SHARE

Thursday, February 08, 2024

TamilNet: இஸ்ரேலின் தோல்வியும் ஈழத்தமிழரின் விடுதலைப் பயணமும்

சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி

[TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT]   இவ் ஆவணத்தில் படிமை என்பது `பண்பு` ஆகும்*.

இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு

எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங்கு’ (Rules-Based International Order) என்று விளித்துக் கட்டமைத்து வந்தன. இதற்கு இன்னொரு பெயர் தாராளவாத சர்வதேச ஒழுங்கு (Liberal International Order). இந்த ஒழுங்கு ஏற்படுத்திய ஆழமான வடுக்களில் ஒன்றே தமிழீழ மெய்நடப்பு அரசு மீதான 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு.


ஒரு துருவ உலக ஒழுங்கு (unipolar world order) தனிப்பெரும் உலக ஓட்டமாகக் கோலோச்சிய காலத்தில் (1990-2017) இன அழிப்பு என்ற உச்சக் குற்றத்தை எங்கு அனுமதிப்பது, எங்கு மறுப்பது, எங்கு ஒளிப்பது என்பதை அமெரிக்கா தீர்மானித்து வந்தது.

யூதர்கள் மீது நடைபெற்ற பெருங்குற்றத்தோடு ஏனைய இன அழிப்புகளை ஒப்பிட இயலாது என்ற மன நிலையை அரசியல் சியோனிஸ்டுகள் கொண்டுள்ளனர். இதனால் இந்தச் சொல்லை வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் ஒருபுறம் இயங்கிவந்தனர்.

மறுபுறம், மேற்குலக தாராளவாத மேலாண்மை (Liberal Hegemony) எனும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்த அணிவகுப்பானது, தனது தேவைக்கேற்ப, சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னிய மக்களின் அவலத்திலும், மியான்மாருக்கு எதிராக ரொஹங்கியா மக்களின் அவலத்திலும், சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பு என்ற பார்வையில் குறித்த குற்றங்கள் எடுத்தாளப்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் இடமளித்தது. ஆனால், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைப் பேசாப்பொருளாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது.

அமெரிக்காவின் இந்த வெளியுறவுக் கொள்கைக்கு பலத்த அடியைத் தற்போது தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது இன அழிப்பு என்ற அடிப்படையில் வழக்குத் தொடுத்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது தென்னாபிரிக்காவுக்கு முன்னரே தெரிந்த ஒன்று. இருந்தபோதும், அந்தக் கோபத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்ற துணிவை மாறிவரும் உலக ஒழுங்கு அந்த நாட்டுக்கு வழங்கியிருந்தது.

இஸ்ரேல் காசாவில் புரிவது இன அழிப்பு அல்ல என்றும், அவ்வாறான பார்வையில் தென்னாபிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுத் தகுதியற்றது (meritless) என்றும் கருத்து வெளியிட்ட அமெரிக்காவுக்கு அந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை சர்வதேச நீதிமன்று ஏற்றுக்கொண்டுள்ளமை, ‘விதிகள்-சார்ந்த சர்வதேச ஒழுங்கு’ என்ற கட்டுக்குள் இன அழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டிய சர்வதேச நீதி இனிமேலும் முடக்கப்பட முடியாதது என்பதை முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லிவைத்துள்ள மகத்தான நகர்வாகும்.

கனடா நாட்டின் மொன்றியலில் இருந்து பலஸ்தீனிய பகுப்பாய்வாளர் மொயின் ரபானி 2024 ஜனவரி 27 அன்று யூரியூப் ஒளியலை நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்:



* * *

உலக ஒழுங்கு மாறிவருவதால் ஏற்பட்டுள்ள சூழலில் தனது நலன் சார்ந்த பலப் பரீட்சையாக மட்டும் தென்னாபிரிக்கா இந்த வழக்கை முன்னெடுக்கவில்லை.

உண்மையில், இதற்கான நெறியமைக்கும் முன்தீர்ப்பு (precedent setting) மாற்றம் – அதாவது சர்வதேசச் சட்டத்தில் வழமைச் சட்டமாக (customary law) மாறிய நிகழ்வு – கம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாடு பதினோராயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மியன்மார் அரசு மீது ரொஹிங்யா மக்கள் மீது மியன்மார் இராணுவம் புரியும் இன அழிப்புத் தொடர்பாகத் தொடுத்த வழக்கில் அனைத்து அரச தரப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக சர்வதேச சட்டம் வழங்கும் Erga Omnes partes என்ற கடப்பாட்டை நிறைவேற்றும் பொறுப்பு என்ற அடிப்படையில், ஒரு முக்கிய மைற்கல் நிகழ்வாக, நான்கு வருடங்களுக்கு முன்னர் 2020 ஜனவரி 23 அன்று நிறுவப்பட்டுவிட்டது.

