கடலும் கரையும்' பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதும் போது 'மிகவும் சிந்தனையைத் தூண்டுவதாக அமையும் முன்னுரை. சுவார்ஸ்யம் மிக்க ஆழமான வேர்களைக் கொண்ட முக்கிய பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகள். இளந் தலைமுறையினரோடு உரையாடல் என்பனவாகும்'. என சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்கிறார்.

'முடிந்துபோன தசையாடல்' பற்றி தெளிவத்தை ஜோசப் எழுதும்போது 'ஆழமான எழுத்துடன் கூடிய ஆழ்மனத்தேடலே மு.பொ வின் படைப்புகள்' என்கிறார்



'உருமாறும் உலகமும் கருமாறும் காலமும்' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரைகளின் சுருக்கமாக அடுத்த கட்டுரை தரப்பட்டுள்ளது

நாவல்கள் பற்றிய கட்டுரைகளைப் பொறுத்த வரையில் நோயில் இருத்தல் பற்றி 'யதார்த்த ஆத்மார்த்த தளங்கள் சமதையாக வெளிப்படும் நாவல்' என்று சூரியகுமாரி பஞ்சநாதன் தனது கட்டுரைத் தலைப்பிலேயே கூறிவிடுகிறார். அதே போல கட்டுரையை நிறைவு செய்யும்போது, 'ஈழத்தில் இதுவரை காலமும் வெளியிடப்பட்ட நாவல்களினின்றும் புதிய  அனுபவத்தையும், கனதியையும் தருகின்ற மு.பொவின் 'நோயில் இருத்தல்'  ஈழத்து நாவல் இலக்கியம் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்ற கூற்றை முற்றாக மறுதலிக்கும் வகையிலும்  தமிழ் நாட்டு சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்றோருடன் வைத்து ஒப்புநோக்கக் கூடிய அளவு தரம் வாய்ந்தது என்பதையும் கூறியே ஆக வேண்டும்' என்று புகழாரம் சூட்டுகிறார். 

'சங்கிலியன் தரை'  நாவல் பற்றி எம்.கே.முருகானந்தன் எழுதும்போது 'மு.பொ வும் போர்க் கால வாழ்வைத்தான் சித்தரிக்கிறார். ஆனால் இது வெறுமனே சம்பவங்களைச் சொல்லி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வாசகர்களை மாயக் கனவுகளுக்குள் தோய வைக்கும் நாவலல்ல.

இங்கு போர் அரங்குகள் சித்தரிக்கப்படவில்லை. போராளிகளின் போர் முறை அனுபவங்களும் அவர்களது தீரங்களும் பெருமிதத்துடன் பேசப்படவில்லை.

மக்களின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக தேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தானும் பங்களிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வின் ஊடாக கதை நகர்கிறது'

மேலும் அவரது எழுத்து நடை பற்றிப் பேசும் போது 'மு.பொ வின் நாவலானது அது பேசும் அரசியலுக்கு அப்பால் அவரது தனித்துவமான படைப்பாளுமையாலும் முக்கியத்துவும் பெறுகிறது. அழகிய தமிழ், ஆங்காங்கே இனிக்கும் கவிதா மொழி, மெருகூட்டும் பேச்சு வழக்கு, கதையோட்டத்துடன் பின்னிப்பிணைந்து வரும் தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்கள், பாரம்பரிய வழக்கங்கள், நம்பிக்கைள், மெய்யுள் யாவும் கலந்து சுவை தருகின்றன.

'சீமால் வேலி'. 'மூத்திரத்தை சலசல வென்று பனுக்கிவிட்டு..',  'கிளி வாழ்ந்துப் போன பனங்கொட்டுகள்' என்று எம்.கே.எம். உதாரணம் காட்டவும் செய்கிறார்.

ஈழத்தில் விமர்சனத் துறையிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக கூறுதற்குரியது. இவரது திறனாய்வின் புதிய திசைகள் என்ற இவரது தொகுப்பு பற்றி ஆதிசேனன் எழுதும் போது 'தமிழில் திறனாய்வுச் செல்நெறயின் புதிய திசைகளை இனங்காட்டும் - ஆற்றுப்படுத்தும் தொடர்ச்சியும் மீளுருவாக்கப் பின்புலத்திற்கான அறிகை மரபை இந்நூல் முன்வைக்கிறது' எனக் குறிப்பாகச் சொல்கிறார்

சிறுவர் ஆக்கங்கள் பற்றிய பகுதியில் 'சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக உந்துதுல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்களின் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அக்கறை காட்டுபவர்'  என மதுசூதனன் தனது சுருக்கமான குறிப்பில் சொல்வது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மு.பொ பற்றிய கருத்துகளுக்கு அப்பால் அவரின் இது வரை வெளியாகாத 'மீண்டும் பாற்கடல் கடைதல், மற்;றும் 'தெற்கின் திருக்கலியாணங்களும், வடக்கு கிழக்கின் ஆன்மவைத் தின்றவரின் திருகுதாளங்களும்' ஆகிய இரு நெடுங்கவிதைகளையும் இந் நூலில் அடங்கியுள்ளன. கருத்தாளமும். நடையழகும் கொண்ட சிறந்த படைப்புகள் என்று சொல்லவும் வேண்டுமா?

