Tuesday, November 26, 2024

மாவீரர் நாமம் வாழ்க! அவர் தம் தாகம் வெல்க!!

மாவீரர் நாமம் வாழ்க! அவர் தம் தாகம் வெல்க!!

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்.

மாவீரர் நாள் ஈழ விடுதலைப் புரட்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நாளாகும்.ஏனெனில் அந்நாளில் தமது மாபெரும் இலட்சியமான ஈழ விடுதலைக்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் அதே வேளையில், அந் நாளில் எமது புரட்சிப் பயணத்தின் திசை வழியை அன்றைய குறிப்பான உலகச் சூழலில் சரிபார்த்து, புதிய மாற்றங்களை நின்று நிதானித்து ஆய்வு செய்து, கொள்கை கோட்பாடுகளை குறிப்பான திட்டத்தை, முழக்கங்களை வகுத்து நமது வழித்தடம் விலகாமல் எதார்த்தத்தில் ஊன்றி நின்று பயணிக்க நாம் சத்தியம் செய்யும், சபதமேற்கும் நாளாகும். வருடா வருடம் இதற்கே நாம் முயன்று வருகின்றோம்.

மாவீரர் நாள் மக்கள் தம் ஆன்மீக துன்ப துயரங்களுக்கு வடிகாலமைக்கும் நாள் மட்டுமல்ல, அவர்கள் பேரால் தாம் நிறைவேற்ற வேண்டிய தார்மீகக் கடமை குறித்து சபதம் ஏற்கும் நாளும் ஆகும்.மாவீரர்கள் வெறுமனே `இறந்தவர்கள்` ஆக மட்டும் இருந்தால் அவர்கள் மனிதர்களாக உடல் புதைக்கப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள், மாவீரர்களாக வித்துடல் விதைக்கப்பட்டவர்களாக இருந்திருக்கமாட்டார்கள்.அவர்களுடைய இறப்பை ஒரு இலட்சியம் அலங்கரிக்கின்றது. அதனால் தான் ``இலங்கையருக்கு`` அவர்களது புதை குழிகள், வதை குழிகளாக உள்ளன!

ஆக இந்த ``இறந்தவரை நினைவு கூர்தல்`` என்கிற `பேய்க்கதை`யை சம்பந்தப்பட்டோர் முதலில் நிறுத்த வேண்டும். நாம் இறந்தவரை மட்டும் நினைவு கூரவில்லை அவர்கள் சுமந்து சென்ற இலட்சியத்தையும் சேர்த்தே நினைவு கூருகின்றோம்.இது எமது தேசிய உரிமை.இது எவரும் தர வேண்டியதுவுமல்ல, எவரிடமிருந்தும் நாம் பெற வேண்டியதுவுமல்ல. இது எம்முடையது. ஒடுக்கப்படும் தேசத்துடையது.இதை எவரும் தடுக்க முடியாது, பறிக்க முடியாது. எங்கும் இன்றும் நாம் உரத்துச் சொல்வோம். 

என்றும் போல் இன்றும் நமது மாவீரர் தினக் கடமை அதுவே ஆகும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!


ஈழ தேசியப் பிரச்சனைக்கு இன்றும் தீர்வு பிரிவினை தான்.ஈழ விடுதலைப் புரட்சி தொடரப்பட வேண்டியது அவசியம் தான். ஆனால் எல்லா சமூக நடவடிக்கைகளையும் போலவே புரட்சி என்பதும் ஒரு விஞ்ஞானச் செயலாகும். அதை அக வய விருப்பத்தில் இருந்து செய்ய முடியாது, புற வய அவசியத்தில் இருந்து மட்டுமே செய்ய முடியும். 

ஈழ விடுதலைப் புரட்சியின் சமுதாய அவசியம் என்ன?

இக் கேள்விக்கான பதிலை புற வய நிலைமைகள் குறித்த விஞ்ஞான ஆய்வின் மூலமே கண்டறிய முடியும்.

