காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
By DIN | Published on : 13th February 2018
காதலர் தினம் என்கிற பெயரில் பிப்ரவரி 14-ஆம் தேதி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலை அன்பின் அடையாளமாகவே படைத்துள்ளனர். உண்மைக் காதலை நாங்கள் போற்றுகிறோம். ஆனால், பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தி, குடும்ப அமைப்பு முறையைப் பாழ்படுத்தும் ஆபாசக் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறோம்.
கலப்புத் திருமணங்களை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் வரைமுறை மீறுவோர் மீது தகுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதலர் தினத்தைப் பயன்படுத்தி குறைந்த விலையில் உள்ள பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவோர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் ஆபாசக் காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு
Posted By: Jayachitra Updated: Sunday, February 14, 2016,
சென்னை: காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், திருப்பூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்புப் பரிசுகளை பரிமாறிக் கொண்டும், பிடித்த இடங்களுக்கு ஜோடியாகச் சென்றும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சார சீரழிவுக்கு வழியமைப்பதாக இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழிக்கும் போராட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பில் நடைபெற்றது. போராட்டத்துக்கு செய்தி தொடர்பாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, அவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்துப் போட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால், தடையை மீறி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சேவூகன் தலைமையில் தொண்டர்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக 2 நாய்களை கொண்டு வந்த அவர்கள் தாம்பூல தட்டில் பழங்கள் வைத்து சடங்குகள் செய்து தாலிகட்டி, மோதிரம் அணிவித்தனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் காதலர் தினத்தை, ‘கழிசடைகள் தினம்' என குறிப்பிட்டு இந்து முன்னணியினர் நோட்டீசும் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment