SHARE

Tuesday, September 24, 2024

ஜனாதிபதியின் பதவிப் பிரமாண உரை( தமிழ்)

 அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்⍐.

மூலம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு-தமிழ்

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...