வடக்கில் சாந்தனின் புகழுடல் மக்களின் அஞ்சலிக்கு!
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ்த் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.
நாளைய தினமான ஞாயிற்றுக் கிழமையினை(03/03) தமிழ்த் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள `குரலற்றவர்களின் குரல் அமைப்பின்` இணைப்பாளர் முருகையா கோமகன் நாளைய தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து அமரர் சாந்தனிற்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணிற்கு எடுத்துவரப்படவுள்ளது.
நாளை காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.
சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி |
இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment