Wednesday, 13 October 2021

இந்திய புதிய வேளாண் சட்டங்கள்-ஒரு ஆவணத்தொகுப்பு

 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஒரு பன்முகப் பார்வை


மோடிஜீப் படுகொலைக்கு ஆளான விவசாயப் போராளிக்கு 
இப்பதிவு காணிக்கை

The Indian agriculture acts of 2020, often referred to as the Farm Bills, are three acts initiated by the Parliament of India in September 2020. The Lok Sabha approved the bills on 17 September 2020 and the Rajya Sabha on 20 September 2020.

The President of India, Ram Nath Kovind gave his assent on 27 September 2020. They inspired the protests against the new acts, which gained momentum in September 2020.

On 12 January 2021 the Supreme Court stayed the implementation of the farm laws and appointed a committee to look into farmer grievances related to the farm laws.

எளிய ஆரம்பம்:

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஒரு இரு முகப் பார்வை

த.கதிரவன் விகடன்

மத்திய பா.ஜ.க அரசு VS  விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும்

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்தநிலையில் சட்டம் என்ன சொல்கிறது, எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

`மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால், ``வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன'' என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டில் எதுதான் உண்மை?

மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுவருகிறது. அவை ஒவ்வொன்றும் ஆதரவு - எதிர்ப்பு எனப் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில், வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை அண்மையில் கொண்டுவந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020

மூன்று சட்டங்களில் முதலில் நாம் பார்க்கவிருப்பது, `விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020' (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).

இந்தச் சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

`இதன் மூலம், தான் விளைவிக்கப்போகும் விளைபொருளுக்கான விலையை விவசாயி முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துகொண்டு, எந்தவித மன உளைச்சலுமின்றி விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்’ என்கிறது அரசுத் தரப்பு. ஏனெனில், சந்தையில் அதிக அளவில் வரத்து இருக்கும் பொருளையே ஒரு விவசாயி விளைவித்திருந்தால், அந்தப் பொருளுக்கான விலை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அதிக செலவு செய்து உழைத்த விவசாயியின் முழு உழைப்பும் இந்தச் சந்தைப் பொருளாதாரத்தால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

இந்தச் சிக்கலை ஒழிப்பதற்காக முன்கூட்டியே ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்துகொள்வதால், விலை வீழ்ச்சி எனும் அபாயத்திலிருந்து விவசாயி பாதுகாக்கப்படுகிறார். விளைபொருளுக்கான விலை உத்தரவாதம் விவசாயிக்குக் கிடைத்துவிடுகிறது என்கிறது இந்தச் சட்டம். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டால், சட்டரீதியான தீர்வுகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகச் சட்டம் சொல்கிறது.

விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் இது போன்று சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் கரும்பு விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கரும்பைக் கொள்முதல் செய்த ஆலைகள், விவசாயிகளுக்கு உரிய தொகையை செலுத்தாததால், பல்வேறு சிக்கல்களும் வழக்குகளும் உருவாகியிருக்கின்றன.

மேலும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவி உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. இப்படியான ஆக்கபூர்வமான விஷயங்களை ஓர் அரசு செய்து தரும்போதுதான், விவசாயி தன் விளைபொருளுக்கான விலையை லாபகரமானதாக மாற்றுவதற்கான வழியும் உருவாகும். ஆனால், விவசாய உற்பத்திக்கான உதவிகளை அரசு நிர்வாகம் செய்யாமல் விலகிக்கொள்ளும்போது, அந்த வேலைகளைச் செய்துவரும் தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. இதன் தொடர்ச்சியாக விவசாயி தன் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் சூழலே தொடரும். ஆக, இந்த ஒப்பந்தச் சட்டம் என்பது, பணம் படைத்தவர்கள் தங்கள் பண்ணை நிர்வாகத்தை அதிகாரபூர்வமாக செய்துகொள்ளவே வழிவகுக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020!

அடுத்ததாக, நாம் பார்க்கவிருப்பது, 'வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020' (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)

`இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும்’ என்கிறது அரசுத் தரப்பு.

விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

அதாவது, வியாபாரிகளும் இடைத்தரகர்களும் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கொடுக்காமல், மிகக்குறைந்த விலையில் வாங்கி வருவதைத் தடுப்பதற்காகவே மாநில அரசால், `ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' கொண்டுவரப்பட்டது.

இந்த ஒ.வி.கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசே நிர்ணயிக்கும். அதன் பிறகு மறைமுக ஏல முறையில் வியாபாரிகள் விளைபொருள்களை ஏலம் எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் விளைபொருளுக்கு நட்டம் ஏற்படாது என்ற உறுதிநிலை விவசாயிகளுக்கு இருந்துவந்தது. `விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை' என்று விவசாயிகள் தொடர்ந்து குறைபட்டு வருவதையறிந்துதான், மாநில அரசே `குறைந்தபட்ச ஆதார விலை' ஒன்றை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்துவந்தது. `இந்தக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தாருங்கள்' என்றுதான் இதுநாள்வரையிலும் விவசாய சங்கங்கள் போராடிவருகின்றன. ஏனெனில், அரசு சாராத தனியார்கள் விவசாயிகளின் விளைபொருளுக்கு அரசின் ஆதாரவிலையைவிடக் கூடுதல் விலை கொடுக்கத் தயங்கியதே இதற்குக் காரணம். இந்தநிலையில், `நேரடியாக தனியார்களிடமே கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளலாம்’ என்று இந்தப் புதிய சட்டம் சொல்வது சாத்தியமற்றது.

ஏனெனில், சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும். எனவே, `இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் அல்ல... பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020

கடைசியாக நாம் பார்க்கவிருப்பது, 'அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020' (Essential Commodities (Amendment) Act 2020).

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியிக்கிறது. அதாவது, பொதுமக்களின் உணவுத் தேவைக்கு அத்தியாவசியமான பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அவற்றைப் பதுக்கிவைப்பதற்கோ அல்லது ஏற்றுமதி செய்யவோ 'அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' தடைவிதிக்கிறது.

ஏனெனில், குறிப்பிட்ட உணவுப் பொருள்களைப் பதுக்கிவைத்து, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பின்னர் அதிக விலைக்குப் பொருள்களை விற்பதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், உள்நாட்டிலேயே குறிப்பிட்ட பொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும்போது, அதே பொருளை ஏற்றுமதி செய்ய நேர்ந்தால், உள்நாட்டின் தேவை மிகவும் அதிகரித்து, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகவும் நேரிடும்.