சரி! மு.பொ பற்றிய இந்த நூலுக்கான தேவை என்ன? அவரது ஆக்கங்கள் பற்றிய கட்டுரைகள் மட்டுமின்றி கூட்டங்களில் ஆற்றப்பட்ட உரைகள், தனிப்பட்ட கடிதங்களின் பகுதிகள் அடங்கிய இத்தகைய நூலால் வாசகனுக்கு என்ன பயன் கிட்டும்? அல்லது இவை போன்றவை படைப்பாளியின் புகழாசையின் வடிகாலா?

இல்லவே இல்லை. 

உண்மையில் இந்த நூலைப் படிக்கும் போது எனது இலக்கிய அறிவின் வறுமையையும், எனது எழுத்துகளின் போதாமையும் என்னை உறுத்தவே செய்தன. அதே நேரம் நான் மு.பொ பற்றித் தெரிந்து கொண்டவற்றை விட இலக்கியத் துறையின் பல்வேறு வகையான படைப்பாக்கங்கள் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடிந்தது. 

முக்கியமாக கவிதை பற்றி பல விடயங்கள் இந்தக் கட்டுரைகளுக்குள் குவிந்து கிடக்கின்றன. கவிதை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும். அதன் நுணுக்கங்கள் எவை? அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் போன்றவற்றை பல்வேறு அறிஞர்களின் பார்வைகள் ஊடாக கிரக்கிக்க முடிந்ததால் எனது பார்வை விரிவனது. உண்மையில் கவிதை பற்றி இந்த நூலில் விமர்சகர்களும் அறிஞர்களும் கூறியவற்றைத் தொகுத்தால் அதே ஒரு விரிவான கட்டுரையாகிவிடும்.

அதே போல ஏனைய படைப்பாக்கங்கள் பற்றியும் எனது அறிவை விசாலித்துக் கொள்ள இந்த நூல் உதவியது. நிச்சயமாக தேடல் மிக்க வாசகர்களுக்கு இது ஒரு கையேடு போல உதவும் என்பது நிச்சயம்

இறுதியாக, சங்கிலின் தரை நாவலுக்கு நான் எழுதிய குறிப்பில்; 'செக்குமாடு போல சுற்றும் இலக்கிய உலகில் மாற்றுப் பாதைகள் ஊடாக ஒளியீட்டும் பணியை அவர் தொடர வாழ்த்துகிறேன்' என எழுதியிருந்தேன். அதையே இங்கும் சொல்லி நிறைவு செய்கிறேன். 

Posted  by Muruganandan M.K.

 

இது ஒரு கவிதை நூல். கவிதை நு¡ல் என்பதால் இன்று விமர்சனம் எழுதுவது எனக்கு சற்று சங்கடத்தைத் தருகிறது.
நான் கவிஞன் அல்ல. ஆயினும் கவிஞன்தான் கவிதை பற்றிப் பேச வேண்டும் என்றில்லை. அதில் ஈடுபாடுள்ள அதில் ஆழ்ந்து போகிற எவனும் அது பற்றி பேசலாம்.  இருந்தபோதும் அகமும் புறமும் சத்தியம் நிறைந்த, உள்ளொளி கொண்ட படைப்பாளியின் இந்த நு¡ல் என்னைக் கவர்ந்தது.

விமர்சகன் என்ற முறையில் அல்லாது ஒரு இரசிகன் என்ற முறையில் இந்த நு¡லை அணுகினேன். அதையே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை என்றால் என்ன?

ஒருவர் தனது எண்ணங்களையோ கருத்துக்களையோ உணர்வுகளையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சி பூர்வமாக சொல்வதாகும். சிறுகதையில் கூட அவ்வாறு சொல்லலாம்தான். ஆனால் கவிதையில் சொல்லும் போது அது வசன நடையில் அமையாது.

        • கவிதையின் சொல்லமைப்பானது தனித்துவமானது. பொதுவாக சொல்லப்போனால் சுருக்கமாகவும் செறிவாகவும் ஓசை அமைதியும் கொண்டதாக இருந்தாலே அது கவிதையாகிறது.
        • கவிதை என்பது உயர்நிலை வாசிப்பிற்குரிய இலக்கியம் என்று கருதப்படுகிறது.ஆனால் பண்டிதத் தன்மையான இலக்கியமாக இன்றைய காலத்தில் இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது.
        • தேடல் மனங்கொண்ட எந்த வாசகனையும் கவரக்கூடியதாக இருக்க வேண்டிய அதேநேரம் மேலோட்டமான பொழுதுபோக்கு வாசிப்பிற்கு உரிய வடிவமுமல்ல என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
        • எது எப்படி இருந்தபோதும் கவிதை என்றால் அதில் கவித்துவம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கவித்துவம் என்றால் என்ன?

