SHARE

Monday, November 25, 2024

சமரன் - ஏஎம்கே நினைவு நீடூழி வாழ்க!

 

மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் மக்கள் யுத்தம் போல்ஷிவிக்
கட்சியின் நிறுவனருமான தோழர் ஏஎம்கே

நவ-25 - மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் மக்கள் யுத்தம் போல்ஷிவிக் கட்சியின் நிறுவனருமான தோழர் ஏஎம்கேவின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தில் சமரன் தனது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறது. சமரன் குழு ஏஎம்கேவின் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதலில் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஏ.எம்.கே மறைவதற்கு முன்பு ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் பெறும் என வழிகாட்டினார். அவரது லெனினிய தீர்க்க தரிசனம் இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இவ்வாண்டு நினைவுதினத்திற்கு தனது நிலைபாட்டை பின்வருமாறு முன்வைக்கிறது.

பாலஸ்தீன விடுதலை போராட்டம் வெல்க!

பாலஸ்தீனத்தின் மீதான அமெரிக்கா-நேட்டோ- இஸ்ரேல் பாசிசக் கூட்டணியின் இன அழிப்புப் போர் கடந்த ஓராண்டாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 75% சதவிகிதம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். காசா ரத்தவெள்ளத்தில் மிதக்கிறது.

மத்தியக் கிழக்கில் வளர்ந்துவரும் சீன- ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தை வீழ்த்தி தனது மேலாதிக்கத்தை நிறுவவே இந்த பாசிசக் கூட்டணி பாலஸ்தீனத்திற்கு எதிரான ஒரு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்கா 17.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. இஸ்ரேலிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அமெரிக்காவில் 24 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் இஸ்ரேலிய முதலீடு 3 மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 300 அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரேலில் ஆய்வு, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்து செயல்பட்டு வருகின்றன.

ஹமாசிற்கு இராணுவ உதவி செய்து வருகின்ற காரணத்தால் சமீபத்தில் லெபனானின் ஹிசபுல்லா, ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புகளின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. ஹமாசின் முக்கியத் தலைவர்களையும் கொன்றது. லெபனானில் பேஜர் -வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்ளிட்ட லெபனான் மக்களையும் கொன்றது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா, ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தன. ஈரான், இஸ்ரேலுடைய அதி நவீன ஏவுகனை தடுப்பு மையங்கள் மீதே தாக்குதல் தொடுத்து இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மீண்டும் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த அக்டோபர் 26 அன்று இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானில் செயல்படும் சீனாவின் எண்ணெய்-எரிவாயு வயல்கள், அணு நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது; போரில் சீனாவை இழுத்துவிடும் அபாயம் இருப்பதால் பைடன் நிர்வாகம் தலையிட்டு இதை நிறுத்தியது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், சீனா - ரஷ்யா - ஈரான் கூட்டணியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் அமெரிக்கா ஒரு நேரடியான ஏகாதிபத்திய போரை தவிர்க்க விரும்புகிறது. தொடர்ந்து அப்பிராந்தியத்தில் இஸ்ரேலை கருவியாகக் கொண்டு ஒரு மறைமுகப் போரை அமெரிக்கா நடத்த விரும்புவதற்கு காரணமும் இதுவே ஆகும்.

இஸ்ரேலின் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாராமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. கடந்தாண்டு அதனுடைய ஜிடிபி 6.7% சதவிகிதத்திலிருந்து 2% சதவிகிதமாக வீழ்ந்துவிட்டது. இந்நெருக்கடியை இஸ்ரேல் மக்கள் மீது சுமத்தி வருவதால் இஸ்ரேல் மக்களும் நெதன்யாகு ஆட்சிக்கு எதிராக திரும்பியுள்ளனர். நெருக்கடியிலிருந்து மீளவும் சரிந்துக் கொண்டிருக்கும் தனது பிம்பத்தை மீட்கவும் நெதன்யாகு அரசு, பாலஸ்தீனம் என்ற நாடே இருக்கக் கூடாது என்று யுத்தவெறி கொண்டு அலைகிறது. போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஹமாஸ், ஐ.நாவின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் அரசு செவிமடுக்கவில்லை. பொருளாதார

