Saturday, 24 March 2018

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம்!



காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்.

WebDesk
Mar 24, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கையாகும். காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ல் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவு 2013-ல் மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீடை 14 டி.எம்.சி குறைத்தது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின் இதர அம்சங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை.

இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முடக்கி வருகிறார்கள். இதற்கிடையில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ம் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், நீர் வளத்துறை அமைச்சகம் ஒரு வரைவை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அதில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க கோரியுள்ளது. காவிரி நீரை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதை மேற்பார்வையிட ஒரு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதில் மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை எங்கும் இல்லை.

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கவும், இதற்கு 9 பேரை உறுப்பினர்களாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த குழுவில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும், மீதமுள்ள 4 பேர் 4 மாநிலங்களில் இருந்தும் பகுதி நேரமாக நியமிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.


செய்தி மூலம்:
 https://www.hindustantimes.com/india-news/central-body-may-oversee-cauvery-water-distribution/story-HIUJQoLZcVoDUcvpvyDgZL.html

No comments:

Post a Comment