கவித்துவம் என்பது எந்த கட்டுகளுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறைத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனை வசப்படுத்தும் கவிதையின் உயர் பண்பாகும். நல்ல கவிதையென்பது வாசகனின் அக மென்னுணர்வில் எதையாவது எப்படியாவது எங்கேயாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப் பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம் போல கவிதைக்கு கவித்துவம் இருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்தெடுக்க முடியாது.

மு.பொ வின் கவிதைகளில் கவித்துவத்தின் வீச்சு பலமுள்ளதாக உள்ளது. சலிப்பூட்டும் உவமைகளையும், வலிந்து திணிக்கப்படும் படிமங்களையும் அவர் உணர்வு பூர்வமாகத் தவிர்க்கிறார். “படிமப் பன்னீர்களும் உவமை ஊதுபத்திகளும், பா¨‘யின் திரவியங்கள் அனைத்தும் .. எங்கள் ஆத்மாவை விடுவிக்கப் போவதில்லை’ எனத் தனது கவிதையிலேயே அவர் தட்டிக் கழிப்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.

அவருடைய கவித்துவ வீச்சு இந்த நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஒரு சில உதாரணங்களை எடுத்துக் கூறலாம்.

        • ‘காலம் கருத்தரிக்கும் மூலத்தை ஆயும் ஒவ்வொரு சமயமும் பாழில் விழும் நான்’ (பக்கம்1),
        • ‘விண்மீன்கள் பூக்கும் எம் தலை முகட்டிலும் மரகதப்பச்சை மண்டிய எம்மடி விரிப்பிலும்’ (பக்கம் 11),
        • ‘மலையின் சுவர்கள் அதிர காற்றெடுத்தறைந்தது. மெல்ல நடந்த கிளையின் படுகை செங்கம்பள விரிப்பாய் சிவந்து படர்ந்தது’ (பக்கம் 25),
        • ‘அன்ன ஊஞ்சல் அல்ல நம்மூர் விமானப் பயணங்கள்’ (பக்கம் 27),
        • ‘கூவி மருட்டும் குயிலின் இசை எடுத்து என்னை வேசைப்படுத்த விழையாதே’ (பக்கம் 47),
        • ‘தூமை அகன்ற முதுமையில் துப்பரவுகள் புனிதமல்ல முதுமையிலும் து¡மையே கரைபுரழும்’ (பக்கம் 52)

இவை போன்றவை அவருடைய கவித்துவ வீச்சுக்கு ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

கவிதையின் உள்ளடக்கம்

கவிதையின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும். உள்ளடக்கம் எதுவுமாக இருக்கலாம்.

        • அது தனிமனிதனின் மெல்லுணர்வுகளின் அழகான வெளிப்பாடாக இருக்க முடியும்,
        • அல்லது இயற்கையன்னையின் எழிலுரு காட்சியாக இருக்கலாம்.
        • சில தருணங்களில் ஆழ்ந்த தத்துவ மணிகளாகவும் இருக்கலாம்.
        • விடயம் எதுவாக இருந்தாலும் அது வாசகனின் உள்ளத்தைத் தொட வேண்டும்.

படைப்பாளி ஆக்கிய அந்தப் படைப்பானது எழுத்தாளனினது பிரதி  என்ற நிலையிலிருந்து விலகி வாசகனின் பிரதியாகக் கூர்ப்புப் பெற வேண்டும். ஆழ்கடலின் அடியில் முத்து மறைந்திருப்பது போல வாசகனின் உள்ளத்துள் உறைந்து விட்ட ஏதாவுது ஒன்றைச் சுண்டி இழுக்க வேண்டும்.என் உள்ளத்துள் உறைந்து விட்ட உணர்வுகள் பலவற்றைச் சுண்டி இழுத்த பல கவிதைகள் மு.பொ வின் இத் தொகுதியில் உண்டு. அவர் கவிதையில் வெளிப்படுத்தியவற்றில் இரு விடயங்கள் முக்கியமாக என் மனத்தைத் தொட்டன.

இடப்பெயர்வும் அதன் துயரும்

முதலாவது விடயம் இடப்பெயர்வும் அதன் துயரும் பற்றிய கவிதைகளாகும். ‘நம்புவதே வழி’, ‘சூத்திரர் வருகைக்காய்’ ‘யாருக்குச் சொல்லி அழ’ ஆகிய கவிதைகளில் இடப்பெயர்வும் அது சார்ந்த உணர்வலைகளும், பிரச்சனையின் வெவ்வேறு அணுகு முறைகளாக அற்புதமாகப் பதிவாகியுள்ளன.