மறுபுறம் சீன-ரஷ்ய ஏகாதிபத்தியங்களும் மத்தியக் கிழக்கில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஈரானைக் கருவியாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. பாலஸ்தீன உரிமை போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டே, இஸ்ரேலுடன் தொடர்ந்து அரசியல் பொருளாதார இராணுவ உறவுகளையும் வளர்த்து வருகின்றன. இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகள் செய்து வருவதில் ரஷ்யா அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 2ம் இடத்தில் உள்ளது. வர்த்தக முதலீடுகளில் சீனா 2ம் இடத்தில் உள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் இஸ்ரேலில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலின் நெருக்கடியைத் தீர்க்கும் விதமாக சீன-ரஷ்ய-இஸ்ரேல் உறவுகள் வளர்ந்து வருகின்றன. சீனா இஸ்ரேலுக்கு சுமார் 20000 தொழிலாளர்களை ஏற்றுமதி செய்துள்ளது.

மத்தியக் கிழக்கில், இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களின் மேலாதிக்க மற்றும் மறுபங்கீட்டு முயற்சிகளும் இஸ்ரேல் ஈரானின் துணை மேலாதிக்க முயற்சிகளும் அப்பகுதியில் மறைமுகப் போர் அதாவது பனிப்போர் நீடித்து வருவதற்கான பொருளியல் அடிப்படையாகும். இதனால் பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்புப் போர் மறைமுக பிராந்தியப் போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் மற்றும் ஈரானுடனான ரஷ்ய சீனாவின் அரசியல் - பொருளாதார - இராணுவ -வர்த்தக உறவின் காரணமாகவும், அமெரிக்க-நேட்டோ முகாம்களின் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் ஒரு நேரடி ஏகாதிபத்தியப் போராக மாறும் நிலைமைகள் இன்று இல்லை.

இவ்வாறாக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான இந்த பனிப்போரில் பாலஸ்தீன விடுதலை பலியிடப்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் மீதான நேட்டோ -இஸ்ரேலின் இன அழிப்புப் போரை ஷாங்காய் கூட்டமைப்பு வேடிக்கைப் பார்த்து வருகிறது; ஏற்கெனவே இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று கூறி வருகிறது. போர் நிறுத்தம் கோருவதும்கூட இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது சந்தை நலன்கள் பாதிக்கப்படும் என்பதால்தானே ஒழிய பாலஸ்தீன விடுதலைத் தேவையிலிருந்து கோரவில்லை. ஹமாஸ் இயக்கத்தை அழித்து காசாவை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதில் இரண்டு ஏகாதிபத்தியங்களும் ஒரே நிலைபாட்டில்தான் உள்ளன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஏகாதிபத்திய மேலாதிக்க நலன்களை புரிந்துக் கொண்டு இராணுவ ரீதியாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் செயல்பட்டால்தான் பாலஸ்தீன விடுதலையை வெல்ல முடியும்.

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு துணைப்போகும் மோடி ஆட்சி

அமெரிக்காவின் தெற்காசிய ஏஜன்டான மோடி அரசு பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதானி - எல்பிட் யுஏவி மூலம் ஆளில்லா போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிஎல்ஆர் சிஸ்டம் (அதானி மற்றும் இசுரேல் வெஃபன் இண்டஸ்ட்ரீஸ் நி நிறுவனத்தின் கூட்டு நிறுவனம்) ஆயுத தளவாடங்களை இசுரேலுக்கு அனுப்பி வருகிறது. சென்னை துறைமுகத்திலிருந்து 27 டன் வெடிமருந்துகள் இசுரேலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுமார் 10000 தொழிலாளர்கள் மோடி அரசால் இசுரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். இசுரேலிய - இந்திய கார்ப்பரேட்களுடைய இந்த மூலதனக் கூட்டணி ஜியோனிச-இந்துத்துவ பாசிச கூட்டாக வெளிப்படுகிறது.

அயலுறவுக் கொள்கைகள் மட்டுமின்றி உள்நாட்டுக் கொள்கையிலும் அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கு ஏற்பவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவை அமெரிக்க ஐரோப்பிய நிதிமூலதன நலன்களுக்கும், அம்பானி அதானி நலன்களுக்கும் முழுவதும் பலியிடுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவ பாசிசத்தைக் கட்டியமைப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது மோடி ஆட்சி

மாநில அரசுகளை விருப்பம் போல் கலைக்கவும், அவற்றை மையப்படுத்தப்பட்ட பாசிச அரசின் உறுப்புகளாக மாற்றவும் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை நிறுவவும், நீடித்த நிலையான ஆட்சி என்ற பெயரில் தங்குத் தடையற்ற கார்ப்பரேட் மூலதன சர்வாதிகாரத்தை நிறுவவும் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாசிசத் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

வக்ஃபு வாரியத்தை ஜனநாயகப் படுத்துவது எனும் பெயரில் அதன் சொத்துக்களை கைப்பற்றி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க வக்ஃபு வாரிய சீர்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்துமத நிறுவனங்களின் நிலக்குவியலை பாதுகாத்துக் கொண்டு வக்ஃபு வாரிய சொத்துக்களை கைப்பற்றுவதானது கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும்.