எனவே, கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் சிலர் செய்துவரும் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்.’

ஆனால், தற்போது மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய `அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020', வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, `மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை’ என்கிறது புதிய சட்டம்.

காரணம்... 'உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருந்துவருகிறது. ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கைவசம் உள்ளன. எனவே, உணவுப் பொருள்களுக்குப் பஞ்சம் இல்லாத இந்தக் காலகட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்ற ஒன்றே தேவையற்றது' என்கிறது அரசு.

அதேசமயம், தோட்டப் பயிர்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட சராசரி விலையைவிடவும் 100 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அல்லது தானியங்களின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்கப்பட்ட சராசரி விலையிலிருந்து 50 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அரசு கட்டுப்பாடு விதிக்கும் சூழல் ஏற்படும் என்கிறது. ஆனாலும், `உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது’ என்ற கூடுதல் தகவலையும் இந்தப் புதிய சட்டத் திருத்தம் சொல்கிறது.

விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும். ஆக, பெரு நிறுவனங்கள் இதுவரை பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் மறைமுக ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

2
Amit Sengupta

This video is on Farm Bill 2020 and we will learn why farmers are protesting against it. Farmers in Punjab and Haryana have been protesting against three bills:-
1. The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill 2020 
2. The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020  
3. The Essential Commodities (Amendment) Bill, 2020
விவசாயிகள் போராட்டம் எதற்காக? புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது?
மயூரேஷ் கொன்னூர்
பிபிசி மராத்தி
11 டிசம்பர் 2020

பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேசத்தின் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் போராட்டத்துக்கும், டிசம்பர் 8 ஆம் தேதி விடுத்த `பாரத் பந்த்' போராட்டத்திற்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். 

நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்று அரசு கூறுகிறது.

இந்தப் போராட்டம் எதற்காக நடக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி நிறைய வாசகர்களுக்கு இருக்கிறது. கூகுள் தேடலில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு எளிய நடையில் நாங்கள் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறோம்.

1. இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்?

வேளாண் துறை தொடர்பாக கடந்த செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன. வேளாண் உற்பத்திப் பொருள்களை, குறிப்பாக கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அரசு படிப்படியாகக் குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்தச் சட்டங்கள் தனியாருக்கு பயன் தருவதாகத்தான் இருக்குமே தவிர, குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள் தான் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

ஏ.பி.எம்.சி. மண்டிகள் நடைமுறை கைவிடப்படும் அல்லது மூடப்படும் அல்லது எம்.எஸ்.பி. முறை கைவிடப்படும் என்பது குறித்து சட்டங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தச் சட்டங்களின் மூலம் களத்தில் இறங்கும் தனியார் துறையினரால் கடைசியில் அந்த சூழ்நிலைதான் உருவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

2019-20 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை மற்றும் உணவு தானியம் கொள்முதல் செய்ததில் விவசாயிகளுக்கு அரசு சுமார் ரூ.80 ஆயிரம் கோடி பணம் பட்டுவாடா செய்தது. அதில் பெரும்பாலானவர்கள் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். தனியார் இத் துறையில் நுழைவதால் உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வது குறையும் அல்லது கைவிடப்படும் என்ற அச்சத்தில், வேளாண்மை அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் ஜூன் - ஜூலை மாதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதே அச்சங்களைக் குறிப்பிட்டு ஹரியாணா விவசாயிகள் செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப், ஹரியாணாவில் மாதக் கணக்கில் போராட்டங்கள் நடந்த நிலையில், மாநிலங்களில் இருந்து அரசியல்வாதிகள் குரல் எழுப்பியும், இந்தப் பிரச்சினை குறித்து போராட்டக்காரர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் முறைப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் டெல்லியின் எல்லையை அடைந்த போது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுடன் அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது. வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

2. அந்த 3 வேளாண் மசோதாக்கள் என்ன? விவசாயிகள் ஏன் அவற்றை எதிர்க்கிறார்கள்?

இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020

விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.

இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏ.பி.எம்.சி.களுக்கு வெளியில் தாங்கள் விற்பனை செய்தால், `சந்தை விலையை' தரும்போது அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று விவசாயிகள் 

கூறுகின்றனர். ஏ.பி.எம்.சி.கள் இல்லாமல் போய்விட்டால், இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் நிலை என்னவாகும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை முறை கிடைக்காமல் போய்விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்த வேளாண்மை முறைக்கு புதிய சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. எனவே விவசாயிகள் இப்போது மொத்த விற்பனை வணிகர்கள், பதப்படுத்தல் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சட்டபூர்வ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். வேளாண் பொருள் சாகுபடி, உற்பத்தி மற்றும் அவற்றை விற்பதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்யும். பேச்சுவார்த்தை மூலம் 
விலைகளை முடிவு செய்து, ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையில் இடைத்தரகர்கள் இல்லை என்பதால், விவசாயிகள் முழு லாபத்தையும் பெற முடியும் என்று அரசு கூறுகிறது.

ஆனால், ஒப்பந்த வேளாண்மை முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகள் எழுப்பும் இரண்டு முக்கிய ஆட்சேபங்கள்: கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனங்களுடன் நியாயமான விலைக்கு பேரம் பேச முடியுமா என்பது முதலாவது விஷயம். அடுத்ததாக, தரம் குறைவாக இருக்கிறது என்று கூறி, விளைச்சலுக்குப் பிறகு தனியார் ஒப்பந்ததாரர்கள் அதை நிராகரிக்க வாய்ப்பு உண்டு என்பதாக உள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்ததன் மூலம் பயறுகள், அவரை வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து அரசு நீக்கிவிட்டது. இந்தப் பொருள்களை பெரிய சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், அதனால் தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டு, விலை ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் அரசு கூறுகிறது.