‘நம்புவதே வழியில்’ அந்த அவலம் இவ்வாறு பதிவாகிறது.

கொட்டும் பனியில் குளிரில், பனிக்காற்றில் போகும் வழியெங்கும் ஈர விற(கு) ஊதி யாகம் வளர்க்கும் அகதிப் புது மனிதம்.. இருப்பே சுமையாக, இந்நிலத்தில் கால் எங்கும் தரிக்க முடியாத சாபத்தில் சிக்குண்டு அந்தரிக்கும் இப்புதிய ஹரிஐனங்கள் ..’

இடம் பெயர்ந்து குந்தியிருக்கக் கூட நிலம் இல்லாது தவித்தவர்களுக்குத்தான் இந்த வார்த்தைகளின் சத்தியம் புரியும். இடம் பெயர்தல் பற்றிய மற்றக் கவிதை மேலும் அற்புதமானது.

சூத்திரர் வருகைக்காய் என்ற அந்தக் கவிதையே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்தது மிகவும் பொருத்தமானது.

‘தெற்கு கடல் செத்துக் கிடக்கிறது. கண்ணகி அம்மன் கோவில் குறாவிப் போய் நிற்கிறது. கோபுரத்தில் மாறிமாறிக் குந்திக் கரையும் காக்கைகளும் இல்லை, முக்காலப் பூசைக்கென்று மூன்றுபொழுது சைக்கிளை மணலில் தள்ளிவரும் பிராமணப் பூசகரும் காணாமல் போய்விட்டார். அப்பொழுது கேவல் எழுகிறது’.

யார் அழுவது நீங்களே படித்துப் பாருங்கள். அதிர்ச்சியில் அதிர்ந்து போவீர்கள்.

‘யாருக்குச் சொல்லி அழ’ (பக்கம் 33) மிக அற்புதமான கவிதை. அகதியாதல் இடப் பெயர்வு ஆகியவற்றை படைப்பிலக்கியமாக்கும் போது பொதுவாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் அவலம்தான் பாடுபொருளாக அமைவது வழக்கம். ஆனால் சூத்திரர் வருகைக்காய், மற்றும் ‘யாருக்குச் சொல்லி அழ’ ஆகிய இரு கவிதைகளும் மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் மனித வளம் குன்றி வெறிச்சோடி அனாதையாகக் கிடக்கும் மண் பற்றிப் பேசுவது குறிப்பிடத்தக்கது.

‘தலைமாட்டில் விளக்கு வைக்க யாருமில்லை கண்களை மூடிவிட, வாயை பொத்திவிட கால்விரல்களை ஒரு சேரக்கட்டிவிட யாருமில்லை ஏன் இறந்ததை அறிவித்து அழுவதற்கு அருகில் யாருமில்லை செத்தவரோடு ஒட்டிக் கிடந்த பூனை பாய்ந்து வெளியே ஓடுகிறது.’

எத்தனை உயிர்ப்பான வார்த்தைகள். நாம் பலதடவைகள் கண்டு கேட்ட அனுபவங்கள்தான். ஆனால் மு.பொ வின் சொற்களில் மிகவும் அழுத்தமாக வருகிறது. இங்கு அவர் உபயோகிக்கும் சொற்கள் கூட எளிமையானவை. எமக்கு அந்நியமான எங்கிருந்தோ பிடிங்கி வந்து செயற்கையாக நாட்டப்பட்ட கவித்துவச் சொற்கள் அல்ல. நாம் தினம் பேசும் சொற்கள்தான். தனதும் எமதுமான அனுபவ அலைகளை துணிவோடு எடுத்துக் கொண்டு, இயல்பான பேச்சு வழக்கில் தவளும் சொற்களில் கவிதை படைத்திருக்கிறார்.

நண்பனின் மறைவு

எனது உள்ளத்தைத் தொட்ட மற்றுமொரு கவிதை நண்பனின் மறைவு பற்றியது. சசி கிருஷ்ணமூர்த்தி யாழிலிருந்து பயணித்து வந்த விமானம் வீழ்ந்து நொறுங்கிக் கடலில் வீழ்ந்து காணமல் போனது பற்றி இவ்வாறு சொல்கிறார்

‘நண்ப உனக்குத் தெரியும் அன்று நாம் இலக்கியக் கருத்தரங்கு முடிந்து காலி நெடுந்தெருவில் கைகோர்காக் குறையாக கதைத்தபடி நடந்ததை! ஆனால் நமக்கேன் தெரியவில்லை, எம்மைவிட நெருங்கி எமது கதைக்கிடையே காலன் ஒட்டி வந்து உட்செய்தி சொல்லியதை?’

