வித்தியா படுகொலைச் சம்பவம் வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றம் என்பதுடன், இதற்காக பலகோடி ரூபா பணம் கைமாறப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவர் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு 20 மில்லியன் ரூபா பேரம் பேசியிருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வித்தியா படுகொலை வழக்கு நேற்றையதினம் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் சாட்சியமளித்த பிரதி சட்டமா அதிபர் டபிள்யூ.டி.லிபேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடம் ஒருவருட புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், சட்டமா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில்
விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இக்குற்றம் தொடர்பில் வழங்கப்படும் தீர்ப்பு சகல மக்களுக்கும் செய்தியொன்றைச் சொல்லுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்தும் அவர் சாட்சியமளிக்கையில், கூட்டு கற்பழிப்பு, கொலை என நன்கு திட்டமிட்டு குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்குற்றங்கள் சர்வதேச அளவில் தயார்ப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், இதனால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஒன்பதாவது சந்தேகநபர் (சுவிஸ் குமார்) பலகோடி ரூபாய்களுக்கு சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
சிறுமியை கற்பழித்து அதனை நேரடி ஔிபரப்புச் செய்வதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இதற்காக பணப் பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நபர்கள் வீடியோ தொகுத்து விற்பனை செய்துள்ளனர்.
வீடியோ பதிவாகியிருந்த கையடக்கத் தொலைபேசியிலிருந்து அக்காட்சி அழிக்கப்பட்டுள்ள போதும் அதனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரான சுவிஸ் குமாரிடம் புலன் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. தன்னை விடுதலை செய்தால் 20 மில்லியன் ரூபாவைத் தருவதாக பேரம் பேசியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுக்குழல் அடைத்து மரணம் ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த அடிகாயமும் உள்ளது என்றார்.
இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேநபர்களே கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாட்சியங்களை மிக விரைவில் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசசட்டத்தரணி, வித்தியாவின் தாயிடம் 19 சான்றுப் பொருட்களை காண்பித்து விளக்கம் கேட்டு, உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் எதிரிகளின் சட்டத்தரணிகள் வித்தியா அணிந்த கண்ணாடியில் ஏற்பட்ட சேதத்தை அடிப்படையாகக் கொண்டு குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
வித்தியா வழக்குத் தொடர்பான விசாரணை 29, 30 மற்றும் 3, 4, மற்றும் 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment