Monday, 19 February 2024

`டெல்கி சலோ`- வெடித்தது மீண்டும் இந்திய விவசாயிகள் போராட்டம்

  • விளை பொருட்களுக்கு ஆதார விலை, 
  • விவசாயக் கடன் தள்ளுபடி, 
  • விவசாயிகளுக்கு ஓய்வூதியம், 
  • மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, 
  • விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து 
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மீண்டும் விவசாயிகள் போராட்டம்

நிவேதா தனிமொழி இந்து தமிழ் 20-02-2024

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. 

தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை
வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - படம் தம்பட்டம்

கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியை செல்லத் தொடங்கினர். 'டெல்லி சலோ' என்ற இந்தப் போராட்டத்துக்குப் பெயரும் வைத்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்களின் நுழைவைத் தடுக்கும் வகையில், முள் வலையங்கள், கான்கிரிட் தடுப்புகள் டெல்லி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கேமரா வாயிலாகக் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. விவசாயிகள் போராட்டம் குறித்தான உளவுத் துறை சமர்பித்த ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில், “6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், டீசல் உள்ளிட்டவற்றுடன் அவர்கள் டெல்லி நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, தலைநகர் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்கின்றனர். நுழைவாயிலில் தடுக்க போலீஸ் முயலும் என்பதை முன்கூட்டியே அறிந்து, முக்கிய நுழைவாயில்களை தவிர்த்துவிட்டு தொலைவில் மற்றும் சாலை வசதிகள் முறையாக இல்லாத என்டரி பாயின்ட்களை பயன்படுத்தி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளது” என தகவல் சொல்லப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு, விவசாயிகள் நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் நீடித்தது. அதுபோன்ற போராட்டத்தைக் கையிலெடுக்க திட்டமிட்டப்பட்டுதான் 6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகிறது. அதையும் மீறி டெல்லியில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் விவசாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர், ” நாங்கள் அரசாங்கத்திடம் மோதுவதற்கு டெல்லிக்கு வரவில்லை. எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கவே போராட்டம் நடத்துகிறோம். ஆனால், அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகிறது” என்றார்.

ஆளும் பாஜக அரசு, தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடுக்கப்படுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பாஜக அரசுக்கு அவர் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறி உள்ளதைப் பாஜக அரசு செய்யவில்லை” என விமர்சித்தார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசினால் நம் நாடு எப்படி முன்னேறும்? விவசாயிகளுக்கு ஆதரவளிக்க பாஜக அரசு தவறிவிட்டது. விவசாயிகள் மீதான கொடூர தாக்குதல்களைக் கண்டிக்கிறேன்” எனப் பேசினார்.

“தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பாஜக அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கி இருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல.

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்படியாக, கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா பேசுகையில், “விவசாயிகளுடன் சுமுகமான தீர்வு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில், விவசாயிகள் போராட்டத்தை நடத்துவது ஆளும் பாஜக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு இணைய தளம்

விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை வீச்சு: சுவர் எழுப்பி பஞ்சாப் அரியானா எல்லையை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

டெல்லி நோக்கி வரும் விவசாயிகள் பேரணியை கலைப்பதற்காக டெல்லி எல்லையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கான்கிரீட் சுவர் எழுப்பி பஞ்சாப்-அரியானா எல்லைகள் மூடப்பட்டதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் இன்றுபோராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

விவசாய அமைப்புகளின் தலைவா்கள் பிடிவாதமாக இருந்ததால் மத்திய அரசு உடன் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவாா்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது

தேசியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் திரண்டனர்.

பஞ்சாப் விவசாயிகள் அரியானா மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க, இரு மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், பதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை மாநில காவல்துறையினா் ஏற்படுத்தியுள்ளனா்.

டிராக்டா்களில் பேரணியாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக ஹரியானாவின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனி படைகளுடன் மாநில காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, அம்பாலா அருகே டெல்லியின் ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராடும் விவசாயிகளை கலைத்தனர்.

இந்நிலையில், பேரணியாகச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் விதமாக அரியானா - பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "பஞ்சாப் மக்கள், தாங்கள் எதிரி தேசத்து மக்களாக கருதப்படுவதைப் போன்று உணர்வதாக", அரியானா மற்றும் மத்திய அரசு மீதுவிவசாயிகள் அமைப்பான கீர்த்தி கிஷான் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கான்கிரீட் தடுப்புச் சுவர்கள், இரும்பு ஆணி வேலிகள் மாநில எல்லைகளில் தடுப்பு அரணாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.பாஜக அரசு மகக்ளை பயமுறுத்த பயங்கரமான சூழலை உருவாக்கி வருகிறது, போராட்டக்காரர்களை நாட்டின் எதிரிகளை போல நடத்துகிறது" என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.⍐


தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! - சாலையில் தடுப்புச்சுவர், ஆணிகளுடன் டெல்லி காவல்துறை


துரைராஜ் குணசேகரன் ஆனந்த விகடன் 02 Feb 2021 


மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்திருக்கும் நிலையில், `குடியரசுத் தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலர் கலவரத்தை ஏற்படுத்தினர்’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காயம்பட்ட காவலர்கள் சிலரும், `தங்களைத் தாக்கியது விவசாயிகள் அல்ல’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் 400-க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்தனர்.

ஆணி வீதி: ஆணிகளைக் கொண்டு தடுப்புச் சுவர் ANI

நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் போராட்டத்தை விவசாயிகள் மேலும் தீவிரப்படுத்த முடிவுசெய்திருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் டெல்லியின் மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அதிக அளவில் விவசாயிகள் குவிந்துவருகிறார்கள். போராட்டத்தை முடித்துவைத்து, விவசாயிகளைக் கலைத்துவிட வேண்டும் என்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

குடியரசு தினத்தன்று நடைபெற்றது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்கின்றனர். அதற்காகப் பலகட்ட முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, தடுப்புகளைக் கொண்டு பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்திவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சிமென்ட் கொண்டு சாலைகளில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். இந்தச் சுவர்கள் எளிதில் உடைக்க முடியாத வண்ணம் கூடுதல் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தடுப்புகளுக்குப் பின்பகுதிகளில் சாலைகளில் ஆணிகளைக்கொண்டு வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணமும் தடுப்புகளைக் காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடுவதாலும், போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் டெல்லியின் எல்லையில் பதற்றம் தொடர்கிறது!

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...