இசுலாமியர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாக ஹிஜாப் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்ததைத் தொடர்ந்து தற்போது மதரசா பள்ளிகளை மூடத் திட்டமிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது எனும் பெயரில் மதரசா பள்ளிகளை மூடுவதன் மூலம் இசுலாமிர்யகளின் கல்வி உரிமைகளை பறிக்கிறது. இது இந்துத்துவ தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பிரதான அம்சமாக விளங்குகிறது. மதரசாக்களில் மதப் போதனைகள் மட்டுமின்றி அரசு பாடத் திட்டமும் நடைமுறையில் இருக்கும்போது மோடி கும்பல் இதற்கு மாறாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கார்ப்பரேட்களுடைய நெருக்கடியை இந்திய மக்கள் மீது சுமத்தி வருகிறது மோடி ஆட்சி. வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிடிபி வீழ்ச்சி பன்மடங்கு பெருகி வருகிறது. பட்டினிக் குறியீட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இந்தியாவை மாற்றி சீரழித்து வருகிறது; உள்நாட்டில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இத்தகைய பாசிச காட்டாட்சியை நடத்தி வரும் மோடி கும்பலை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய வேண்டியது நாட்டு மக்களின் உடனடி கடமையாகும்.

தேர்தலின்போது, மோடிக்கு எதிராக வீராவாசமாக பேசிய ராகுல்காந்தி தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்குள் பதுங்கிக் கொண்டார். மோடி ஆட்சியினுடைய பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை காங்கிரசு கட்சி. ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்த விவாதத்தில் ப.சிதம்பரம் தற்போதைய அரசியல் சட்டத்தில் இது சாத்தியமில்லை என்றும், 5 சட்டத் திருத்தங்களுக்குப் பிறகே இது சாத்தியம் என்றும் பாஜக ஆட்சிக்கு ஆலோசனை வழங்குகிறார். இது பாசிச திட்டம்; இந்த பாசிச திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று காங்கிரசு கட்சி சொல்லத் தயாரில்லை. காரணம், 1947 -1967 காலக் கட்டங்களில் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை முதலில் அமல்படுத்தியது காங்கிரசு கட்சியே ஆகும்.

பாசிச மோடி ஆட்சியின் தமிழக பிரதிநிதியாக விளங்கும் திமுக அரசு

சாம்சங் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்திய போது திமுக ஆட்சி சாம்சங் நிறுவனத்தின் ஏவல்துறையாக செயல்பட்டு அப்போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது. தொழிலாளர்களை குடியிருப்புகளிலும் பேருந்துகளிலும் தேடித்தேடி வேட்டையாடி கைது செய்தது. தொழிலாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் மு.க.ஸ்டாலின் ஜூனியர் மோடியாகவே செயல்பட்டார். தற்போது போராட்டத்தை தொழிலாளர்கள் விலக்கிக் கொண்ட பிறகும் சாம்சங் நிறுவனமும் சாம்சங் முன்னேற்றக் கழக ஆட்சியும் தொழிலாளர்களை பழிவாங்கி வருகின்றன. 1500 தொழிலாளர்களில் 150 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் சங்கம் அமைக்கும் உரிமை சம்பந்தமான வழக்கில் சாம்சங் நிறுவனம் பதில் தருவதற்கு 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. திமுக ஆட்சியோ சாம்சங் நிறுவனத்தையும் மிஞ்சி 3 வார கால அவகாசம் கேட்டுள்ளது. தொழிலாளர்களை பணிக்கு வர விடாமல் தடுப்பது சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பது என திமுக ஆட்சி தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு சேவைசெய்யும் விதத்தில் அண்மையில் முருகன் மாநாட்டை திமுக ஆட்சி நடத்தியது. அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். காவி காடையர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.

மாநாட்டையும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்துத்துவ தீர்மானங்களையும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல் மனமுவந்து பாராட்டியுள்ளது.

