Thursday, 2 February 2017

மெரினாப் போராட்டம் ஒரு நேரடி சாட்சியம்


“தோழர், சூளைப்பள்ளம் கட்சி ஆபீஸ் பின்னாடி இருக்குற ஒரு பையனை, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக்காங்களாம். அவங்க அப்பாவோட அங்கதான் இருக்கேன். வர முடியுமா?” பதற்றமும் கவலையுமாக போனில் கூப்பிட்டார் தோழர் தயாளன்…

அடுத்த ஒரு மணி நேரத்தில் மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த காட்சிகள் மனதைக் கலங்கடித்தன. ‘‘அய்யோ… எம் புள்ளவாழ்க்க பாழாயிடுச்சே’’ என காவல்நிலை யத்தில் புரண்டு அழும் தாய்.‘‘எம் பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணங்க… அவங்க அப்பா ஜெயிலுக்கு போனதுனால, நிக்கா நின்னு போயிருச்சே…’’ என மார்பில் அடித்து அழுதுகொண்டிருந்தது ஒரு இஸ்லாமியக் குடும்பம்.‘‘ஓடி வந்த பசங்களுக்கு தண்ணீர் கொடுத்தேண்ணா… அதுக்காக வீட்ல தூங்கிட்டிருந்த எங்க வீட்டுக்காரர அடி அடின்னு அடிச்சி இப்ப ஜெயிலுக்கு கூப்டு போறாங்களே… தண்ணி கொடுத்தது தப்பாண்ணா…’’ கண்ணீரோடு கேட்டார் ஒரு இளம் பெண்.

முதல் மாடியிலிருந்த ஒரு சிறிய அறை யில் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு கிடத்தி வைக்கப்பட்டனர். அவர்களோடு பேசுவதற்கு அங்கிந்தஇரு காவலர்களும் முதலில் அனுமதிக்க வில்லை. தகராறு செய்து பிறகு ஒரு வழியாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலரோடு பேசியபோது, அச்சம் கலையாத மனநிலையுடன் தங்கள் கையையும் காலையும் காண்பித்தனர். போலீஸ் லத்திகளின் அச்சுவலுவாக பதிக்கப்பட்டிருந்த தடம், நடந்ததைச் சொன்னது. பலருக்கு தோல் பிய்ந்து உரிந்திருந்தது. அங்கிருந்த காவலர்கள் எந்தக் கேள்விக்கும் விடை தராமல் மௌனிகளாக இருந்தனர்.

ஸ்டேஷனின் கீழே கூடியிருந்த பெண்கள், தங்கள் பிள்ளைகள் கைதானபோது நடந்த கொடூரத்தையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தியதையும் கதறி அழுதவாறு கண்ணீருடன் வெளிப்படுத்தினர். தோழர்கள், ஊடகங்கள், வழக்கறிஞர் களுக்கும் தகவல்கள் கடத்தப்பட்டன. ‘‘ஊரடங்கியிருந்த அதிகாலை வேளையில் 26 பேரை நையப் புடைத்து சிறைக்கு அனுப்பி யது போலவே, இவர்களையும் அனுப்ப முடி யாது. விஷயம் கசிந்து பெரிதாகப் போகிறது’’ என்பதை உணர்ந்தவுடன் உயரதிகாரிகள் பெரிய வாகனங்களில் வந்திறங்கினர். எப்போதும் அப்பாவிகள் எப்படி பயங்கரமான குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு காவல் வாகனத்தில் ஏற்றப்படுவார்களோ அப்படியே அப்போதும் தொடர்ந்தது…

பேசாப் பொருளைப் பேசத் தொடங்கிய கதை:

ஒரு வாரத்துக்கு முன்னால் மெரினா கடற்கரையோரம் தங்கள் கைக்கு அடக்கமான ஆட்களால், தங்களது நோக்கங்களை மட்டுமே மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’, ஓரிரு நாட்களிலேயே பீறிட்டு பல ரூபங்களில் உருவெடுக்கஆரம்பித்தது. மத்திய அரசருக்கு இணக்கமான தலைமையும், அதற்கேற்றாற் போல் ஊடகங்களின் வெளிச்சமும் இருந்ததால் ‘‘காவல் துறை மக்களின் நண்பன்’’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது.