இதேபோல ஒரு சம்பவம் எனது வாழ்விலும் கூட நடந்தேறியது. அந்தத் தேதி கூட மறக்க முடியாதது. 15.07.1991 ஞாயிறு மாலை பருத்தித்துறையில் அறிவோர் கூடல் வழமைபோல் கலகலப்பாக நிறைவுற்றது. அன்று பிரபல எழுத்தாளர் நெல்லை க.பேரனும் எம்மோடு கூடலில் கலந்து மகிழ்ந்தான். படைப்பாளி என்பதற்கு மேலாக மனம்விட்டு இனிமையாகப் பழகுகின்ற, குடும்ப அளவிலான நெருக்கம் கொண்டவன் அந்த நண்பன். கூட்டம் முடிந்த பின்னரும் ஏனைய பல நெருங்கிய நண்பர்ளைப்போல சற்று நேரம் தங்கி நின்று பேசிப்போவான். அன்றும் வழமைபோல் சுணங்கி நின்று பேசிப் போனான்.

ஆனால் அன்றிரவே அவனும், அவனது மனைவி, இரு குழந்தைகள் ஆகிய முழுக் குடும்பமும் ஷெல் வீச்சில் அகால மரணமடைந்தனர். நண்பர்கள் எல்லோரையும் கலங்கி அழவைத்த துயர் மிகு சம்பவமாகும்.

பேரன் போலத்தான் சசி கிருஷ்ணமூர்த்தியும் எனது மற்றொரு இனிய நண்பன். எத்தனை நாட்கள் பெண்கள் ஆய்வு மன்றத்தில் விபவி கூட்டம் முடிய கதை பேசியபடி தர்மராம வீதி வழி நடந்திருப்போம். இது போன்ற போரின் அகோர முகத்தை இன்னும் எத்தனை ஆயிரம் அப்பாவி மனிதர்கள் சந்திக்க நேர்ந்தது.

‘நம் இருப்புக்குள் புகுந்துள்ள மரணத்தின் மூச்சறிய உனக்குள் இருக்கும் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி”

எத்தகைய உள்ளொளி கொண்ட ஆத்மீக உணர்வு கொண்ட வார்த்கைள் ‘மரணத்தின் மூச்சறிய உனக்குள் இருக்கும் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி’க்க ஞானிகளால் முடியும், உள்ளொளி பெற்றவர்களால் முடியும். ஆனால் எம்மால் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழித்து ஒளி பெற முடியுமா? நாம் சாதாரண மானிதர்கள். எம்மால் மரணம் வரப்போவதை முற்கூட்டி அறிய முடியாது. மரணத்தைக் கண்டு கண்ணீர் விடத்தான் முடிந்தது.

காலத்தினூடு கடந்து செல்லல்

மு.பொ வின் இன்னொரு தனிச்சிறப்பை காலத்தினூடு கடந்து செல்லும் ஆற்றல் உள்ளவராக ரஞ்சகுமார் இந்த நூலுக்கான பின் அட்டையில் முன்வைக்கிறார். இதன் அர்த்தம் என்ன? படைப்பிலக்கியங்களை காலத்தின் கண்ணாடி என்பர். அந்த வகையில் பெரும்பாலும் காலத்தின் குரலாக, அதன் சாட்சியாக இயங்குபவர்கள் படைப்பாளிகள். தமக்கு முன்னும் தமது காலத்திலும் நிலவிய, நிலவுகின்ற பாரம்பரியத்தையும். புழக்கத்திலுள்ள நடைமுறைகளையும் நன்கு அறிந்து, அதிலுள்ள போதாமைகளையும், குறைபாடுகளையும் இனங் கண்டு மனங் கொதித்து படைப்பவனாக படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் காலதோடு இணைந்து நடப்பவர்கள்.

ஆனால் மு.பொ காலத்தோடு கலந்து செல்கின்ற அதேவேளை அதனைக் கடந்தும் செல்பவர். அதனால்தான் காலத்தினொடு கடந்து செல்பவர் என்றார் ரஞ்சகுமார். காலத்தின் பிரச்சனைகளை, அவற்றால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்களை அறிந்து கொண்டவர். ஆனால் இன்றுள்ள கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றைய உலகில் மாற்றங்களை ஏற்படுத்தப் போதாதவை எனக் கண்டு, ஒரு புத்தம் புதிய தரிசனத்தை உணர்ந்தறிந்து அதன்படி கலைஇலக்கிய ஆக்கத்தை மேற் கொள்பவர்.

புதிய தரிசனம்

அவரது புதிய தரிசனம் என்ன? அரசியல் பொருளாதாரத் துறைகளில் புதிய தரிசனங்களுக்கு மார்க்ஸ் உதாரணமெனில் இலக்கியத்தில் தாகூரையும் பு¡ரதியையும் சொல்லலாம். மு.பொ வும் அவ்வாறே புதிய தரிசனங்களைத் தேடி அலைபவர். இதனால்தான் காலத்தினொடு கடந்து செல்பவர் என ரஞ்சகுமார் கூறினார் போலும்.