ரொஹிங்யா இன அழிப்பு வழக்குத் தொடர்பான 23 ஜனவரி 2020 அல் ஜஷீரா ஒளிபரப்பு நிகழ்ச்சியிலிருந்து:



TamilNet article (23 December 2019): Tamils learning lessons from ICJ-case against Myanmar, ICC-investigation on Israel

மியான்மார் மீது கம்பியாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அடுத்ததாக பலம் பொருந்திய இஸ்ரேல் மீது ஆபிரிக்கக் கண்டத்தின் முக்கிய நாடான தென்னாபிரிக்கா அதே நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் சர்வதேசச் சட்டம் சார்ந்த இந்தப் படிமை மாற்றம் (paradigm-shift) கெட்டியாகியுள்ளது.

அது மட்டுமல்ல, குறித்த நகர்வுக்கான அறம் நெல்சன் மண்டேலாவின் நிலைப்பாட்டோடு தொடர்புபட்ட விடுதலை அரசியலின் நீட்சியுமாகும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது.

பலஸ்தீனம் விடுதலை பெறாமலும், கிழக்குத் தீமோர், சூடான் உள்ளிட்ட உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் சிக்கல்கள் தீர்த்துவைக்கப்படாமலும், தென்னாபிரிக்க விடுதலை முற்றுப்பெறாது என்று நெல்சன் மண்டேலா 1997 இல் வெளிப்படுத்தியிருந்த நிலைப்பாடு இதற்கான சான்று:

“But we know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians; without the resolution of conflicts in East Timor, the Sudan and other parts of the world.” (மூலம்: 04 டிசம்பர் 1997 - Address by President Nelson Mandela at International Day of Solidarity with Palestinian People, Pretoria)

இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான பின் அமெரிக்காவுக்கு நெல்சன் மண்டேலா சென்றிருந்தபோது, 11 பெப்ரவரி 1990 அன்று மேற்கொண்ட வெளிப்படுத்தலும் இத்தோடு ஒருசேர நினைவுபடுத்தி நோக்கப்படவேண்டியது:



* * *

ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் போரை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மனிதாபிமான அவலம் என்றும், இரண்டு தரப்புகள் இழைத்த சர்வதேசக் குற்றங்கள் என்றும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் மட்டுப்படுத்தியது.

அதே அமெரிக்கா, பலஸ்தீனத்தின் காசா மீதான இன அழிப்புப் போர் தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்புச்சபையை வீற்றோ மூலம் முடமாக்கிவந்துள்ளது.

இந்தப் பின்னணியில் தான், மறைந்த நெல்சன் மண்டேலாவின் வழிவந்த தென்னாபிரிக்கா எந்தவொரு இஸ்லாமியத் தேச அரசும் செய்ய முன்வராத அளப்பரிய துணிவோடும் ஆற்றலோடும் உலக மனச்சாட்சியை ஆழமாகத் தொடும் தனது நகர்வை சர்வதேச நீதிமன்றில் 2023 டிசம்பர் 29 ஆம் நாள் முன்னெடுத்தது.

ஆபிரிக்க நோக்கு நிலையில் இருந்து இஸ்லாமிய நாடுகளை நோக்கி முன்வைக்கப்படும் ஒளியலைப் பார்வை ஒன்று வருமாறு:







இதன் விளைவாக, 2024 ஜனவரி 26 அன்று வெளியான இடைக்கால நடவடிக்கைகள் (provisional measures) தொடர்பான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்போடு தென்னாபிரிக்காவின் வழக்கு இன அழிப்புக் குற்றங்களை அணுகும் உலகளாவிய சட்ட அடிப்படையில் விசாரணைக்குத் தேவையான நம்பத்தக்க இன அழிப்புக் குற்றச்சாட்டாகக் (plausible genocide) கையாளப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




* * *

இவ்வாறு சர்வதேச சட்டத்தில் இன அழிப்புத் தொடர்பான படிமை மாற்றம் ஏற்படுகையில், சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட வேண்டிய படிமை மாற்றம் தொடர்பான ஈழத்தமிழர் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கைத் தீவில் ‘இரண்டு-அரசுத் தீர்வு’ (Two-State Solution) என்ற விடயத்தை இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா பேசாப்பொருளாக்கியது ஏற்கனவே தெரிந்த உண்மை.

ஒரு துருவ உலக ஒழுங்கின் உச்சத்தின் போது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றால் ஒன்றில் விடுதலைப் புலிகளே தாமாக தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படவேண்டும் அன்றேல் அவர்கள் அழியவேண்டும் என்று பிராந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் ஒத்திசைந்து செயற்பட்டன.

பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யசீர் அரபாத்துடன் இஸ்ரேல் 1993 ஆம் ஆண்டு உடன்படவேண்டியிருந்த ஒஸ்லோ உடன்படிக்கைகளை இஸ்ரேல் தனது நகர்வுகள் மூலம் ஆப்பு வைத்து மடைமாற்றம் செய்தது. அதே போன்ற மடைமாற்றத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சமாதான நடவடிக்கை திணிக்க முயன்றபோது, அதை மிக நுட்பமாக மறுத்து இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (ISGA) என்ற திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

Tigers release proposal for Interim Self Governing Authority (01 November 2003)

LTTE issues Communiqué in Oslo (09 June 2006)

TamilNet releases LTTE documents of 2006 talks (31 December 2011)

ஒஸ்லோ உடன்படிக்கையை எப்படித் தான் அமெரிக்க உதவியுடன் தடுத்துக்கொண்டதாக பந்தய ஓட்டக் குதிரையின் வாயிலிருந்து நேரடியாக வெளிப்பட்ட சாட்சியம் போல பெஞ்சமின் நேத்தன்யாகு 2001 ஆம் ஆண்டு சொல்லியது:


இதைப்போலவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையை மிலிந்த மொராகொட போன்றோர் அமெரிக்க உறவோடு ஒருதலைப் பட்சமாக மடைமாற்றம் செய்தனர்.

Wikileaks US Cable: Ranil Wickramasinghe tilts towards US, Moragoda's startling proposal to U.S. officials (29 May 2003)

ஜோர்ஜ் புஷ் தலைமயிலான அமெரிக்காவினதும், சோனியா காங்கிரஸ் தலைமையில் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டு பிரதமராகிய போதான தீக்ஷிற் மீள்வருகையுடனான இந்தியாவினதும் ஒன்றித்த ஆசி இதற்கு அடித்தளமிட்டது.

இதன் விளைவான முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழருக்கான அரசியற்தீர்வு எப்போதோ கிழிந்து உக்கிப்போன 13 ஆம் திருத்தத்தில் மட்டுமே இன்றும் தொங்குவதாக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் – அவை இணைந்து இயங்கினாலும் சரி தனித்தனியே இயங்கினாலும் சரி – போதித்து வருகின்றன.

இதிலே பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தற்போதைய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜய்சங்கர் (தீஷித்தோடு 1987 இல் கடமையாற்றியவர்) ஈழத்தமிழர் தொடர்பாகக் கையாளும் வெளியுறவுக்கொள்கையும் –காங்கிரஸ் விட்ட அதே வழியில் பயணித்து – ஈழத்தமிழர்களுக்குப் பாதகமாகச் செயற்பட்டுவருகிறது.

இந்தப் பின்புலத்தில், எவ்வாறு பலஸ்தீன மக்களுக்கான வாக்குறுதியாக ஐ.நா. வில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு-அரசுக் கொள்கை ஒருதுருவ உலக ஒழுங்கில் வெற்றுப் பேச்சாக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுத், திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீனர்களின் தாயகம் சூறையிடப்படுகிறதோ, அதைப் போல, தமிழீழ மெய் நடப்பு அரசு அழிக்கப்பட்ட பின் ஈழத் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படைகள் சிதைக்கப்பட்டுவருகின்றன.

பலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சிதைத்து இரண்டு இயக்கங்களை பெரும் பிளவாக்கி மோதவிட்ட சூழ்ச்சியை எவ்வாறு இஸ்ரேல் செய்து முடித்ததோ அதைப்போல தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உச்ச நிலையிலும் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை இஸ்ரேல் வழங்கியது.

ஏதோ, முள்ளிவாய்க்கால் தொடர்பாக இஸ்ரேல் இலங்கையிடமிருந்து கற்றுக்கொண்டு காசாவில் இன அழிப்புப் போரை முன்னெடுப்பதாகச் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மை அதுவல்ல. மாறாக, முள்ளிவாய்க்காலைத் தனக்குத் தேவையான முன்னோடிப் பரிசோதனைக் களமாக இலங்கையூடாக இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது என்பதே நடைமுறையில் நடந்தேறிய விடயம்.

அதுமட்டுமல்ல, இலங்கை அரசு ஆரம்ப காலத்தில் இருந்து இஸ்ரேல் மாதிரியை ஈழத்தமிழர் தொடர்பாக நகலெடுத்துப் பின்பற்றிவருகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஜோன் பில்ஜர் (1939–2023) போன்ற ஒரு சில உலக ஊடகவியலாளர்கள் இதை 2009 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருந்தனர்.

Tamils need to be heard - John Pilger (17 May 2009)

இன்றுவரை மத்திய கிழக்குத் தொடர்பாகப் பேசாப் பொருளாயிருந்த இரண்டு-அரசுத் தீர்வு என்பது தற்போது மீண்டும் உலகளாவிப் பரவலாகப் பேசப்படும் பேசுபொருளாகியுள்ளது.

இதைப் போல ஈழத்தமிழர் தேசம் குறித்தும் இரண்டு அரசுத் தீர்வு என்பது மீண்டும் பேசுபொருளாக்கப்படவேண்டும்.