கடந்தாண்டு ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக ஆட்சி இந்தாண்டு ஆளுநர் விருந்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தது. ஆளுநர் விருந்தில் அண்ணாமலை, ஹெச். ராஜா உள்ளிட்ட காவி கழிசடைகளுடன் கூடிக் குலாவியது. கலைஞர் சிலையை திறப்பதற்கு வெங்கையா நாயுடு வருகிறார்; கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத்சிங் வருகிறார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா என்று துரைமுருகனும், ராஜ்நாத்சிங் தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என்று கனிமொழியும் கூறி கருணாநிதித்தனம் செய்கிறார்கள்.

திமுக ஆட்சி பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் மோடி ஆட்சியின் தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக அமல்படுத்தி வருகிறது. தனியார்மய தாராளமயக் கொள்கைகளை நாலு கால் பாய்ச்சலில் செயல்படுத்துவதில் மோடியுடன் போட்டிப் போடுகிறது. போக்குவரத்துத் துறை, விளையாட்டு மைதானம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுடுகாடு தகனமேடை என அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது. ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தியதன் மூலம் உள்கட்டமைப்புத் துறை சிறப்பாக உள்ளது என்று எடுத்துக்காட்டி அமெரிக்க நிதி மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. இவ்வாண்டு துவக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது மட்டுமின்றி அண்மையில் அமெரிக்காவிற்கே சென்று மூலதன பிச்சை எடுக்கிறார் மு.க.ஸ்டாலின். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலும், அமெரிக்கா சென்றபோது சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது திமுக ஆட்சி. மட்டுமின்றி, அதானியுடன் 42000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் திமுக அரசு கையெழுத்திட்டுள்ளது; அம்பானியுடன் சுமார் 60000 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை வழக்கு ஏதும் பதியாமல்மோடி ஆட்சி விடுதலை செய்ததன் பின்னணியில் திமுக ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் இடையில் ஓர் இணக்கமான ஒப்பந்தம் உருவாகியுள்ளது. செந்தில் பாலாஜி விடுதலையான சில தினங்களில் மு.க.ஸ்டாலின் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, உதயநிதியை துணை முதலமைச்சராக்குவதற்கும் ஒப்புதல் பெற்று திரும்பினார். எதிர்க் கட்சியாக இருந்த பொழுது மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் மோடிக்கு வெள்ளைக் கொடி காட்டி தமிழக மக்களுக்கு கருப்புக் கொடி காட்டுகிறது.

இவ்வாறு, உலகமய தனியார்மய - தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவது மட்டுமின்றி இந்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் மோடி ஆட்சியும் மு.க.ஸ்டாலின் ஆட்சியும் ஒரே நிலைபாட்டைக் கொண்டுள்ளன. இந்துத்துவத்தின் திராவிட முகமூடியாக திமுக ஆட்சி விளங்குகிறது. ஆனால், ஆரிய-திராவிட மாயைகளில் மக்களை ஆழ்த்தி பாஜகவுடனான வர்க்க உறவுகளை மூடிமறைக்க முனைகிறது.

சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் அறிவாலயத்தின் நிலைய வித்வானாக செயல்படும் மருதையன் வகையறாக்களும், பாஜக பாசிசத்தின் தமிழக கிளையாக செயல்படும் திமுக அரசை விமர்சிக்கத் திராணியற்று கிடக்கின்றன. ஆனால், திமுகவை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளை வெட்கமே இல்லாமல் பாஜக ஆதரவு சக்திகள் என்று முத்திரைக் குத்துகின்றன. திராவிட சாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசரான உதயநிதியின் ஒப்பனையாளராக மாறிவிட்டனர்.

எனவே, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும், பாசிச மோடி ஆட்சியைத் தூக்கியெறிவதும் ஜூனியர் மோடியான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தமிழின விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதும் நமது முக்கியமான கடமைகளாகும். இக்கடமைகளை நிறைவேற்ற அணிதிரளுமாறு தமிழக மக்களையும் ஜனநாயக சக்திகளையும் சமரன் அறைகூவி அழைக்கிறது.

- சமரன் 

(நவம்பர் 2024 இதழில் இருந்து)

No comments:

Post a Comment

இந்திய மனிதாபிமானம்-மன்னார்க் கடலில் மீன் பிடிப்பது தமிழக - ஸ்ராலின் சம்மாட்டிகளின்- உரிமை!

Navy arrests 17 Indian fishers, seizes two boats in Mannar The Sri Lanka Navy and Coast Guard seized two Indian fishing boats and arrested 1...