அவரது புதிய தரிசனத்திற்கு ஒரு நல்ல உதாரணம் இவரது கடைசி நாவலான ‘நோயில் இருத்தல்’ ஆகும். உண்மையில் ஈழத்து நாவல் வரலாற்றில் இந்த நாவல் ஒரு புதிய அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். இதுகாறுவரை வந்த நாவல்களினதும் சிறுகதைகளின் போக்கையே மாற்றக் கூடிய ஆழமும் புதுமையும் வீச்சும் கொண்ட வித்தியாசமான படைப்பான அது இருந்தது.

ஏனெனில் இதுவரை காலமும் எந்தப் புனைகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு கதை இருக்க வேண்டியது எமக்கு முக்கிய வரையறையாகப் பட்டது. அதாவது கதை சொல்வதுதான் கதாசிரியரின் முக்கியமான கடமையாக எண்ணப்பட்டு வந்தது. கதையின் முக்கிய கரு என்ன? அதில் புதுமையான மாற்றங்கள் ஏதாவது தென்பகிறதா? அதை வெளிக் கொணரும் முக்கிய பாத்திரங்கள் எவை, உப பாத்திரங்கள் எவை? கதையின் கருவைச் சிதைக்காமல் கதாசிரியர் படைப்பை வளர்த்திருக்கிறாரா? கதை மன¨த் தொடுகிறதா? என்ற ரீதியில்தான் நாம் சிந்தித்தோம். வாசகர்களும் அதற்கு அமைவாகவே வாசித்துப் புரிந்து, உணரப் பழக்கப்படுத்தியிருந்தோம். இவற்றை மீறிய சிந்தனைகள் எழவே வாய்ப்பு இருந்திருக்கவில்லை.

ஆனால் தமிழகத்தில் இதை மீறிய சிந்தனைகளும் படைப்புகளும் சிலகாலமாக வெளிவரத் தொடங்கிவிட்டது. நீல.பத்மநாதன், விட்டல்ராவ் போன்றோரது சில படைப்புகளில் இந்த அம்சம் பிரக்ஞை பூர்வமாகவோ அன்றித் அவர்களை அறியாமலோ பல காலங்களுக்கு முன்னரே தலைகாட்டியிருந்தது. இன்று இன்னும் பலரது படைப்புகளில் இந்தப் போக்கு தென்படுகிறது. சில காலத்திற்கு முன் பரவலாகப் பேசப்பட்ட வி–ணுபரம் நாவல் இதற்கு ஒரு நல்ல உதாரணமகச் சொல்லப்பட்டது.

ஆயினும் இவற்றையெல்லாம் து¡க்கி எறியக்கூடிய இலக்கிய வடிவமாக நோயிலிருத்தலை நாம் பார்க்கலாம். ஒரு தனிமனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக அவனது விடுதலை பற்றியும் அதனு¡டாக ஒரு சமூகத்தின் விடுதலை பற்றியும் அது பேசியது.

மார்க்ஸிய சிந்தனைகள், லோகாதாயச் சிந்தனைகள், இனவழிச் சிந்தனைகள் ஆகியன இன்றைய உலகின் போக்காக இருக்க நோயில் இருத்தல் ஆனது மனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக ஆத்மீகச் சிந்தனைகளுக்கு உட்படுத்தியது.

வழி நடத்துனன்

இதே போன்றே கவிதைத் துறையிலும் தன்னை ஒரு முன்னோடியாக, வழி நடத்துபவனாக இனங்காண வைக்கின்றார். சங்க காலம் முதல் இன்று வரையான கால ஓட்டத்தில் அஞ்சல் ஓட்டமாகப் பயணித்த கவிதைத்துறையின் கம்பு தன் கையில் வந்து விழுந்தபோது அதன் இன்றைய பண்பையையே கட்டியழும் இயல்பு மு.பொ வுக்கு இல்லை. தன் கவிதையில் தன்னைத் தானே கண்டு பிடித்து, தன்வழி மற்றவர்களை இழுக்கக் கூடிய முன்னோடியாக, தெளிவான ஆளுமையுள்ளவராக தன்னையும் கவிதைத்து¨றையையும் புதுப்பித்துக் கொள்கிறார்.

ஆத்மார்த்தம்






மனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக ஆத்மீகச் சிந்தனைகளுக்கு உட்படுத்தும் கருத்தை இந்த நு¡லில் உள்ள பல கவிதைகளில் காண்கிறோம்.

அதனை ‘விடுதலை பற்றிய விசாரம்’ என்ற கவிதையிலும் காணலாம்.