ஆனால், தனியார் துறையினர் பெருமளவில் இவற்றைப் பதுக்கி வைக்கத் தொடங்குவார்கள், செயற்கையாக பற்றாக்குறை அல்லது பஞ்சத்தை ஏற்படுத்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் பார்ப்பார்கள் என்றும், இதில் உற்பத்தியாளர் தான் பாதிக்கப்படுவார் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். அந்த நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுமே தாங்கள் விளைவிக்க முடியும் என்றும், தங்களுக்குக் குறைவான 

விலைதான் கிடைக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

3. விவசாயிகள் கோருவது என்ன, அவற்றை ஏற்க அரசு எந்த அளவுக்குத் தயாராக உள்ளது?

மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் எந்தத் திருத்தங்கள் செய்வதையும் அவர்கள் விரும்பவில்லை. 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி மூன்றுசட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எம்.எஸ்.பி. விலைக்கும் குறைவாகக் கொள்முதல் செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றும், உணவு தானியங்களை - குறிப்பாக கோதுமை, நெல் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அம்சங்கள் குறித்து விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. தனியார் துறையினரை ஒழுங்குபடுத்தப்பட்ட, வரியுடன் கூடிய கட்டமைப்புக்குள் கொண்டு வரவும், எம்.எஸ்.பி. முறையை தொடர்வது, ஏ.பி.எம்.சி.களை பலப்படுத்துவது குறித்து எழுத்துபூர்வ உறுதி அளிக்கவும் அரசு தயாராக இருப்பதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும், மற்ற தகவல்களும் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் - தனியாருக்கு இடையில் சர்ச்சைகள் எழுந்தால் உதவிக் கோட்ட மாஜிஸ்ட்ரேட் மூலமாக மட்டுமின்றி, நீதிமன்றங்களை விவசாயிகள் நாடுவதற்கான வசதியும் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்தத் 

திருத்தங்களால் மட்டும் விவசாயிகள் திருப்தி கொண்டுவிடவில்லை. இதுவரையில் இதை விவசாயிகள் ஏற்கவில்லை.

4. ஏ.பி.எம்.சி. என்பது என்ன, விவசாயிகள் ஏன் அதுபற்றிப் பேசுகிறார்கள்?

வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிகள் (ஏ.பி.எம்.சி.) பல்வேறு மாநிலங்களில், அவர்களின் மாநில சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் மாநில ஏஜென்சிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் மூலம், ஓர் இடத்தில் தங்கள் விளைபொருள்களை வாங்கவும், விற்கவும் வசதி ஏற்படுத்துவதாக இவை உள்ளன. மகாராஷ்டிராவில் இதுபோல 300கமிட்டிகள் உள்ளன. பிகார் போன்ற மாநிலங்கள் தற்போது இதன் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் பிகார் மாநிலம் தனது ஏ.பி.எம்.சி. சட்டத்தை ரத்து செய்தது.

நாடு முழுக்க புதிய வேளாண் பொருளாதாரத்தை உருவாக்க இதுபோன்ற ஏ.பி.எம்.சி.கள் உதவிகரமாக இருந்தன. இந்த மார்க்கெட்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு மாநில அரசு வரி வசூலிக்கலாம். இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் தொடர்பும் மண்டிகளில் அதிகரித்தது. கடந்த காலத்தில் இந்த நடைமுறைக்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். வழக்கத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. 
மார்க்கெட்களுக்குப் பதிலாக, புதிய தனியார் ஏற்பாடு செய்யப்பட்டால் விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்பாரும் பயன்பெறுவார்கள் என்று அரசு கூறுகிறது.

தங்கள் சேவைகளுக்காக ஏ.பி.எம்.சி. சாதாரணமாக சிறிய சதவீதத்தைக் கட்டணமாக வசூலிக்கிறது என்றால், உத்தேசிக்கப்பட்டுள்ள தனியாரும் ஏ.பி.எம்.சி.க்கு வெளியில் இதே போன்ற கட்டணம் அல்லது சேவை கட்டணம் இல்லாமல் செயல்பட முடியும். குறுகிய காலத்துக்கு தனியார் துறையினர் கவர்ச்சிகரமான விலைகளை விவசாயிகளுக்கு அளிப்பார்கள் என்பதால் ஏ.பி.எம்.சி. மண்டிகள் போட்டியில் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டு, நட்டம் அடைந்து இறுதியில் மூடப்படலாம் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

``ஏ.பி.எம்.சி.களை மூடிவிட வேண்டும் என்று தனியார் துறையினர் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும் அதே அச்சம் தான் இருக்கிறது. ஏ.பி.எம்.சி. மூடப்பட்டால், எம்.எஸ்.பி. நடைமுறையும் போய்விடும்'' என்று 

வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். அப்படியொரு நிலைமை ஏற்படும்போது, மார்க்கெட்டில் தனியார் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள், அவர்களின் தயவில் தான் விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

5. எம்.எஸ்.பி. என்பது என்ன, விவசாயிகள் ஏன் அதுபற்றிப் பேசுகிறார்கள்?

குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) என்ற நடைமுறை, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. வெளிச்சந்தையில் விலை சரிவு ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட எம்.எஸ்.பி. விலையில் வேளாண் விளைபொருளை அரசு கொள்முதல் செய்து கொள்ளும். இதனால் விவசாயிகள் நிதி இழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு வேளாண் விளைபொருளுக்கு நாடு முழுக்க ஒரே எம்.எஸ்.பி. அமலில் இருக்கும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் கமிஷன் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் எம்.எஸ்.பி. விலையை வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்கிறது.

இப்போது 23 வேளாண் விளைபொருள்களை எம்.எஸ்.பி. விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. இருந்தபோதிலும், அரசு அதிக அளவில் கொள்முதல் செய்யும் கோதுமை, நெல் தவிர, மற்ற பொருள்களை தனியாரிடம் எம்.எஸ்.பி. விலைக்கு விற்க முடிவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்கள், ஏ.பி.எம்.சி.க்கு வெளியில் எந்த விலைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அனுமதி அளிக்கிறது. ஆனால், ஏ.பி.எம்.சி.யில் விற்றாலும் அல்லது வெளியில் விற்றாலும் எம்.எஸ்.பி. விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்கின்றனர். அந்த உத்தரவாதம் இல்லாமல் போனால், விலைகளைக் குறைத்து விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அரசு இப்போது மறுத்தாலும், எம்.எஸ்.பி.யை ரத்து செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இது இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

எம்.எஸ்.பி. ரத்து செய்யப்படாது என்றும், அரசின் கொள்முதல் தொடரும் என்றும் பல முறை பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இதுவரையில் அதுகுறித்து எழுத்துபூர்வ உறுதியை அளிக்க அரசு தயாராக இல்லை. முந்தைய சட்டங்களில் எம்.எஸ்.பி. பற்றி எதுவும் குறிப்பிடாத காரணத்தால், புதிய சட்டங்களில் ஏன் அதைக் குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இரு 
தரப்பினரும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

6. பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் ஏன் இவ்வளவு பெரிய அளவில் போராட்டம் நடத்துகிறார்கள்?

தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை பார்த்தால், அரசு 10 சதவீத வேளாண் விளைபொருட்களை மட்டுமே ஏ.பி.எம்.சி. நெட்வொர்க் மூலம் கொள்முதல் செய்கிறது. ஆனால், பஞ்சாப்பில் மட்டும் 90சதவீத வேளாண் விளைபொருட்கள் ஏ.பி.எம்.சி. மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்திலும் இதே அளவுக்கு நடைபெறுகிறது. அதாவது, இந்த மாநிலங்களில் 10 சதவீத விளை பொருட்கள் மட்டுமே வெளிச் சந்தையில் விற்கப் படுகின்றன.

இந்தியா உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்ட 1960களில் இருந்து, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு மானிய விலையில் கலப்பின விதைகளும், உரங்களும், கிணறுகளுக்கு கடன்களும், இதர வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக இவை செய்யப்பட்டன. எனவே, மத்திய தொகுப்பு உணவுப் பாதுகாப்பிற்காக இந்த மாநிலங்களில் இருந்து பெரும்பாலான கோதுமை மற்றும் நெல் கொள்முதலை மத்திய அரசு செய்கிறது.

இருந்தாலும், இப்போது இந்தியாவில் உணவு உற்பத்தி உபரியாக உள்ளது. அரசு பழைய நடைமுறைகளை திருத்தம் செய்ய விரும்புகிறது. நாட்டில் 6 சதவீத விவசாயிகள் மட்டுமே தங்கள் விளை பொருளுக்கு எம்.எஸ்.பி. விலையைப் பெறுகின்றனர் என்றும், அதில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தினர் என்றும் சாந்தகுமார் கமிட்டி கூறியுள்ளது.

இந்த மசோதாக்களுக்கு முன்னதாக, ஜூன் மாதம் அவசரச் சட்டமாக இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தபோது, பஞ்சாப் அரசு மற்றும் பஞ்சாப் விவசாய சங்கத்தினர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஏ.பி.எம்.சி. மண்டிகள் பஞ்சாப்பில் ஐந்து தசாப்த காலமாக நன்றாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஹரியாணாவிலும் இதே நிலை தான் உள்ளது. பஞ்சாப் மற்றும் அருகில் உள்ள ஹரியாணா மாநிலங்களில் ஒரே சமயத்தில் போராட்டங்கள் தொடங்கின.

தங்கள் கோரிக்கைகளை செவிகொடுத்து கேட்கவில்லை என்பதால் கோபம் அடைந்த விவசாயிகள் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் டெல்லியை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். தலைநகர் செல்லும் நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை ஹரியானா காவல் துறையினர் தடுத்த வீடியோக்கள் வெளியான பிறகுதான் மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளன. மசோதாக்கள் நிறைவேறறப்பட்ட பிறகு பிகார், 

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அகில இந்திய கிஷான் சபா மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களும் மசோதாக்களை எதிர்த்து, போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் ராஜு ஷெட்டி, பாச்சு காடு போன்ற விவசாய தலைவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய விவசாய அமைப்புகளும், இந்த மசோதாவில் சில அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. இந்தச் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கானது என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ``சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' (எஸ்.ஐ.எம்.) கூறியுள்ளது. ஆனால், எல்லா புதிய சட்டங்களிலுமே மேம்படுத்தலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற `பாரதிய கிசான் சங்கம்' என்ற மற்றொரு விவசாய சங்கம் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. நாடு முழுக்க பிரதிநிதித்துவம் கொண்ட இந்த அமைப்பு, புதிய சட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மேம்படுத்த வேண்டிய தேவைகள் இருப்பதாகக் கூறியுள்ளது.

7. போராட்டங்களில் இப்போது என்ன நடைபெறுகிறது? அதன் இப்போதைய நிலை என்ன?

போராட்டத்தின் 13வது நாளான டிசம்பர் 8 ஆம் தேதியன்றும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வெளி எல்லைகளாக உள்ள சிங்கு, திக்ரி, படர்பூர், காஜிபூர் எல்லைகளில் முகாமிட்டிருந்தனர். டிசம்பர் 8 ஆம் தேதி நாடுதழுவிய பந்த் நடத்தப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாய அமைப்புகள், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பல விவசாய அமைப்புகள் இதில் பங்கேற்றன. விவசாயிகள் கூடாரங்கள் அமைத்தும், லாரிகள் மற்றும் டிராக்டர்களிலும் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்துக் கொள்கின்றனர். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குத் தேவையான பொருட்களுடன் வந்திருந்தாலும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

டிசம்பர் 8ஆம் தேதி டெல்லியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விவசாயிகள் குழுவினரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துப் பேசினார். அதில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த `பாரத் பந்த்'திற்கு உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதிவழி போராட்டங்கள் நடந்தன. பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாடு முழுக்க பல எதிர்க்கட்சிகள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

8. விவசாயிகளின் போராட்டம் குறித்து சமூகத்தின் இதர பிரிவினரும், உலக நாடுகளும் என்ன கூறுகின்றனர்?

அரசியல் கட்சிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், மாநில நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்துகள் தெரிவித்துள்ளனர். பாடகர் - நடிகர் தில்ஜித் தோசன் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது. பிபிசி பஞ்சாபி விடியோவில் வெளியான மூத்த பெண்மணி குறித்து கங்கானா தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

புதிய வேளாண் சட்டங்கள் `அதானி அம்பானி சட்டங்கள்' என்று கூறியுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், `பத்ம 

விபூஷண்' விருதை திருப்பி அளித்துவிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எ். திண்ட்சா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், தேசிய 

விளையாட்டு பயிற்சியாளர்களும் தங்கள் விருதுகளை திருப்பி ஒப்படைத்துவிட்டனர். ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் `கேல் ரத்னா' விருதை திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அமைதிவழியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக 

உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. கனடா தூதரை வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. பிரிட்டனில் பல எம்.பி.க்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். நியூயார்க் 

டைம்ஸ், தி கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகள் இந்தப் போராட்டங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளன.
வேளாண் சட்டங்கள் என்ன செய்யும்?
 
மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றிய விவாதம் இந்தியா அளவிலும், தமிழகத்திலும் முதன்மையான இடத்தில் உள்ளது. விவசாய பண்ட வர்த்தகத்தில்-ENB- (விற்பனை தொடர்பாக)  அரசு நிறுவனங்களின் பங்கு பற்றி இந்த சிறிய பதிவில் நேரடி அனுபவத்திலிருந்து சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

விற்பனையில் (கொள்முதல்) உள்ள நிறுவனங்கள்

1) அரசு நேரடி கொள்முதல்
2) கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டி விற்பது
3) விற்பனைக்கான முகவராக அரசு நிறுவனங்களான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவது.
4) ஒப்பந்த முறையில் அரசு ஒழுங்கு செய்து சாகுபடி, கொள்முதலைக் கண்காணிப்பது.

1) அரசு நேரடிக் கொள்முதல்

நெல், கோதுமை இரண்டு முதன்மையான உணவு தானியங்களையும் அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை நம்பியே விவசாயிகள் தமது உற்பத்தியைச் செய்யும் நிலை உள்ளது.

அரசின் தற்போதைய நெல்கொள் முதல் விலை ஒரு கிலோ ரூ 19.68. இதுவே தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் ஒரு கிலோவிற்கு ரூ 2.00 முதல் 3.00 வரை விவசாயிக்கு குறைவாகத்தான் கிடைக்கும். ஒரு 

ஏக்கரில் சராசரி 2500 கிலோ நெல் விளைகிறது. இதன் படி ரூ 5000 லிருந்து 7500 வரை விவசாயிகள் அரசு கொள்முதல் மூலம் இலாபம் அடைகிறோம்.

அரசு கொள்முதல் நிலையத்தில் பணம் உடனடியாகக் கிடைக்கும். தனியாரிடம் அப்படிக் கிடைக்காது. உத்திரவாதமும் கிடையாது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுப் பள்ளிகள் தேய்ந்து அழிந்து வருவது போல BSNL மூடப்படுவது போல அரசு கொள்முதலும் இல்லாமல் ஒழியும்.

அரசு கொள்முதல் இல்லை எனில் பொது விநியோக முறை ஒழிக்கப்படும். இது தான் அவர்கள் திட்டம்.
 
2) கூட்டுறவு முறையில் பால் கொள்முதல் மிக முதன்மையான பொருளாக கொள்முதல் செய்யப்பட்டு மதிப்புக் கூட்டப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு முறையில் இயங்குகின்றன.

இதில் தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தை விட குஜராத் ஆனந் கூட்டுறவின் அமுல் மிகவும் முன்னணியில் உள்ளது. அமுல் பன்னாட்டு நிறுவனங்களையே விஞ்சி நிற்கிறது. அமுல் விவசாயிகள் பால் விலையைத் 

தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். குஜராத் உழவர்களின் வாழ்க்கையில் அமுல் கூட்டுறவின் பங்கு மிக முக்கியமானது.

தமிழகத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களைவிட ஆவின் நிறுவனம் தான் விவசாயிகளுக்கு பாதுகாப்பாதானதாக உள்ளது. அரசு பால் விலையைத் தீர்மானித்து கொள்முதல் செய்வதால் தான் 

விவசாயிகள் தனியாரிடம் அதே விலையைப் பெற முடிகிறது.

ஒரு கூட்டுறவு அமைப்பை அரசு கண்காணித்து விலையைத் தீர்மானிக்காமல் இருந்தால் தனியார் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்குத்தான் பால் கொள்முதல் செய்வார்கள்.
 
கொரோனா காலத்தில் ஏற்பட்ட மந்த நிலையால் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்தி விட்டன. அந்த விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது.

கூட்டுறவு சங்கத்தினால் விவசாயிகள் பெறும் சமூக நலன்கள் தனியானது. தாங்களே உரிமையாளர்கள் என்ற உரிமையோடும் இருக்கின்றனர்.

3) ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், விற்பனைக் கூட்டுறவு சங்கங்களும் பல்வேறு வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முகவராக இருந்து விவசாயிகளுக்கு வெளிச்சந்தையை விட இலாபகரமான விலை கிடைக்க உதவுகின்றனர். தேங்காய், தேங்காய் பருப்பு, எள், மஞ்சள், பருத்தி போன்ற விளை பொருட்கள் பெருமளவு அரசு நிறுவனங்களைச் சார்ந்தே விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தது 10% விலையைக் கூடுதலாக அரசு விற்பனையகங்கள் மூலம் பெறுகிறோம். இன்னொரு முக்கியமான அம்சம் பணம் உடனடியாகக் கிடைக்கிறது.
 
இந்த சட்டங்கள் நடப்பிற்கு வரும்போது இந்த அரசு முகமைகள் படிப்படியாக செயலிழந்து நசிந்து அழிந்து விடும்.

4) ஒப்பந்த முறையில் கரும்பு சாகுபடி ஒரு பாதுகாப்பானதும் ஒப்பீட்டளவில் இலாபகரமானதுமாகும். இதில் அரசு கரும்பு விலையைத் தீர்மானித்து விவசாயிகளுக்கு அந்த விலை கிடைக்கச் செய்கிறது.

மகாராஷ்ட்ரத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு கரும்பு சாகுபடி நடக்கிறது. 40க்கும் மேற்பட்ட கூட்டுறவு ஆலைகள் மிகச் சிறப்பாக இயங்கி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கிறது. அங்கு கரும்புக்கான நிலுவை 

தமிழகத்தை ஒப்பிட்டால் மிகச் சொற்பமானது.

தற்போதைய சட்டம் வந்தால் அரசு விலையைத் தீர்மானிப்பதிலிருந்து விலகிக் கொள்ளும். ஆலைகள் வைத்தது தான் சட்டம் என்றாகும். ஆக வேளாண் உற்பத்தியிலும் சந்தைப்படுத்துவதிலும் தற்போதைய 

கட்டமைப்புகளை விவசாயிகளின் பங்கேற்போடு சீரமைக்கப்பட வேண்டும். அது தான் தற்போதைய நிலையிலிருந்து இன்னும் அதிகப் பயனை உழவர்கள் பெற வழிவகுக்கும். 

