குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கப்போகும் தமிழர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நாயாறுப் பகுதியில் பெரியளவிலான சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தப் பாகத்திலும் வசிப்பதற்கு இலங்கைக் குடிமகன் ஒருவனுக்கு உரிமை உண்டு. இதை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் ஓர் இனத்தவர் வாழுகின்ற பகுதியில் அவர்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகப் பிடித்துவைத்து வேறொரு இனத்தவரைக் குடியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காணி அதிகாரங்கள் கொழும்பு அரசிடமே உள்ளது என்பதற்காக எதையும் செய்துவிட முடியாது.
அண்டை நாடான இந்தியாவில் மாகாண அரசுகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காணி அதிகாரத்தின் மூலமாக சட்டவிரோதக் குடியேற்றங்க ளைத் தடுப்பதற்கு அங்குள்ள மாகாண அரசுகளால் முடிகின்றது. ஆனால் இலங்கையில் அது முடிவதில்லை. இதனால் சட்ட விரோதமாக இடம்பெறுகின்ற குடியேற்றத் திட்டங்களை மாகாண அரசுகளால் தடுக்க முடிவதில்லை.
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் இடம்பெறுகின்ற குடியேற்றத்திட்ட நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுக்காது விட்டால் காலப்போக்கில் இதுவொரு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே வெலிஓயா என்ற சிங்களப் பெயரிலான மிகப் பெரிய குடியேற்றத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும், கிழக்கையும் துண்டித்து விடு கின்றதொரு நடவடிக்கையாகவே முல்லைத்தீவிலிருந்து திருகோண மலைக்குச் செல்லும் முக்கிய பகுதியைத் துண்டாடி இந்தக் குடி யேற்றத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கிலிருந்து கிழக்கு மாகாணத்துக்குப் பாதுகாப்பான பிரயாணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் தமிழ் மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பல இடங்கள் இன்று கைநழுவிப் போன நிலையில் காணப்படுகின்றன. தென்னமரவாடி, பதவியா, கொக்கிளாய், மணலாறு ஆகிய இவற்றுள் சிலவாகும்.
இன்று நாயா றும் பறிபோகும் நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறு தமிழர்களின் பூர்வீகமான நிலங்கள் கண்ணெதிரே பறிபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவே எம்மால்
முடிகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் கூட எதுவுமே செய்ய முடி யாத நிலையில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நாட்டின் முதலாவது தலைமை அமைச்சரான டி.எஸ்.சேனநாயக்க கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரியதொரு சிங்களக் குடியேற்றத் திட்டத்தை ஏற்படுத்தினார். கிழக்கு மாகாணத்திலுள்ள வளமான பிரதேசங்களில் காலூன்றுவதும் தமிழர்களை அங்கு சிறுபான்மையினராக மாற்றுவதுமே இந்தக் குடியேற்றத் திட்டத்தின் நோக்கமாகும். இது எதிர்பார்த்தபடியே நிறைவேறி வருவதைக் காணமுடிகின் றது.
வடக்கைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பரம்பரையாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் காட்டு வளத்தையும், கடல் வளத்தையும் , செழிப்பான மண் வளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் கற்பாறைகளும் நிறையவே காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது ஆற்று மணலும் நிறையவே கிடைக்கின்றன. விடுதலைப்புலி கள் இருந்த வரையில் இயற்கை வளங்கள் யாவும் பேணிப் பாதுகாக்கப்பட்டன. ஆனால் போர் ஓய்ந்ததன் பின்னர் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. வெளியிடங்களைச் சேர்ந்தவர்களால் காட்டு வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. கற்பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கருங்கல் சல்லிகளாக விற்கப்படுகின்றன.
இங்கு முகாமிட்டிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் மணலை அகழ்ந்து வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் உள்ளூரில் வீட்டுத் திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்ட மக்கள் தமது தேவைக்குரிய மணலைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வெளியூர் (சிங்கள*)மீனவர்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கி நின்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எல்லா வகையிலும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இன விகிதாசாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடப்போகின்றது. நாடாளுமன்றம், மாகாணசபை, பிரதேச சபை ஆகியவற்றுக்குப் பிரதி நிதிகளைத் தெரிவு செய்யும் போது தமிழர் தரப்பின் விகிதாசாரம் குறைவடைய நேரிட்டுவிடும். இதைவிட வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதி ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
இலங்கையில் மொத்தமாக ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். ஏனைய ஏழு மாவட்டங்களிலும் பெரும்பான்மையின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வடக்குக் கிழக்கில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இஸ்ரேலும் பாலஸ்தீனத்தில் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றது. இதனால் பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலை இங்கும் ஏற்படப் போகின்றது என்பதுதான் யதார்த்தம்.
நன்றி: சேரலாதன் உதயன் * சேர்க்கை ENB
====================================================
பிற்குறிப்பு:
ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் தொடர்பான சில தகவல்களையும் அதன் விளைவுகளையும் சரியாகவே சுட்டிக்காட்டிய இச் செய்திக் குறிப்பாளர், தீர்வு என்று வருகின்ற போது அதிகாரப் பகிர்வு சகதிக்குள் வீழ்ந்து விடுகின்றார்.
குடியேற்றப் பிரச்சனை விவசாயப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனை,இதனை அதிகாரப் பரவல் மூலம் தீர்க்க முடியாது,சுய நிர்ணய உரிமை,பிரிவினை,பொது வாக்கெடுப்பு வழியில் தான் தீர்க்க முடியும்.சுபா
No comments:
Post a Comment