ஒரு துருவ உலக ஒழுங்கு நலிவடைந்து பல்துருவ ஒழுங்கு உருவாகிவரும் சூழலில் அமிலப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சர்வதேசச் சட்டமும் (International Law) உலக மக்களின் கருத்தை உதறித்தள்ளிவிடமுடியாது கருத்திற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ள சர்வதேச அரசியலும் (international politics) படிமை மாற்றத்துக்கு உள்ளாகிவரும் தவிர்க்கப்பட இயலாத நியதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குப் பயமின்றித் தென்னாபிரிக்காவால் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகவும், எங்கோ தொலைவில் இருக்கும் கம்பியாவால் மியான்மாருக்கு எதிராகவும் ஏற்படுத்த இயலுமாயுள்ள Erga Omnes partes கடப்பாட்டை இலங்கை தவிர்ந்த 151 தேச அரசுகளில் ஒன்றால் ஈழத்தமிழர் தொடர்பாக, இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டுமல்ல தேவையானால் சீனாவையும் ரஷ்யாவையும் கூட மீறிச் செய்ய முடியும்.

ஜெனீவாவிலிருக்கும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இன அழிப்பு நீதி தொடர்பான கோடிகாட்டல்கள் எதுவும் வெளிவராது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடுத்துவந்துள்ளன. ஆனால், அங்கு சாதிக்க இயலாததை ஐ.நா. உயர் நீதிமன்றம் என்று வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றில் சாதிக்கச் செய்யத் தேவையான வழி முறைகளை ஈழத்தமிழர் மேற்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனையை பிரபல சர்வதேசச் சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் காலம் தவறாமல் அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறிய போதும் தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவை அணுகுமுறைக்குள் அல்லது எதுவித பலனும் தர இயலாத வேறு கற்பனைகளுக்குள் தமது வளங்களை, அதுவும் அவற்றைக்கூட மிகவும் மட்டுப்படுத்தி, பயன்படுத்திவந்துள்ளன.

Boyle prefers IIIM demand over ICC-referral, says specific reference to genocide essential (07 January 2021)

Professor Boyle calls for BSD Campaign against genocidal Sri Lanka (28 October 2018)

Stopping Sri Lanka's genocide at ICJ, UN- Prof. Boyle (11 March 2009)



இருப்பினும், சாத்தியமில்லை என்பதைச் சாத்தியமாக்குவதே விடுதலைப் போராட்ட அரசியல் என்பதை உணர்ந்து இனியாவது நல்ல ஆலோசைனைகளத் தரம்பிரித்து இனங்கண்டு நம்பிக்கை பெற்றுச் செயலாற்றவேண்டும்.

பதினான்கு வருடங்களாக அறிந்தோ அறியாமலோ செயற்பாடின்றி இருந்த ஈழத்தமிழர்களும், கண்மூடித்தனமாகச் செயற்பட்டுத் தவறாகப் பயணித்துப் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களும், மேற்கினதும் இந்தியாவினதும் இணைந்த அல்லது வெவ்வேறான பலதரப்பட்ட சூழ்ச்சிகளுக்குப் பலியாகியுள்ளோரும் தம் தவறுகளை உணர்ந்து தோல்வி நிலையில் இருந்து வெளிப்பட்டு தம்மைத் தாமே தடவழித் திருத்தத்துக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டும்.

அதேவேளை, ஏற்கனவே காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பலனளிக்கவிடாது தடுத்த உட்காரணிகளால் நலிவடைந்தோர் மீண்டும் உரம்பெற்று இறுதி ஆட்டத்திற்கு எழுந்தாக வேண்டிய வரலாற்றுத் தருணத்துக்குத் தம்மைத் தயார்ப்படுத்தவேண்டிய காலம் இது.

மாறும் உலக ஒழுங்கு தானாக ஈழத்தமிழருக்காக எதையும் கொண்டுவந்து தராது. வாளாவிருந்து ஈழத்தமிழர் எதையும் சாதிக்க இயலாது.

ஆதலால், உலக ஒழுங்கின் மாற்றத்தில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தக்கதாக தேசியக் கொள்கை நிலைப்பாட்டை நங்கூரமிட்டு நிலைப்படுத்திக்கொள்வது வரலாற்றுக் கடமையாகிறது.

* * *

முள்ளிவாய்க்காலின் பின்னான 14 வருடங்களின் பின்னர் தற்போது இந்த தாராளவாத மேலாதிக்கம் தோற்க ஆரம்பித்துள்ளமை மனத் திருப்தியையும் உற்சாகத்தையும் அளிக்கும் நற்செய்தியாகும்.

அமெரிக்காவின் தாராளவாத மேலாதிக்கத்தின் உலகளாவிய கதை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதை ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களும் அரசியலாரும் கருத்துருவாக்கிகளும் சமகால உலகின் முதன்மையான நடப்பியல்வாத (Realism) அரசறிவியலாளரும் பேராசிரியருமான ஜோன் மியஸ்ஹைமர் என்ற அமெரிக்கர் வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்த பின்வரும் மூன்று கருத்துரைகளையும் கிரகிப்பது மிகவும் பலனளிப்பதாய் இருக்கும்.

ஒருவகையில், மியஸ்ஹைமரை விட உலகில் எவராலும் இதை மேலும் தெளிவாகவும் அழகாகவும் விளக்க இயலாது எனலாம்.

நடப்பியல்வாதியான இவரது விரிவுரைகளும் விளக்கங்களும் – இரண்டு அரசுத் தீர்வு தொடர்பான இவரின் மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக்கு அப்பால் – சர்வதேச உறவுகள் என்ற துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளங்கிக்கொள்ளப் பெரிதும் உதவும்.

1. மூன்று மாதங்களுக்கு முன்னர் (23 ஒக்டோபர் 2023) இஸ்ரேல் - ஹமாஸ், உக்ரைன் - ரஷ்யா, சீனா தொடர்பாக அவுஸ்திரேலிய சுயாதீன ஆய்வுகளுக்கான மையத்தில் (CIS) மீயஸ்ஹைமர் வழங்கிய விரிவுரை:


2. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் (29 ஒக்டோபர் 2007) அமெரிக்க இஸ்ரேல் அணைவுக் குழுவின் (Israel Lobby) ஆபத்தை விளக்கும் நூலின் வெளியீட்டோடு மீயஸ்ஹைமர், ஸ்டீபன் வோல்ற் ஆகியோர் கேம்பிரிஜ் விவாத அரங்கில் வழங்கிய விரிவுரையும் கேள்வி-பதிலும்:


3. ஆறு வருடங்களுக்கு முன்னர் (15 நவம்பர் 2017) அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் வழங்கிய தாராண்மைவாத மேலாதிக்கம் பற்றிய 101 விரிவுரை:


* * *

எதிரிகளை விட இரண்டகர்கள் ஆபத்தானவர்கள் என்பது பல போராட்டங்கள் தரும் பட்டறிவு.

ஆனால், இவர்கள் இருதரப்பினரை விடவும் ஈழத்தமிழருக்குள் இருக்கும் "தொடை நடுங்கிகள்" மிகுந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலம் தரும் முக்கிய படிப்பினை.

இன்றைய ஈழத்தமிழர் அரசியல், கருத்துருவாக்கம் உள்ளிட்ட செயற்படுபரப்பு தொடை நடுங்கிகளால் நிரம்பி வழிகின்றது. இரு துருவ உலக ஒழுங்கும் அதைத் தொடர்ந்த ஒரு துருவ உலக ஒழுங்கும் ஈழத்தமிழருக்குள் ஏற்படுத்திய பாதகமான உள்ளிருந்தே முடக்கும் நோய் இதுவாகும்.

சமகால சர்வதேச அரசியலைக் கூர்மையாகக் கிரகிக்கும்போது தான் இந்த நோயின் ஆபத்தான தார்ப்பரியம் புரியும்.

குறிப்பாக, தாராளவாத மேலாதிக்கத்துக்கும் (Liberal Hegemony), அணைவுக்குழு மனநிலைக்குள்ளும் (Lobbyist mindset) சிறைப்பட்டுள்ள இந்தத் தொடை நடுங்கித்தனத்தின் பிடியில் இருந்து முதலில் ஈழத் தமிழர் விடுதலை பெற வேண்டும்.

ஆகவே, இந்த நோயின் மூலம் எது என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. குறிப்பாக இதன் சர்வதேச ஊற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உய்த்துணர்ந்துகொள்வது மிகவும் பயன் தருவதாகும்.

இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு ஈழத்தமிழர் விடுதலைக்குக் குந்தகமாக இருந்துவந்துள்ளது என்பதை ஒப்பீட்டளவில் ஈழத்தமிழர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். இருந்தும், இந்தியா தொடர்பாகக் கூட அமிர்தலிங்கத்தைத் துரோகியாக்கிய இந்திராகாந்தி பற்றிய பார்வையில் ஈழத்தமிழர்களிடையே இன்றும் கணிசமான தெளிவின்மை நிலவுகிறது.

இந்தியாவை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் மட்டுமல்ல பட்டறிவும் கொண்டதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விளங்கியது. இந்தியாவால் தனித்து அழிக்கப்பட இயலாத போராட்ட இயக்கமாக அது கூர்ப்படைந்திருந்தது.

ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இந்தியாவையும் விஞ்சிய தளத்தில் முள்ளிவாய்க்கால் முடிவை நிருணயித்தது.

இந்தப் புவிசார் அரசியல் எவ்வாறு நடைமுறையில் பாரதூரமான வெளியுறவுக்கொள்கையாக இயங்கியது என்பது பற்றிய வரலாற்றுப் புரிதல் பெருமளவு ஈழத்தமிழரிடையே இன்னும் ஏற்படவில்லை.