இலங்கை பூகோள ரீதியாக ஒரு தீவு எனினும் அரசியல் ரீதியாக அது ஒரு தனித் தீவு அல்ல.அது முழு உலகச் சூழலோடும் பல்வேறு கண்ணிகளால் பிணைக்கப் பட்டுளது.உலகின் அரசியல் பொருளாதார பூகோள அமைப்பின் ஒரு அங்கமாகவே உள்ளது.

உள் நாட்டில் அண்மையில் ஒரு புதிய ஜனாதிபதியும், புதிய நாடாளமன்றமும் உருவாகியுள்ளது.இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் விரைவில் வகுக்கப்படவுள்ளது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்திலிருந்து மீள IMF இன் ஆலோசனைப்படி மீட்சி முயற்சிகள் நடை பெற்று வருகின்றது.

உலகளாவிய வகையில், அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்ற ரொனால்ட் ரம்பின் ஆட்சி விரைவில் பதவியேற்கவுள்ளது.

ரம்பின் ஆட்சி உலக நிலைமையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

1) உள் நாட்டில் தேசிய சிறுபான்மைச் சமூகங்கள், இஸ்லாமியர்கள், குடியேற்ற சமூகத்தினருக்கு எதிராகவும், பொதுவாகவும் ஜனநாயக விரோத அடக்குமுறைகளின் அதிகரிப்பு;

2) NATO ஐரோப்பிய யூனியன் உறவில் நெருக்கடி;

3) உக்ரைன், பாலஸ்தீன யுத்தங்களில் பாதகமான தாக்கம்;

4) ரசிய,சீன,ஈரான் உறவில் விரிசல்

5) உலக வர்த்தகம்,மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு;

சுருங்கச் சொன்னால் உலக மறுபங்கீட்டு முரண்பாடும், பாசிசமும் கூர்மையடையும் போக்கை ரம்ப் ஆட்சி மேலும் தீவிரப்படுத்துவதாக அமையும்.

இவை கூட உலக தழுவிய பொது மாற்றங்களுக்கு உட்பட்டவையே ஆகும். உலக தழுவிய பொது மாற்றங்களைப் பொறுத்தவரையில்  அடிப்படையாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உருவாக்கி நிலை நிறுத்தப்பட்டு வந்த உலக ஒழுங்கமைப்பு தகர்ந்து வருவது மிக முக்கியமும் முதன்மையானதுமாகும்.

1) ரசிய சமூக ஏகாதிபத்திய வீழ்ச்சிக்குப் பிந்திய அமெரிக்கா தலைமையிலான  ஒற்றைத் துருவ உலக அமைப்பின் தகர்வு;

2) அமெரிக்காவுக்கு எதிராக ரசிய, சீன ஏகாதிபத்திய முகாமின் தோற்றமும், ஆதிக்கப் போட்டியும்;

3) ஈரான், துருக்கி,எகிப்து,இந்தியா,பிரேசில்,பாகிஸ்தான் போன்ற பிராந்திய ஆதிக்க, விரிவாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய உறவில் ஏற்படும் நிலை மாறு நிலை;

4) ஐ.நா சபை, நிதி மூலதன நிறுவனங்கள், இராணுவ கூட்டுக்களின் ஆதிக்கத்துக்கு எதிரான புதிய சவால்கள்

சுருங்கச் சொன்னால் Rule Based Order இன் தகர்வுக்கு உட்பட்டுத்தான் அமெரிக்கா (ஐரோப்பா) வின் உள் நாட்டு மற்றும் உலகளாவிய மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த Rule Based Order இன் தகர்வையும்,உலக மறுபங்கீட்டு முரண்பாடும், பாசிசமும் கூர்மையடையும் போக்கையும் தற்கால பொருள் உற்பத்தி முறை தீர்மானிக்கின்றது. அதன் கூறுகள் ஆவன:

1) பொருளாதார உலகமயத்தின் தோல்வி

2) நவீன உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், அபரிமித உற்பத்தியின் தேக்கமும்,

3) உலக மய பொருள் உற்பத்தியின் விளைவாகத் தோன்றிய நிதி மூலதன மாபியாக்களின் பிடியில் அரசதிகாரம் சிக்குதல்,

4) ஒரு நாட்டின் சமூக வர்க்கங்கள் அவர்களது - அரசதிகாரம்- கட்சிகள், இந்த  நிதி மூலதன மாபியாக்களின் தொண்டு நிறுவனங்களாக மாறுதல்.

5) இதன் தவிர்க்க இயலாத அவசியமாக, தர்க்க ரீதியாக நாடாளமன்ற ஜனநாயகத்தை பாசிசம் பிரதியீடு செய்தல்.

இவையே இன்றைய உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் அடிப்படைக்காரணிகள் ஆகும்.

பிராந்திய நிலை

இவை பிராந்திய உறவுகளில் செல்வாக்குச் செலுத்துவதன் விளைவாக நாடுகளுக்கிடையேயான, உறவுகளும் மாற்றம் பெறுகின்றன. இந்த Geo Politics என்பது நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்க்கப் போராட்டம் தவிர வேறெதுவும் இல்லை.``பொதுவான உலகின்`` ஆதரவாளர்களான குட்டிமுதலாளிகள் இதை எவ்வளவுதான் புரிந்து கொள்ளத் தவறினாலும்,அல்லது தெரிந்து பூசி மெழுகினாலும் இது தான் உண்மை!

மத்திய ஆசியாவில் ஈரானின் பிராந்திய ஆதிக்கத்துக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மோதல் புற வயமாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. ஆனால் தென் ஆசியாவில் இந்தியாவின் பிராந்திய மேலாண்மை -விரிவாதிக்கம்- இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் ஈழ விடுதலைக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகமய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பல படி முன்னேறியுள்ளது.அமெரிக்காவுடனான அதன் பேரம் பேசும் ஆற்றல் அதிகளவுக்கு வளர்ந்துள்ளது.இப்போதும் இந்தியா தென் ஆசியாவிலும்,இந்தோ பசுபிக் பிராந்தியத்திலும் அமெரிக்காவின் `யுத்த தந்திரக் கூட்டாளி` யாக உள்ள போதும் கூட, குறிப்பாக இலங்கையை அமெரிக்காவின் பிடியில் முழுமையாகக் கொடுக்காது.இந்திய இலங்கை ஒப்பந்தம் இதை உறுதி செய்துள்ளது.

இதனால் உண்மையில் இலங்கை மீதான அந்நிய ஆதிக்கம் மும்முனை கொண்டது.

இந்த மூன்று ஆதிக்க சக்திகளுக்கும் ஈழ விடுதலைப் புரட்சி எதிரானது என்பதால் அது கூட்டாக நசுக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் நடந்தேறியது.

அது முடிந்ததும் முரண்பாடு இலங்கை ஆளும் கும்பலுடன் ஏற்பட்டது.சீன உறவைக் காரணம் காட்டி ராஜபக்ச ஆட்சி இந்தியாவால் கவிழ்க்கப்பட்டது. அமெரிக்க படைத்தளம் அமைக்க மறுத்ததால் (SOFA),  கோத்தா ஆட்சி அமெரிக்காவால் கவிழ்க்கப்பட்டது. ஈழ தேசிய ஒடுக்குமுறை யுத்தக் கடனால் உருவான வங்குரோத்து நிலையை எதிர்த்த அறகளைய இதற்கு துணை போனது.

ரம்பின் ஆட்சியில் உலக மறுபங்கீட்டு முரண்பாடு மேலும் கூர்மையடையும், உலகப் போருக்கான தயாரிப்பு வலுவடையும், இலங்கையில் இது ஒரு அந்நிய இராணுவத் தளப்பிரச்சனையாக உருவெடுக்கும்.

இலங்கை நிலை:

இத்தகைய ஒரு உலக,  பிராந்திய சூழலில் தான் இலங்கையில் ஒரு புதிய ஆட்சி அமைந்துள்ளது.

இந்த ஆட்சி JVP/NPP கூட்டால் சர்வவல்லமை மிக்க ஜனாதிபதியாலும், ஏறத்தாழ 70% அறுதிப் பெரும்பான்மை உள்ள நாடாளமன்ற அரசாங்கமாகவும் அமையப் பெற்றுள்ளது.

JVP/NPP கூட்டிற்கு என்ன விளக்கமும் வியாக்கியானமும் அளிக்கப்பட்டாலும், அமைப்பு ரீதியாக அது எப்படி இருந்தாலும், NPP என்பதற்கு JVP இலிருந்து பிரிந்த தனித்த தத்துவமோ திட்டமோ, அரசியல் கொள்கை கோட்பாடுகளோ இல்லை.அதிக பட்சம் இது  JVP இன் ஒரு பரந்த முன்னணிதான் அதனால் இது  JVP தான்.

இந்த ஆட்சி அமைவதற்கு ஆரம்பமாய் அமைந்த ஜனாதிபதித் தேர்தலிலேயே  JVP தனது பழைய `கீர்த்திகளை` மூடி மறைப்பதற்கான திரையாக NPP ஐப் பயன்படுத்தியது. அது ஒரு தேர்தல் தந்திரம் என்கிற வகையில் வெற்றியும் அளித்துள்ளது.ஆனால் இது சந்தர்ப்பவாதத்தின் ஆரம்பமாகும்.

இவ்வாறு ஆட்சி அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொண்ட JVP, ஆரம்ப சில மாதங்களிலேயே தனது வாக்குறுதிகளைக் கைவிட்டு விட்டது.  

தேசிய நெருக்கடி குறித்த பொது விவாதத்துக்கும், பொது வாக்கெடுப்புக்கும் போராடுவோம்!

1) தனக்கு முந்திய IMF, அதானி ஆட்சியின் பிடிமானத்தை தகர்க்கவில்லை,ஏன் தளர்த்தக் கூடவில்லை.மேலும் அநுரா ஆட்சி பேசும் அ) ஏற்றுமதிப் பொருளாதாரம் ஆ) கல்விச் சீர்திருத்தம் இ) விவசாய சீர்திருத்தம் அனைத்தும் அந்நிய நிதி மூலதனத்துடனும், தொடர் காலனிய அடிமைத்தனத்துடனும், இந்திய விரிவாதிக்கத்துடனும் பின்னிப் பிணைந்த கொள்கைகளாகவே உள்ளன.எந்தச் சுத்தமும் செய்யப்படாத அதே பழைய 76 ஆண்டு கால அசுத்தங்களாகவே உள்ளன.

2) தேசியப் பிரச்சனையை அநுரா ஆட்சி முன்வைக்கும் முறை, `` தேசியப் பிரச்சனை என்று ஒரு பிரச்சனையே இல்லை`` என்கிற ஜே.ஆர்.கால நிலைப்பாடாகவே உள்ளது.கலவரங்களால் காயப்பட்ட வலியும், யுத்தம் எடுத்த பலியும், பயன் படுத்த இயலாத மொழியும், நூலக எரிப்பின் விளைவான பழியும்......என, கடந்தகால தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் உருவாக்கிய உதிரி உதிரியான சம்பவங்களின் கோர நினைவுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சமூகம் போல மிகவும் கருணை உணர்வுடன் தேசியப் பிரச்சனை சித்தரிக்கப்படுகின்றது.மேலும் மிகவும் பழக்கமான, பாசிச `நாம் இலங்கையர்` முழக்கம் முன்வைக்கப்படுகின்றது.