மாறாக இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் நிறுவனங்களிடம் வேளாண்துறையையும், மக்களின் உணவுப் பாதுகாப்பையும் ஒப்படைப்பது எப்படி சரியாக இருக்கும்?

வேளாண் உற்பத்தியும், வெகுமக்கள் உணவுப் பாதுகாப்பும் நேரடியாகத் தொடர்புடையது.

இன்று நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களை அரசே கொள்முதல் செய்து முடை இருப்பு வைத்துக் கொண்டு பொது விநியோக முறையில் மக்களுக்கு எளிய முறையில் கிடைக்க வழி செய்கிறது. இந்த 

பொது விநியோக அமைப்பு தான் பெரும்பான்மை மக்கள் பட்டினி கிடக்காமல் பாதுகாக்கிறது.

அதே போல நெல், கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விளை பொருட்களை நிலையான விலைக்கு கொள்முதல் செய்து உழவர்களையும் பாதுகாக்கிறது.

மோடி அரசின் புதிய சட்டம் உழவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும் இந்த சமூக பாதுகாப்பிலிருந்து அரசை விலக்கி விடுகிறது. இவைகளைக் கடந்து மாநிலத்தில் பட்டியலிலுள்ள வேளாண்துறையை 

முற்றாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. இது மாநில மக்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் ஒரு சர்வாதிகார அரசியல் நடவடிக்கையாகவும் மாறியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் காசு உள்ளவர்களுக்கு என்று மாறியதைப் போல உணவுப் பொருளும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை வந்து சேரும்.

மக்களுக்கான உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்து அரசின் சமூகப் பொறுப்பை புதிய வேளாண் சட்டங்கள் இல்லாமல் செய்து விடுகிறது. முழுக்க, முழுக்க இலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட 

கார்பரேட் முதலாளிகளிடம் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களையும் நுகர்வோரான வெகுமக்களையும் ஒப்படைத்து விடுகிறது.

மற்ற எல்லாத் துறைகளையும் விட உணவு அளிக்கும் வேளாண் துறையை கார்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பது நாட்டு மக்களை பலி பீடத்தில் நிறுத்துவதற்கு ஒப்பாகும். எனவே புதிய வேளாண் சட்டங்கள் 

உழவர்களின் பிரச்சினை என்பதுடன் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாகவும் மாறிவிட்டது. சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரும் இது குறித்து பேச வேண்டுகிறோம்.

- கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

வேளாண் அவசரச் சட்டங்கள்... மூன்று சட்டங்களால் யாருக்கு லாபம்?
prasanth m | Samayam TamilUpdated: 26 Sep 2020, 8:24 am

எப்படி இந்திராகாந்தி, நெருக்கடிநிலைகால (1975-77) கட்டத்தில் பல மாநில உரிமைகளை பறித்தாரோ, அதைப்போல கோவிட்-19 நெருக்கடிக்காலத்தில் இன்றைய நடுவண் அரசு பறிக்கிறது.​
 
வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சட்டங்களால் யாருக்கு லாபம் என்பதை விளக்கும் வகையில் எழுத்தாளர் பாமயன் ஒரு விளக்கக் கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், “எப்படி இந்திராகாந்தி, நெருக்கடிநிலைகால (1975-77) கட்டத்தில் பல மாநில உரிமைகளை பறித்தாரோ, அதைப்போல கோவிட்-19 நெருக்கடிக்காலத்தில் இன்றைய நடுவண் அரசு பறிக்கிறது” என்று அவர் விளக்குகிறார்.

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து, கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. 
ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், 
அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்த சட்ட முன்வரைவு 
அடுத்தது பண்ணைச் சேவை முன்வரைவு என்று மூன்று வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனால் இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும். இத்தகைய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ஏன் 

நடந்து வருகின்றன. அதன் பின்னணிதான் என்ன?

இந்தியாவின் வேளாண் சந்தை மிகப்பெரியது. ஏறத்தாழ 1658700 கோடி ரூபாய்கள் புரளும் துறை. இந்தியாவின் வேளாண்மையை நம்பி உள்ளவர்கள் 55 விழுக்காட்டு மக்கள். இன்று இவ்வளவு பெரிய சந்தையை பன்னாட்டு அமைப்புகளுக்குத் திறந்துவிட்டுள்ளார்கள். தடைகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன. தேவைக்கான உற்பத்தியில் ஈடுபட்டு வந்தபோது உழவர்கள் சந்தையைப் பெரிதும் நம்பி இருக்கவில்லை. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வேளாண்மையின் ஏற்பட்ட மாற்றம், குறிப்பாக சந்தையை நோக்கிய உற்பத்தி ஏற்பட்டபோது, அதை விற்க வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டார்கள். அப்போது அவற்றை 
முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை சிறப்பாகவும் செயல்பட்டன.

ஆனால் வழக்கம்போல அதில் அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊழல் போன்றவற்றால் சீரழிந்து போகத் தொடங்கின. எப்படி நன்னோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டனவோ அதேபோல இவையும் சீரழிக்கப்பட்டன. இதையே காரணங்காட்டி அவற்றை மூடும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தோடு அவற்றை தனியார்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். 

குறிப்பாக பீகாரிலும் கேரளாவிலும் நடந்த முயற்சிகள் நமக்கு ஒரு பாடமாக மேற்கொள்ளப்பட வேண்டியன. ஆனால் அவற்றால் எந்த நல்ல பலனும் கிட்டவில்லை. தனியார் அமைப்புகள் நன்றாகப் பயன்பெற்றன, உழவர்களுக்குப் பயன் கிட்டவில்லை. இதை தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

குறிப்பாக பீகாரில் திறக்கப்பட்ட தனியார் மண்டிகளால் அறுவடைக்காலத்தில் மிகக் குறைவாக விளைபொருட்கள் வாங்கப்பபட்டன. மக்காச்சோளம் டன் 22000 ரூபாய்களில் இருந்து 13000 ரூபாய்களுக்கு வீழ்ச்சியடைந்தது. இதை வேளாண் பொருளாதார அறிஞர் தேவிந்தர் சர்மாவும் தெரிவிக்கிறார்.