அந்தப் புரிதல் ஏற்படும்போது தான் முள்ளிவாய்க்காலில் சரணாகதியாகாத போராட்டத்தின் கனதியும், அடுத்த கட்டத்துக்கான பொருள்கோடலும் பொருத்தமாக எடுத்தாளப்படும் சூழல் தோன்றும்.

அமெரிக்காவின் புவிசார் அரசியற் பார்வைகள் பற்றி ஏற்கனவே பலரும் நன்கு அறிந்துள்ளனர். இந்தப் புரிதலுக்கு தமிழீழ விடுதலைப் போரின் உச்சக் காலத்தில் மாமனிதர் சிவராம் பொதுவெளியில் இட்ட அடித்தளம் கணிசமாகப் பங்காற்றியிருந்தது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பின் புவிசார், அரசியல் இராணுவ நகர்வுகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு நகர்த்தவல்ல தலைமை ஈழத்தமிழரிடம் இருப்பதை நன்கு உணர்ந்துகொண்ட சிவராம், அரச, அரச சார்பற்ற சக்திகள் தீர்மானித்துவந்துள்ள ஆபத்தான போக்குகளை எதிர்கொண்டு முன்னேறத்தக்க அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது பற்றிய ஆழமான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த போது, சந்திரிகா அரசின் காலத்தில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய அரச புலானாய்வுத் துறையால் அரசியற் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்.

சிவராமின் படுகொலைக்குப் பின்னர் கணினியில் இருந்து மீட்கப்பட்டு வெளியான கட்டுரை அவரது புரிதல் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

US's strategic interests in Sri Lanka- Taraki (30 July 2005)

தாராளவாத மேலாதிக்க அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்குள் அணைவு அரசியல் மூலம் பலியாகாது ஈழத்தமிழர் விடுதலை அரசியலைக் காக்கும் கருத்தியலை உருவாக்குவதிலும், அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் சியோனிசத்தாலும் இன்ன பிற காரணிகளாலும் ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள தொடை நடுங்கித்தனத்தைப் பிய்த்தெறிவதிலும் இருந்து அடுத்த கட்ட நகர்வு நடைமுறைப்படுத்தப்படவேண்டியது.

* * *
தேசியவாதத்துக்கு எதிரான தனது உலகப் பார்வையாற் தூண்டப்பட்டு, இன அழிப்புக்கு எதிரான நேர்மறையான சமய சார்பற்ற முற்போக்குத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆபத்தாக நோக்கி, தான் பின்னிய சர்வதேச தன்னார்வ வலைப்பின்னல் மூலம் மனித உரிமைக்கும் சன நாயகத்துக்கும் உதவுதல் என்ற போர்வையிற் செயற்பட்டு, பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் புலி-எதிர்ப்புவாதத்துக்கு நிதியூட்டம் புரிந்த நிறுவனங்களிற் பல ஜோர்ஜ் சோரோசிடமிருந்து நிதியுதவி பெற்றவை.

The Guardian: The George Soros philosophy – and its fatal flaw (06 July 2018)

பின்வரும் ஒளியலை விவரணம் ஓர் அமெரிக்க வலதுசாரிப் பார்வையாய் இருப்பினும், இடதுசாரி போல மாயத் தோற்றமளிக்கும் சோரோசை அறியாதவர்கள், அவரின் ஊட்டத்தில் இயங்கும் வலைப்பின்னலை அறிந்து கொள்ளப் பொருத்தமான வகையில் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் இங்கு இணைக்கப்படுகிறது:


* * *
அமெரிக்காவின் அதிகாரபூர்வ வெளியுறவுக்கொள்கையைக் கணிசமாகத் தீர்மானித்த சியோனிசத்துக்குப் பயன்பட்ட இராஜதந்திரத்தின் சிகரமாயிருந்து அண்மையில் நூறு வயதில் மறைந்த அமெரிக்க யூதரான ஹென்றி கிசிஞ்சரும் அவர் வழி வந்தோரும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிந்து தெளிவதன் ஊடாகவும்; சியோனிசத்துக்கு எதிரான அமெரிக்க யூதராயிருந்த போதும் தனது பொருண்மிய வளத்தையும், கருத்தியலையும், தன்னார்வ வலைப்பின்னலையும் அமெரிக்க அரசு போர்களின் ஊடாகச் செய்த உலகளாவிய அரசாங்க மாற்றங்களுக்கு ஈடாகத் தானும் தனது தாராளவாத மேலாதிக்கப் பார்வையூடாக மேற்கொண்டு இன்றும் தொண்ணூறு வயதுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறிதொரு பேர்வழியான ஜோர்ஜ் சோரோஸின் உலகளாவிய திறந்த வலைப்பின்னல் ஈழத்தமிழர்களுக்குள் வளர்த்த புலி எதிர்ப்பு, தேசியக் கோட்பாட்டு எதிர்ப்பு போன்ற போக்குகளை இனங்கண்டுகொள்வதன் ஊடாகவும்; அமெரிக்க சியோனிச அணைவுக்குழு (AIPAC), அதையும் விஞ்சி சியோனிசத்தோடு விவிலேயப் பிணைப்பில் இருக்கும் அமெரிக்கச் சுவிசேசக அணைவுக்குழு ஆகியவற்றையும் அவற்றின் தன்மைகளையும் சரிவரப் புரிந்து கொள்வதன் ஊடாகவும் இந்தத் தொடை நடுங்கித் தன்மையின் மூலங்கள் ஈழத்தமிழர்களுக்குள் எங்கிருந்து புகுந்துகொள்கின்றன என்பதை அடையாளங் கண்டுகொள்ளலாம்.