இவை இரண்டும் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கு எதிரானவை ஆகும். இலங்கை மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பது ஆகும். எனவே இதிலிருந்து தன்னை ஒரு அரசு என்கிற முறையில் தற்காத்துக் கொள்ளும் கவசத்தை அநுரா ஆட்சி தேடிக் கொள்ள வேண்டும்.

3)  பயங்கரவாதச் சட்டத்தை நாடாளமன்றம் முடிவு செய்யும் என்கின்றது. 

4) அரசியல் அமைப்புத் திருத்தம், ஜனதிபதி ஆட்சி முறை, பயங்கரவாதச் சட்டம் அனைத்தையும் `திருத்தப்` போகின்றது நாடாளமன்றம். தர்க்க ரீதியாக இந்த திருத்தங்கள் ஒடுக்குமுறைக் கருவிகளின் அதிகார வலிமையைக் கூட்டுமே ஒழிய எவ்வகையிலும் குறைக்காது. ஏனெனில் அத்தகைய ஒரு அடக்குமுறை எந்திரம் இல்லாமல் IMF, அதானி ஆட்சியை கட்டிக் காக்க இயலாது.

5) ஆட்சி அமைத்த கையுடனேயே `பெளத்த சாசனத்துக்கு` தனியான அமைச்சு உருவாக்கியுள்ளது, அநுரா ஆட்சி.

6) மேலும் போலித் தேர்தல் பெறுபேறுகளைக் கொண்டு `வடக்கு மக்கள் இனவாதத்தைக் கைவிட்டு விட்டார்கள்`, இனி `போர்க்குற்றம்` `சர்வதேச விசாரணை` எல்லாம் வேண்டத்தகாதது என பெருந்தேசிய வெறியைக் கக்குகின்றது. 

7) மேலும் முக்கியமாக சர்வதேச முரண்பாடுகள் உலக மறுபங்கீட்டின் மூலம் தமது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விளைகின்ற நெருக்கடி தீவிரமடைந்த நாட்களாக இன்றைய நாட்கள் உள்ளன.இந்த உலக மறுபங்கீட்டுச் சேவகத்துக்கும் அத்தகைய ஒரு அடக்குமுறை எந்திரம் அவசியத் தேவை ஆகும்.

இவ்வாறு சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்கள பெளத்த பெருந்தேசிய வெறிப் பாசிசமுமே JVP  என்பதை மீண்டும் அனுரா அரசு நிரூபித்து விட்டது.

அனுரா ஜனாதிபதியானதும் ஜனாதிபதி ஆட்சி முறை சுத்தப்படுத்தப் பட்டுவிட்டது, இனி ``நாடாளமன்றத்தைச் சுத்தப்படுத்த திசை காட்டியால் நிரப்புவோம்`` என ஜே.வி.பி. தந்திரமாக முழங்கி  நாடாளமன்றத்தை ஏக போகமாக்கிவிட்டது. 

இந்நிலையில் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை மீது உலக மறுபங்கீட்டு ஆதிக்கப் போட்டி ஆரம்பித்துவிட்ட சூழ்நிலையில், ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு அளப்பரிய முக்கியத்துவம் உடையவை ஆகும்.

1) இலங்கையை SOFA உடன்படிக்கைக்கு இணங்க வைக்க அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகின்றது.ரொனால்ட் ரம்பின் தேர்தல் வெற்றி இதை மேலும் தீவிரப்படுத்தும்.

2) இந்திய இலங்கை ஒப்பந்தம் அமூலில் உள்ளது. இலங்கை (ஈழ)க் கடலில் இந்தியர் மீன் பிடிப்பதை தடுக்கக் கூடாது  என இந்தியா வலியுறுத்துகின்றது. ஒட்டுமொத்த இலங்கைக் கடல் பிராந்தியம் மற்றும் கடல் வளத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றது.

3) IMF, FDI அந்நிய நிதிமூலதன கந்துவட்டி, நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது.இது மேலும் தொடர்கின்றது.உபரி வெளியேறுகின்றது, தேசிய மூலதனம் திரள்வதில்லை.

4) இலங்கையில் தேசிய சமத்துவம் இல்லாமையானது அந்நியர் உட்புகுவதற்கு வழிகோலி வருகின்றது.

5) போர்க்கால 30 ஆண்டுகளைக் காட்டிலும், போர் ஓய்ந்த 15 ஆண்டுகளில் தான் நாடு ஒரு பெரும் `தேசிய நெருக்கடிக்குள்` சிக்குண்டுள்ளது.

இலங்கை எதிர் நோக்கும் முக்கிய பிரதான தீவிரமான பிரச்சனைகள் ஒரு தேசிய நெருக்கடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளன.இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுத்துவருகின்றனர்.

இப்பிரச்சனைகள் குறித்த பிரக்ஞையை உருவாக்க நாடளாவிய விவாதமும் கருத்துக் கணிப்பும் தேவை.அத்தகைய மக்கள் பலம் இல்லாமல் எதிரிகளை எதிர்கொள்வது சாத்தியமல்ல.

இதை நாடாளமன்ற பெரும்பான்மை கொண்டு முடிவு செய்ய முடியாது.முடிவு செய்யக் கூடாது.இதற்கு இடைத் தரகர்கள் இல்லாத நாட்டு மக்களின் நேரடி அனுமதி தேவை.

இதனால் தேசிய நெருக்கடி குறித்த பொது விவாதத்துக்கும், பொது வாக்கெடுப்புக்கும் நாம் போராட வேண்டியது அவசியமாவுள்ளது.

இனத்துவக் கும்பலின் 15 ஆண்டுகால பித்தலாட்டம்:

போர் ஓய்ந்த கடந்த 15 ஆண்டுகளில் ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும் `தமிழ்த் தேசியம்` பேசிய இனத்துவக் கும்பல் ஆடிய பித்தலாட்டம் இறுதியாக இந்தத் தேர்தலோடு, ஓநாயின் கையில் அகப்பட்ட ஆடு போல ஈழ தேசத்தை JVP இன் வாயில் திணித்துள்ளது.

அனுரா அரசு `இனி இனவாதத்துக்கு இடமேயில்லை` என்று பொதுவாகப் பிரகடனம் செய்கின்றபோது, அது குறிப்பாக இனவாதம் என்பதாகக் கருதுவது ஈழப் பிரிவினையையே ஆகும்.

இதனால் அனுரா அரசின் Cleaning Sri Lanka திட்டம் இறுதியில் ஈழச் சுத்திகரிப்பிலேயே போய் முடியும்.

எனவே ஈழ தேசிய சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரையில்- ஆறாவது திருத்தம் நீக்கப்படும் வரையில்- அதற்காக ஒடுக்கும் சிங்கள தேசம் உறுதியாக தொடர்ந்து போராட முன்வரும் வரையில் ஈழப்பிரிவினை இயக்கம் நீதியானதும் சரியானதும் ஆகும்.

இந்த இயக்கம் மட்டுமே, தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தொடர்காலனிய பாசிச இலங்கை அரசை தகர்த்து ஜனநாயக அரசை உருவாக்கும்.இதுவே ஈழ விடுதலைப் புரட்சியின் சமுதாய அவசியம் ஆகும்.

இந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதும், அதற்கான புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுமே இம் மாவீரர் நாளில் நாம் ஏற்கும் சபதமாகும்.   

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

இலங்கை (ஈழம்) 26-11-2024 

----------------------------------------------



No comments:

Post a Comment

மாவீரர் நாமம் வாழ்க! அவர் தம் தாகம் வெல்க!!

மாவீரர் நாமம் வாழ்க! அவர் தம் தாகம் வெல்க!! மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம். மாவீரர் நாள் ஈழ விடுதலைப் புரட்சிப் பயணத்தில் ஒரு...