எது விடுதலை? சுகத்தை அனுபவிக்கவே விடுதலை கேட்கிறோம். இல்லை விடுதலையே சுகமாக விரிகிறது என்று சொல்லாமா? கண்காணா ஊற்றுச் சுரபியிலிருந்து அருவி பரவி வருவதுபோல் ஸ்பரிசிக்க முடியாத விடுதலை என்னும் உணர்வெளியிலிருந்து சுகம் எம்மைத் தழுவி வருகிறது. கண்கள் அழகில் தோயும்போது பார்வையில் ஒருசுகம் காதில் இசை வழியும்போது பார்வையில் ஓருசுகம். அறுசுவை உண்ணும்போதும், நாவில் கவிதை துள்ளும்போதும் சுகித்தலிலும் யாத்தலிலும் ஒருசுகம் என்றுவரும் தனித்தனிச் சுகங்கள்.

இவற்றிற்கெல்லாம் அடிநாதமான மனம், விரிந்து மேலெழ முடியாது. முடக்கப்படும்போது விடுதலை ஒருவனுக்கு இல்லாது போய்விடுகிறது.

அப்படியானால் விடுதலை என்றால் என்ன? இவ்வாறு கூறுகிறார்.

‘விடுதலை என்பது எல்லோரையும் விரிய வைப்பது.

எல்லோருக்குள்ளும் ஒத்திசைவது எங்குமாய் விரிந்து இன்பூட்டுவது எல்லோருக்குள்ளும் புகுந்து இன்சுகம் மீட்டுவது’

இதை அடைவது எப்படி?

‘நமக்குள்ளே நம்மை அறியாது பதுங்கி இருக்கும் பொதுமைக்கெதிரான தனிநிலக்குணங்கள் ஆக்கிரமிக்கக் கூடும் இது நம் விடுதலையை விரிய விடாது திசை தருப்பக்கூடும் இதனால் நாம் சதா அகமும் புறமும் புதுவித சென்றிகள் போட்டு இவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றார்.

இந்தக் கவிஞன் பல்வேறு விடயங்களைக் கவிதையாக அவிழ்த்து எம் முன் சிதறப் போட்டிருற்கிறான். அவன் எடுத்தாண்ட விடயங்கள் பல்வகைப்பட்டவை. நாட்டு நடப்புகள், பெண்ணியம், சிங்களப் பேரினவாதத்தின் கொடிய கரங்கள், இடப்பெயர்வு, சூழலைப் பாதுகாத்தல், இன்றைய இலக்கியப் போக்குகள், இப்படி எத்தனையோ.

அன்பு சார்ந்தது

மு.பொ வின் படைப்புலககை இன்னொரு விதத்தில் பார்த்தால் அது அன்பு சார்ந்ததாக இருக்கிறது. தன் அன்புக்குரியோர் முதல் தன் எதிரிகள் வரை அந்த அன்பு விரிகிறது. தனது இனத்துடன் மட்டும் நின்றுவிடாது மனித குலம் முழுவதையும் உள்வாங்கிப் பரவுகிறது. மிருகம், மரம் செடி கொடி என அனைத்து உயிர்களையும் அணைத்துப் பேண வேண்டும் என்று பேராசை கொள்வதாயும் இருப்பதைக் காண்கிறோம்.

‘மனுதர்ம சாஸ்திரம்’ என்ற கவிதையில் அந்த ஆட்டுக்குட்டி பஸ் மோதி,

‘ஒரு மூச்சில்லாமல், மே என்ற பேச்சில்லாமல், இரத்தம் சிந்தி விகாரப்படுத்தாமல்’

மரணித்துப் போவதைக் கண்டு அவர் துயருறுகிறார். மலைமொழி என்ற கவிதையில் மலைகளின் மேலுள்ள மரங்களை ‘கோடரி கொண்டு தறிக்கையில் அவர் அங்கங்கள் ஒவ்வொன்றும் இரக்கத்தால் சிதறித் தெறிக்குது.’

‘படிமப் புஸ்பங்களும் உவமை ஊது பத்திகளும் · பா¨‘யின் வாசனைத் திரவியங்களும் கொண்டு’ கவிதையைச் சிதைக்கும் போது அவரது ஆத்மா ஓலமிடுகிறது. இலக்கியத்தில் ‘தசை மொழியாடல்’ கண்டு கொதிக்கும். ‘சுலோகச் சுமையை ஏற்றி ஏற்றி தொழிலாளர் முதுகில் குதிரை விட்டிருந்தமை’ கண்டு மனம் ஏங்கும். ‘குனிந்து குனிந்து வளைந்தவன் நெஞ்சுப் பொந்தினில் அக்கினிக் குஞ்சு திரள’ வைக்க அவரது மனம் சிறுமை பொறுக்க முடியாமல் துடிக்கும்.

