கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது
ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
(கே.குமணன்,கண்டாவளை நிருபர்)
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படை யினர், அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்,கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் வன்னி பிராந்திய விமானப்படை தளபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடி சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள், தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் இந்த போராட்டம் நிறைவுபெறும் என கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாலாவது நாளாகவும் நேற்றும் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவரும் இணைந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை போராட்டத்திலீடுபட்டு வந்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலையில் இருந்து வருகைதந்த நோயாளர் காவுவண்டியில் இவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணிக்கம் கணேசன் (வயது 50) என்பவர் ஆவார்.
மேலும் நேற்றுமுன்தினம் இரவு போராட்ட இடத்துக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அனந்தி சசிதரன் ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.
மேலும் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்குமாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
மக்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், பாய் போன்ற பொருட்களை வர்த்தகர்கள் நலன்விரும்பிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வழங்கி ஆதரவளித்து வருகின்றனர். அத்தோடு மக்கள் தாம் வீசும் குப்பைகளை தாமாகவே அகற்றி சூழலை சுத்தமாக வைத்திருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:நன்றி வீர கேசரி
No comments:
Post a Comment