மனிதர்கள் வெறும் இயந்திரங்கள் அல்லவே. எஜமான் இடும் உத்தரவை மட்டும் நிறைவேற்றிவிட்டுக் கலைந்து செல்ல…ரத்தமும் சதையுமாய் உணர்வும் உணர்ச்சிகளும் கலந்து, காலம் காலமாய் மனிதகுலத்தின் அனுபவங்களை கிரகித்து வினையாற்றும் உயிரினம் தானே மனிதன்… தேச விடுதலைக்காக, சமூகநீதிப் போராட்டத் துக்காக, சாதிய ஒழிப்புக்காக, மொழி – பண் பாட்டு விழுமியங்களின் உரிமைக்காக, பாலின சமத்துவத்துக்கான அரசியலை முன்வைத்து, அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து… இப்படியாய் காலந்தோறும் கேட்டுக் கேட்டு செரித்த கடற்கரை மணல் வெளி, இப்போது அதன் வேலையை சிறப்பாகச் செய்யத் தொடங்கியது…

ஆயிரக்கணக்கில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரள ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் தங்களை பாதித்த நிகழ்வுகளை தங்களது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுப் புரிதலுக்கு ஏற்ப பேசத் தொடங்கினர். பேச்சு உரையாடலாக மாறியது. விவசாயிகள் மரணம், விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி, சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களால் சூறையாடப்படும் இயற்கை வளங்கள், அன்பொழுகக் காதல் செய்து திருமணத்தில் முடியும் வேளையில் சாதியின் பெயரால் உயிரைப் பறிக்கும் ஆணவக் கொலைகள், இதற்கு யார் காரணம்? சாதியை ஒழிக்க முடியாதா? மதத்தின் பெயரால் அரசியல் நடத்துவது சரியா?… இப்படிப் கேள்விகள் எழுப்பப்பட்டு விடைகள் தேடப்பட்டன.

இளந்தலைமுறையின் உள்ளத்தில் வீரிய கருத்துக்கள் இயல்பாகப் பதியத்தானே செய்யும். விளைவாக, விடையைக் கண்டனர். தமிழக வாழ்வாதார உரிமையை நாசமாக்கி, பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர். இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லாத தமிழக அரசும் முதல்வரும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் என்ற வகையில் சசிகலாவும் கடுமையான நையாண்டிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகினர். இந்தப் பின்னணியில் சாதிய, பாலின வேறுபாடுகளைக் களைந்து போராட்டக் காரர்கள் அனைவரும் தங்களை யாருடன் அடையாளப்படுத்திக் கொண்டார்கள்? அங்குதான் ‘தமிழர்’ என்ற அடையாளம் வெடித்துக்கிளம்பியது.

அரசு என்றால் என்ன?

இப்படிப் போனால் பேசாமல் விட்டு விடுமா அரசு…? திரைமறைவுக் கூட்டங்கள் அரங்கேறின… ஒற்றர்கள் தூதுவர்களாக மாறுவேடம் தரித்தனர்… ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்தவர்கள், அரசின் வெளிச்சம்பட்டதும் உருகி ஓடினர்… கோடி ரூபாய் கொடுத்துபோராட்டத்தின் நடுநாயகமாக வீற்றிருந்தவர், அரசின் பேயாட்டம் தொடங்கப் போகிறது என்பதை உணர்ந்தவுடன் அதிகார வர்க்கத்தின் இடுப்புக்கு விருட்டெனத் தாவிவிட்டார்.

உயிரையும் உணர்வையும் கொட்டி போராட்டத்தில் குதித்தவர்களோ திணற ஆரம்பித்தார்கள், வேதனையில் கண்ணீர் விட்டனர். தாங்கள் செய்ததும் செய்யத் தவறியதும் என்ன? பகைவர்கள் யார்? தோழர் கள் யார் என நெருக்கடி தொடங்கிய கண நேரத்தில் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்து விட்டது.

இப்படியான போராட்டங்கள் வாயிலாகத்தான் வெகுமக்கள் அரசியல் உணர்வு பெறுகின்றனர் என்பதை அதிகார வர்க்கம் உணர்ந்து வைத்துள்ளது. போராட்டத்தினூடே இளந் தலைமுறையினரும் பொது மக்களும் பெற்ற போர்க்குணம் மிக்க விழுமியங்களைச் சிதைக்க, அரசு இயந்திரம் தன் வழக்கமான ஆயுதங்களைக் கையில் எடுத்தது.