இப்படி இலக்கியம், விஞ்ஞானம், உலக நடப்பு பல பொருள் பற்றி அவர் அங்கும் தாவிச் சென்று ஆழமாகத் தேடி இரசித்துப் பாடினாலும், அவரது கவிதைகள் மனித வாழ்வு பற்றிய கேள்விகளையும் விசாரணகளையும் சதா எழுப்புகிறது. இவ்வுலக வாழ்க்கையின் முடிவுக்கு அப்பாலான இன்னொரு வாழ்வு பற்றியும் நம்பிக்கை கொள்கிறது.

இயல்பான காட்சிச் சித்தரிப்பிற்கும், வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் அப்பால் அவரது கவிதைகள் துள்ளிப் பாயும்போது ஒரு அற்புதம் அரங்கேறி விடுகிறது. எளிய தோற்றத்ததைத் தந்த கவிதைகள் கனத்த ஆகிருதியை, எல்லையற்ற பரிமாணத்தை எட்டி விடுகின்றன. வெறும் காட்சிப் படுத்தல் என்ற படியை தாண்டி ஆழ்ந்த தத்துவப் பார்வைக்குப் பாய்ந்து செல்கிறது.

தவிஞனின் தளம்

இவ்வாறு இவரது கவிதைகள் ஊடாகப் பயணிக்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தக் கவிஞன் யார்? இவனது தளம் என்ன? இவனது பார்வை எத்தனையது போன்ற கேள்வி எழுகின்றன. இவற்றை நாம் அவனது படைப்புகள் ஊடாகத்தான் நாம் கண்டறிய வேண்டும். ஆனால் எந்த ஒரு படைப்பாளியும் தான் ஒரு குறுகிய எல்லைக்குள் அடைபட்டுப் போவதை விரும்புவதில்லை. கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல இயங்கும் படைப்பாளிகள் தவிர்ந்த ஏனைய படைப்பாளிகள் எல்லையற்ற சுதந்திரத்துடன் சிறகு கட்டிப் பறக்கவே விரும்புவர்.

இது அவர்கள் அவாவாக இருந்தபோதும், அவர்கள் படைப்புகளை ஊன்றிப் படிக்கும் தேடுதல் கொண்ட வாசகனுக்கு படைப்பாளியின் சுயஅடையாளத்தை கண்டு கொள்வது சிரமமானது அல்ல.

‘இயல்தல் ஒன்றே’ கவிதையில் தன்னை இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்.

‘அயலவர் உறவுகள் என்ற கிளைவிடுதல் இல்லாத சுயநடைபயிலி’

என்று விபரிக்கிறார்.

உண்மைதான் படைப்புலகைப் பொறுத்த வரையில் அவர் ஒரு சுயநடைபயிலி தான். அவரது படைப்புகள் பெரும்பாலும் இதுகாலம் இருந்து வந்த கலைவடிவங்களை உடைத்துக் கொண்டு காலத்தை முந்திக் கொண்ட படைப்புகளைத் தர முனைவதால் இலக்கியக் கூறுகளின் முன்மாதிரி உதாரணங்களை உருவாக்குகிறது.

ஆனால் அக்கவிதை அதற்கு மேலும் சொல்கிறது.

‘நான் பிறந்ததும் இல்லை இறந்ததும் இல்லை! வாழ்ந்ததும் இல்லை பாழ்பட்டதும் இல்லை! இயல்தல் ஒன்றே’

என்கிறார். அதாவது தான் இறப்புப் பிறப்பு அற்ற ஆன்மா என்று கூறுகிறார் போலும். இங்கே மெய்யுள் பேசும் ஆத்மீகத் தளத்தை இனங்காட்டுகிறது.

இறுதியாகச் சொல்வதானால் மு.பொ வின் சூத்திரர் வருகைக்குள் நுழைந்த எனக்கு இனிமையான, மனநிறைவளிக்கும் அனுபவம் கிட்டியது. காரணம் அவரது படைப்புலம் விஸ்தாரம் கொண்டது. அவரது கற்பனைகளும் வார்த்தைகளும் எல்லைகளை மீறிப் பிரவாவிப்பதுடன் புதிய தளங்களுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது.. தன்னிரு கண்களால் முழு உலகையும் அளக்கிறார், கைகளால் பிரபஞ்சத்தையே துளாவுகிறார்,

ஆனால் எங்கு சென்ற போதும் பூமியிலேயே கால் பதித்து நிற்கிறார். ஆனால் அதற்கு மேலாக தன்னுள் ஆழ்கிறார், தன் சுயத்துள் மூழ்குகிறார். வாசகனான என்னையும் கூடவே கைகோர்த்து இணைத்துச் செல்ல முனைகிறார். என்னை என்னுள் கரைய வைத்து என் இனிய நினைவுகளையும் சோகங்களையும் மீட்டுணர வைத்தது. நீங்களும் மூழ்குங்கள் உங்கள் நினைவில் கரைந்த முத்துக்களை நீங்களும் மீட்டெடுத்து மகிழ்வீர்கள்

எம்.கே.முருகானந்தன் (இலங்கை)

இந்நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...