இதைவிடக் கொடுமை பீகாரில் விளைந்த நெல்லைக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பல லட்சம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போய் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு (ஏனெனில் அங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது) விற்றுவிட்டார்கள். பஞ்சாப் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் 
ஏறத்தாழ 5 லட்சம் நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்திகள் வெளிவந்தன. கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பீகாரில் நிறைய உழவர் குடும்பங்கள் புலம் பெயர்ந்தன. இன்று இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் உள்ள பீகார் உடல் உழைப்பாளிகளில் கணிசமானவர்கள் அவர்களே.

கேரளாவில் கோவிட்-19 நெருக்கடியால் அரசு கூட்டுறவு பால் நிறுவனம் இலவசமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பால் வழங்கியது. ஆனால் எந்த தனியார் நிறுவனமும் வழங்க முன்வரவில்லை. இந்த இரண்டு அனுபவங்களும் நம்முன்னால் வந்து செல்கின்றன.

இந்தச் சட்டங்களால் முதலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பஞ்சாப், அரியானா முதலிய நன்செய் வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளே. ஏனென்றால் அதிகமான நீர் வளம், அதிகமான ரசாயன உரங்கள் வீரிய விதைகள் என்று உற்பத்தியை பெருமளவு பெருக்கியதால் கோதுமையும், நெல்லும் அதிக அளவு விளைந்தன.

தமிழத்தில் தஞ்சை மண்டலத்தில் இதே நிலைதான் உள்ளது. அவ்வாறு அதிகமாக உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் பயன்பட்ட உழவர்களும், மண்டி எனப்படும் சிறு கொள்முதல் மையங்களும் பயன்பட்டன. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்களும் பெருமளவில் மண்டிகளை உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. குறிப்பான 7 விழுக்காடு வரை மாநில அரசுகளுக்கு பரிவர்த்தனையில் வருமானம் கிட்டும்.

இந்த சட்டங்கள் வழியாக தனியார் அமைப்புகள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து சந்தையைக் கைப்பற்றுவார்கள். மாநில வருவாயும் தடைப்படும். சிறு குறு மண்டிகள் காணாமல் போகும். 

அரசு முன்வைக்கும் வாதம் என்னவென்றால், உழவர்கள் தங்களது விளைபொருளை எங்கும் கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம் என்பதாகும். அதற்கு புதிய சட்டம் ஒன்றும் தேவையில்லை. ஏற்கனவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களை எங்கும் கொண்டு சென்று விற்பதை யாரும் தடை செய்ய முடியாது. உண்மையில் இந்தச் சட்டத்தின் உட்பொருள், வணிகள் எங்கும் சென்று வேளாண் விளைபொருட்களை 
வாங்கலாம் என்பதாகும். ஆக ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக, உழவர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி பெருவணிகர்களைக் காப்பாற்றும் முயற்சி இது என்றே கூற முடியும்.

அடுத்தாக நிறைய வாங்குவோர் சந்தைக்குள் வரும்போது போட்டி உருவாகி உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். உண்மையில் அப்படி நடக்கவில்லை என்பதற்கு பீகாரும், கேரளாவும் நல்ல எடுத்துக்காட்டுகள். பீகாரில் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. கேரளாவில் அவசரகாலத்தில் கூட தனியார் நிறுவனங்களில் நிறைந்த பாலை புலம் பெயர் மக்களுக்குக் கொடுக்கவில்லை.

நாம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் போட்டி ஏற்படுத்தினால் கட்டணம் குறையும் என்றார்கள். நடைமுறை என்ன? பல நிறுவனங்கள் வருவதுபோல் வந்தன. அவை ஒரே நிறுவனமான ரிலையன்சால் அடித்து நொறுக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளன. இதுதான் நமது வேளாண் சந்தையிலும் நடக்கும்.

குறிப்பான கொரானா அச்சத்திற்குப் பின்னர் வெகு வேகமாக வளர்ந்துவரும் ஆன்லைன் சந்தையான இணையச்சந்தைக்கு ஏராளமான இருப்பு வேண்டும். அந்த பெருமளவு இருப்பு வைக்கும் சூழல் இப்போதுள்ள சட்டங்களின்படி இயலாது. எனவே இதை மாற்றி யாரும் எவ்வளவு இருப்பு வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் என்று இப்போது வந்துள்ள சட்ட வரைவு உறுதி செய்கிறது. எனவே இனி பதுக்கல் என்ற பேச்சே வராது, அதாவது அவர்கள் சட்டப்படி இருப்பு வைத்துக் கொள்வார்கள். விலையை எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்கலாம். யாரும் கேட்ட முடியாது.

ஒரே நாடு ஒரே சந்தை என்ற முழக்கம் அமெரிக்க நாட்டில் உருவான முழக்கம். அமெரிக்காவின் அந்த நடைமுறையை வெட்டி ஒட்டும் வேலையை நமது கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவில் செய்து வருகிறார்கள். வேளாண்மையை அமெரிக்கமயமாக்கும் பணி என்றே கூறலாம். உண்மையில் அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு மேல் தனியார்மயம் நடைமுறையாக்கப்பட்டடு அங்கு பண்ணையாளர்கள் மிகப் பெரும் மானியங்களில் உயிர் வாழ்கிறார்கள். அவர்களது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு கடுமையாகக் குறைந்து வருகிறது. ஏறத்தாழ 1.3 விழுக்காடு மக்கள் தொகையே வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் அங்கு ஈடுபடுகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 42 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பி இருந்தார்கள். அங்கு 9150 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. இந்தியாவில் 3946 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. 

ஏறத்தாழ 78 கோடி மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளார்கள். அமெரிக்காவில் 39 லட்சம் பேர் மட்டுமே வேளாண்மையில் உள்ளனர். அப்படியானால் அந்த மாதிரி எப்படி இந்தியாவிற்குப் பொருந்தும். 

வேளாண்மையை நம்பிய பெருந்தொகை மக்கள் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறினால் எப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கும் என்பதை கோவிட்-19 நமக்குத் தெரிவிக்கவில்லையா? அப்படியானால் நமது வேளாண்மையை பரவலாக உயிரூட்டுவதன் மூலமாகத்தானே பெரும்பான்மையான உழைக்கும் மக்களைக் காக்க முடியும்.