(ENB குறிப்பு: தன்னியல்பான போராடங்கள் வாயிலாக வெகுமக்கள் அரசியல் உணர்வு பெறுவதில்லை)

மக்கள் மீது கொடுந் தாக்குதலை நிகழ்த்து வதற்கான முன்னறிவிப்பாக ‘‘திட்டமிட்ட வன்முறை’’, ‘‘தேச விரோத சக்திகள் புகுந்து விட்டன’’ என்பது போன்ற சொல்லாடல்கள் வலிந்து உருவாக்கப்பட்டன. கடற்கரையோர மக்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. லத்தி மட்டுமல்ல… இரும்பு பைப்புகள், கற்களையும் கொண்டு போலீஸ் தாக்கியது. கண்ணீர் புகைக் குண்டு வீச்சு… கடைகளுக்கும் வாகனங்களுக்கும் போலீஸே தீ வைப்பு என வெறிபிடித்த மிருகமாய் காவல்துறை சூறையாடலில் இறங்கியது.

சிதைக்கப்பட்ட உரிமைகளும் சீரழிக்கப்பட்ட மக்களும்:

கடல்… கடற்கரை … அகன்ற சாலைகள்… அரசு, கல்லூரி கட்டிடங்கள்… பறக்கும் ரயில்… இவற்றையெல்லாம் வாய் பிளந்துபார்த்திருப்போம்… ஆனால், இவற்றை யெல்லாம் அடுத்து ஒரு கால்வாய் ஓடுகிறது… அதையொட்டி இரு புறங்களும் ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்கின்றனர். நான்கடி சந்துதான் அவர்களின் பிரதான சாலை. 400 சதுரஅடிக்கு வீடிருந்தாலே, அந்தத் தெருவின் அம்பானிகள் அவர்கள்.போராடிய மாணவர்களுக்கு சோறு பொங்கிப் போட்டதற்காக இம்மக்களின் குடியிருப்புகளுக்குள் போலீஸ் படையெடுத் துப் போனது. ஆண் காவலர்கள் தங்களின் பேண்ட் ஜிப்பை கழற்றி ஆணுறுப்பை காண்பித்து, மொழியே கூச்சப்படும் அத்தனை வார்த்தையையும் கொட்டித் தீர்த்துள்ளனர்.

‘‘அந்தப் போலீஸ்கார பையன்கல்லாம் என் புள்ளயவிட சின்ன வயசுப் பசங்க. பொங்கிக்கொண்டிருந்த சோத்து குண்டான எட்டி ஒதச்சாணுங்கப்பா… முட்டையா அவிச்சுகொடுத்த… என கத்திக்கொண்டே 75 முட்டை யை என் தல மேல போட்டு அடிச்சானுங்க…’’ ‘‘சாவு போஸ்டர் ஒட்டிக் கொண்டி ருக்கும்போது, எங்க அண்ணன போலீஸ் சூழ்ந்துகிட்டு அடிஅடின்னு அடிச்சானுங் கண்ணா… தடுக்கப் போன என்னையும் அடிச்சானுங்கண்ணா… உங்கள அண்ணனா நெனச்சு காண்பிக்கிறேன்…’ என்று சொல்லிக் கொண்டே தனது இடது காலைக் காட்டினார்… வெறிநாய்கள் கவ்வினால்கூட அப்படி இருக் காது… அந்தச் சகோதரியின் கால் முழுவதும் காயங்களால் கன்னிப் போயிருந்தன.

‘‘வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த என் ரெண்டு பிள்ளய இழுத்துப் போட்டு அடிச்சானுங்க. ஒருத்தன் மண்டை ஒடஞ்சு ரத்தம் வந்துச்சி. ஏண்டா என் புள்ளய அடிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, என் மண்டையையும் ஒடச்சுட்டானுங்கப்பா…’’ என்றபடியே தையல் போட்ட இடத்தை காட்டினார் ஒரு தாய். இவர்களில் பலருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தையல் போட்டு, எக்ஸ்ரே எடுத்துள்ளனர். ஆனால், சிகிச்சை எடுத்ததற்கான எந்த அத்தாட்சி ரசீதும் கொடுக்கவில்லை. சிகிச்சை அளித்த நாளில் அரசு ஆதாரம் எதையும் தந்துவிடக் கூடாதே…! இப்படி ரத்தம் கொதிக்க வைக்கும் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள். நம் நாட்டில் எப்போதும் வன்முறைக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அன்றாடங் காய்ச்சி மக்கள்தான் இவர்கள். இது மட்டுமா… போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அரசு முடிவெடுத்த ஜனவரி 23ஆம் தேதி தலைமைச் செயலகம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை மேற்கே ஜெமினி பாலம்வரை கண்ணுக்குப்பட்டவர் களையெல்லாம் லத்தியால் அடித்து, கேள்வி கேட்டவர்களையெல்லாம் கைது செய்தது போலீஸ். கைதானவர்களை குண்டுக் கட்டாய் தூக்கிக்கொண்டு பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அள்ளிச் சென்றுள்ளனர். அங்கு கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளனர். கடற்கரை அருகே இருந்த காவல் நிலை யங்களில் எல்லாம் போலீஸ் தாக்குதலை தாங்க முடியாமல் கதறும் குரல்கள் காற்று வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்தன. அன்றைய தினம் சென்னை மாநகரம் மீண்டும் ஒரு முறை நெருக்கடி நிலையை உணர்ந்தது.

சிகிச்சைக்கும் சிறுநீர் கழிப்பதற்கும் ஒரு போராட்டம்:

இப்படியாய்… ஒரு குரல் வழியாகதான் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு ஜனவரி24ஆம் தேதி சென்றிருந்தேன். நடந்த சம்பவங்களுக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாமல் அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த 29 பேரை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. வழக்கறிஞர்கள் பிரதாபன், திருமூர்த்தி உள்ளிட்டோர் காவல் துறையின் தாக்குதலை எடுத்துரைத்தனர். நீதிபதி கோபிநாத் காவல் துறையைக் கண்டித்ததோடு, அவர்களை சிறைக்கு அனுப்பாமல் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப போலீசுக்கு உத்தரவிட்டார். இரண்டு வாகனங்களில் 29 பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த போலீஸ், அங்கு சிகிச்சை கொடுக்காமல் காலம் கடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உ.வாசுகி தலை மையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களைச் சிறையில் அடைப்பதற்கு வசதியாக (Fit for remand) எழுதிக் கொடுங்கள் என்று அங்கிருந்த மருத்துவரிடம் ஒரு காவலர் வற்புறுத்தினார். ‘‘நீங்கள்உங்கள் கடமையை செய்யுங்கள்.
போலீஸ் சொல்வதை கேட்டால், சட்டத்தின் முன் விபரீத விளைவுகளை சந்திப்பீர்கள்’’ என மருத்து வரை நோக்கி வாசுகி எச்சரித்தார். போலீஸ் காரரைப் பார்த்து கோபத்துடன், ‘‘இதுதான் உங்கள் காவல்துறையின் லட்சணமா?’’ எனக் கேட்டார். அதன் பின்னரே சிகிச்சைகள் தொடங்கின. அப்போதும் வாகனத்திற்குள் நுழைந்து ‘‘அடியெதுவும் இல்லை… வலிக்கவில்லை’’ என மருத்துவரிடம் சொல்லச் சொல்லி பிடிபட்டிருந்தவர்களிடம் போலீஸ்காரர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். சிறுநீர் கழிக்கக்கூட வாகனத்திலிருந்து இறக்கிவிடவில்லை. அதற்கும்கூட வழக்கறிஞரை வைத்து நிர்ப்பந்தப்படுத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உரிமையைப் பெற வேண்டியதாயிருந்தது. பரிசோதனைக்குப் பிறகு 29 பேரில் 3 பேருக்கு கை, கால் முறிவு, 9 பேருக்கு கொடுங்காயம், மற்ற அனைவரின் உடம்புகளும் காயங்களால் நிறைந்திருந்தன என மருத்துவர்கள் எழுதிக் கொடுத்தனர். இதில் ஒருவரை உள்நோயாளியாகச் சேர்த்து, நள்ளிரவில் நீதிபதியிடம் அனுமதி பெற்று மற்ற அனை வரையும் சிறையில் அடைத்தது காவல்துறை.

‘கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சமூக விரோதிகள்’, ‘கைதுப் படலம் தொடரும்’ என எழுதி வைத்திருந்ததை ஊடகங்கள் முன்னால் வாசித்துவிட்டு இறுகிய முகத்தோடு வெடுக்கென சென்றார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். யார் யார் எங்கு கைது செய்யப்பட்டார்கள்? அவர்களின் பெயர்கள் என்ன? வழக்கு விபரம் என்ன? எந்தத் தகவலையும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்காமல் கைது செய்யப்பட்ட தகவலை ரத்த உறவினர்களுக்குக்கூட சொல்லாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலை காலில் மிதித்து நசுக்கியிருக்கிறது சென்னை மாநகர காவல் துறை.

குறிப்பு: 01-02-2017 தீக்கதிர் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் இருந்து சாட்சியமாய் அமைந்த பகுதிகள் இங்கே மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. நன்றி தீக்கதிர், ஜி.செல்வா

No comments:

Post a Comment