* * *

ஹென்றி கிசிஞ்சர் பற்றிய சில ஒளியலைப் பார்வைகள்:






* * *

சியோனிச யூதர்களுடன் எவ்வாறு அமெரிக்க கிறிஸ்தவ சுவிசேசக அமைப்புகள் ஒன்றித்துள்ளன என்பது பற்றிய ஆழமான பார்வையும் புரிதலும் ஈழத்தமிழர்களுக்குத் தேவை. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழமாகப் பயணித்துவந்துள்ள கத்தோலிக்கர் இந்த விடயத்தில் ஈழத்தமிழர் தேசத்தின் தேர்ந்த கேடயங்களாகத் தொடர்ந்தும் விளங்கமுடியும்.

மறைந்த சிங்கராயர் அடிகளார், எஸ். ஏ. டேவிட் போன்றோர் ஆரம்பித்துவைத்த முனைப்பில் இருந்து மறைந்த மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப் வரை சுயாதீனமான தளத்தில் நின்றவாறு ஈழத் தமிழர் விடுதலையை நெஞ்சில் சுமந்து பங்காற்றிய கத்தோலிக இயக்கம் மீண்டும் இது தொடர்பில் வலுப்பெற வேண்டும்.

அமெரிக்காவில் சியோனிஸ்டுகள் கையாளும் அணைவுக்குழு அணுகுமுறையைத் தாமும் நகலெடுத்து அதன் மூலம் அமெரிக்காவின் இலங்கைத் தீவு தொடர்பான வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர்களுக்குச் சார்பாக மாற்றிவிடலாம் என்ற சிந்தனை அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் கணிசமானோரிடம் இயல்பான ஒரு தரகு முதலாளித்துவ மனநிலையாக நிலவிவந்துள்ளது. இந்த மனநிலைப் பீடிப்பின் தாக்கத்தினால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஒரு விடுதலை இயக்கம் இன அழிப்புப் போர் ஊடாக அழிக்கப்படுவதற்கு இவர்களும் ஒருவகையிற் காரணமாயினர் என்பது கசப்பான உண்மை.

இஸ்ரேலிய யூதரும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான பிரபல ஊடகவியலாளருமான கிடியன் லெவி 2015 ஏப்ரல் 10 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை:



அமெரிக்க கிறிஸ்தவ சியோனிசம் பற்றி அருட்திரு டொன் வாகனர் 06 மார்ச் 2022 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை:


அதேவேளை, அமெரிக்க யூதராயிருந்தும் சியோனிசத்துக்கு எதிராகவும் மதசார்பற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களின் முற்போக்குத் தன்மையை இனங்கண்டு ஆதரிக்கக் கூடிய மனப்பாங்கைக் கொண்டவராகவும், அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கிய சிந்தனையாளராகவும் மட்டுமல்ல உலகின் முதன்மை வெளியரங்க நுண்ணறிஞராக மிளிர்ந்து மூப்படைந்திருக்கும் நோம் சோம்ஸ்கியை ஈழத்தமிழர்கள் தகுந்த முறையில் அணுகத் தவறிய தொடை நடுங்கித்தனம் குறித்த அசை மீட்டலும் இங்கு அவசியமாகிறது.

அமெரிக்கா ஏன் இஸ்ரேலின் குற்றங்களுக்கு முழுத் துணையாக இருக்கிறது என்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன் நுண்ணறிஞர் நோம் சோம்ஸ்கி கொடுத்த ஆழமான ஒரு விளக்கம்:



ஹாமாசின் தாக்குதலைப் புரிந்து கொள்ளலாமே அன்றி, கண்டிக்க இயலாது என்று பியர்ஸ் மோர்கனுக்கு மறுத்துரைத்துப் பதிலடி கொடுத்த பலஸ்தீனருக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களைப் பதிவு செய்தவரும், நோம்ஸ்கி வழி வந்தவருமான யூதப் பேராசிரியர் நோமன் பிங்கெல்ஸ்ரைன்:


2009 ஆம் ஆண்டின் பின்னர் ஈழத் தமிழரைப் பீடித்துள்ள தொடை நடுங்கி நோயின் பக்க விளைவுகளைக் களைவதை விடுத்து, நோயின் மூலத்தை அறிந்து அதை மாற்றியமைப்பதே காலத்தின் தேவை.

இதற்கான புரிதல்களைப் பெற்று, தொடைநடுங்கித் தனத்தை அறுத்தெறிந்து, கழிவன கழிந்த புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்படுவதற்குரிய அறிவியற் கருத்துருவாக்கம் இன்றி அடுத்த கட்டம் இல்லை.

எதிர்வருங்காலத்து ஈழத்தமிழர் தலைமுறை தொடை நடுங்கிகளைப் போலச் சிந்திக்கப்போவதில்லை.

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிக்கும் துணிவுபெற்ற சமூக மனநிலையை மாறிவரும் உலக ஒழுங்கும் விழிப்புணர்வுபெறும் மக்கள் சமூகமும் விரைவாக ஏற்படுத்திவருகின்றன.

உக்ரைன் போரோடு அமெரிக்காவின் அநீதியான தாராளவாத மேலாதிக்கம் என்ற வெளியுறவுக்கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக அம்பலமாகிவருகிறது. எவ்வாறு வியட்நாம் போரில் இருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட அமெரிக்க மக்கள் பரப்பில் உருவான கருத்துமாற்றம் பெரிதும் உதவியதோ, அதைப் போல தவறான அமெரிக்க வெளியுறவுக்கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டுவரும் கருத்துமாற்றமும் எதிர்கால மாற்றங்களை ஏற்படுத்தும்.

மிகப்பலமாக இவற்றை அம்பலப்படுத்திவருபவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க சியோனிசத்தை எதிர்க்கின்ற அமெரிக்க அறிஞர்களாகக் காணப்படுகின்றனர்.

ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல வெளியுறவுக்கொள்கையின் தவறான தாராளவாத மேலாதிக்கத்தைக் கோட்பாட்டுரீதியாகச் சிதைத்துவருகிறார் பிரபல அமெரிக்க அரசியல் அறிஞர் மியர்ஸ்கைமர்.

இவரைப்போல, அமெரிக்க இராணுவ வட்டாரப் பின்னணியில் இருந்து அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் காரசாரமாக விமர்சித்து உலகளாவிய கருத்துருவாக்கத் தளத்தில் அமெரிக்கக் காலாட்படையின் முன்னாள் கேணல் டக்ளஸ் மக்ரகரும் அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் முன்னாள் புலனாய்வாளரும் ஈராக் தொடர்பான முன்னாள் ஐ.நா. ஆயுதப் பரிசோதகருமான ஸ்கொட் ரிற்றரும் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.

ஸ்கொட் ரிற்றர் (07 நவம்பர் 2023):



கேணல் டக்ளஸ் மக்ரகர் (31 ஜனவரி 2024):


இவர்களைப் பார்த்து ஆதல் உலக ஓட்டங்களைப் புரிந்து, சற்றேனும் துணிவு பெற்று, ஈழத்தமிழரின் தொடைநடுங்கி அணைவுக்குழுச் செயற்பாட்டாளர்கள் தம்மை முன்னேற்றிக் கொள்ளவேண்டும்.

அமெரிக்காவிலுள்ள சியோனிச இஸ்ரேல் லொபியும் சியோனிசத்துக்கு மாற்றான யூத பரோபகாரியின் நிதிமூலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கான ஊற்றுக்களாக இருக்கையில், அதே லொபி வழிமுறையை நாமும் எமது மிகச் சொற்பமான வளங்களைப் பயன்படுத்திக் கையாண்டு மாற்றிவிடலாம் என்ற சிந்தனை, அடிப்படையிலேயே கோளாறான சிந்தனை மட்டுமல்ல, கணக்கியல் ரீதியாகத் தப்பான கணக்குமாகும்.

லொபி வேலைக்குப் புறப்பட்ட ஈழத்தமிழர் செயற்பாட்டாளர் கருத்துரீதியாக எதிர்லொபியாளர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் இதன் விபரீத விளைவாகியுள்ளது. இது தொடைநடுங்கித் தனத்தின் ஆபத்தான தாக்கங்களில் ஒன்று.

‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறி மாறிக் காவடி எடுக்கவேண்டியிருந்த ஒரு துருவ உலக ஒழுங்கின் அழிவில் இருந்து ஈழத்தமிழர் விடுதலை அரசியல் புதிய படிமைக்குள் புத்தாக்கத்தோடு அடுத்த நகர்வுகளை விரிக்கவேண்டும்.

அமெரிக்க, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கத் துணிந்த புதிய தலைமுறை ஈழத்தமிழர் செயற்பாட்டாளரின் வருகை தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும்.⍐
------------
* குறிப்பு ENB: இவ் ஆவணத்தில் படிமை என்பது `பண்பு` ஆகும்

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...