இந்திய அரசியல் சாசனம் வேளாண்மையை மாநிலப் பட்டியலில் வைத்துள்ளது. அந்த உரிமையை இந்த அவசரச் சட்டங்கள் முற்றிலும் மீறுகிறது என்கிறார் பிரீத்தம்சிங் என்கின்ற ஆய்வாளர். எப்படி இந்திராகாந்தி, நெருக்கடிநிலைகால (1975-77) கட்டத்தில் பல மாநில உரிமைகளை பறித்தாரோ, அதைப்போல கோவிட்-19 நெருக்கடிக்காலத்தில் இன்றைய நடுவண் அரசு பறிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.

இதை நமது மாநில உரிமை நாடும் சட்ட வல்லுநர்கள் கணக்கில் கொண்டு நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியுமா என்று பார்க்கலாம். ஏற்கனவே சரக்குசேவைவரி (ஜிஎஸ்டி) மூலம் வணிக வரி உரிமை பறிபோன நிலையில் தேசிய நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி உரிமை பறிபோன நிலையில் இப்போது இந்தச் சட்டங்கள் மாநிலங்களை மேலும் உரிமையற்றவையாக மாற்றுவதைக் காணமுடிகிறது.

அதுமட்டுமல்ல அதைவிடப் பேரச்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை. இதுவே மிகப் பெரிய மோசடி. அதாவது உழவர்களின் உண்மையான விளைவிப்பு மதிப்பைக் குறிப்பிடாமல், ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் பணவீக்கத்தைக் கணக்கிடாமல், இடுபொருட்களின் விலை ஏற்றத்தைக் கணக்கிடாமல் உழவர்களைக் கொள்ளையடிக்கும் இந்த குறைந்தபட்ச ஆதாரவிலையிலும் கைவைக்கும் போக்கு என்று உழவர் அமைப்புகள் கடமையாக எச்சரிக்கின்றன. ஆனால் அரசு அப்படி எல்லாம் நடக்காது. நாங்கள் ஆதார விலையை எடுக்க மாட்டோம் என்று வாயால் உறுதி கூறுகின்றன. சட்ட வரைவில் ஏதும் இல்லை.

உண்மையில் குறைந்தபட்ச ஆதார வேலையைவிடக் குறைவாக வாங்கும் வணிகர்களைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் வெங்காயம் விலை ஏறினால் அதைத் தடுக்கச் சட்டம் உண்டு. 

ஏனென்றால் அது நகர்ப்புற மக்களின் நலனைப் பாதுக்காக்கிறது. ஏழை உழவனைப் பாதுகாக்க என்ன சட்டம் உள்ளது?
உண்மையில் என்ன செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நியாயமாக அறுதியிட வேண்டும். அதை ஆண்டுக்கு ஆண்டு விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். குறைந்தால் குறைக்கட்டும், 

உழவர்கள் யாரும் அதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிறு குறு உழவர் குழுக்களை அதில் பயன்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் கம்பனி என்று ஆயிரம் உழவர்களைச் சேர்த்து குழு வைத்து போகாத ஊருக்கு வழிகாட்டும் கதையைத் தூக்கிப் போட்டு விட்டு, இருபது முதல் ஐம்பது பேர்களுக்குள் இருக்கும் குழுக்களை 
வலிமைப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து இயங்க வைக்க வேண்டும்.
விலையை உறுதி செய்யும்போது (அதாவது உண்மையாக அவர்கள் விளைவித்த செலவை ஈடுகட்டும் முறையான விலை) அது சிறு மண்டியாக இருந்தாலும், பெரும் நிறுவனமாக இருந்தாலும் அதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய வேண்டும், அடுத்ததாக தரம் என்ற பெயரில் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் போக்கு, முன்பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டி போட்டு வாங்குவது, அவர்களை 
மற்றவர்களிடம் விற்பனை செய்ய விடாமல் தடுப்பது, விலைப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, குறிப்பாக எடையில் 'அடிப்பது' அதாவது எடைபோடுவதில் ஏமாற்றுவது, போன்ற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் பொது விநியோக முறை என்ற நியாய விலைக்கடைகளை வலுப்படுத்த வேண்டும். அங்கங்கே விளையும் பொருள்களை மதிப்பேற்றி அங்கங்குள்ள நியாய விலைக் கடைகளுடன் இணைக்க வேண்டும். அதன் மூலம் தேவையற்ற பணச்செலவு குறைவும். இதனால் குறைந்த விலையில் நல்ல உணவு மக்களுக்குக் கிடைப்பதோடு உழவர்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும். 

இதைத்தான் குமரப்பா, காந்தி போன்ற மேதைகள் வலியுறுத்தினார்கள். உற்பத்தியையும், விநியோகத்தையும் பரவல்மயப்படுத்தி, மக்கள் மயப்படுத்துவதற்கு முயல வேண்டும். இந்த முறையில் ஒரு சில குறைகள்  இருப்பதால் அவற்றை களைய வேண்டுமேயன்றி, அவற்றை மூடிவிட்டு பெருநிறுவனங்களிடம் கைவிட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது.

நடைவண்டியில் நடைபழகும் குழந்தை தவறிக் கீழே விழுந்துவிட்டது என்பதற்காக நடை வண்டியையே தூக்கி வீசும் கதையாக இன்றைய ஆட்சியாளர்கள் வலுவான அரசுக் கட்டமைப்புகளைச் சிதைப்பது நல்லதல்ல.

அதைவிட அவசியமான பணி, வேளாண் துறையில் உள்ள ஊழியர்களின் பங்கு. அவர்கள் இன்று அரசு தரும் திட்டங்களை கொண்டு செல்லும் தரகர்போல ஆக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கும்பணிகளின் 

பொருள்களை விற்கும் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உழவர்களுக்கு வேளாண்மை அறிவைப் பகிரவும், அவர்களுடன் சேர்ந்து கண்டறியவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு போதிய 

அதிகாரமும், சுதந்திரமும் கொடுக்கப்பட வேண்டும். அந்தத் துறையை முடக்கிப்போட்டுவிட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு எப்படி வேளாண்மையை முன்னேற்ற முடியும்.
குறிப்பு: ஆக்கதாரர்களின் கருத்து நிலைகள் அவர்களுக்கே சொந்தமானவை.-ENB

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...