SHARE

Tuesday, January 03, 2017

சிங்கக் கொடி சம்பந்தர் தீக்கிரையாகினார்!

 
எரிக்கப்பட்டது சம்பந்தன் உருவப்படம்...!
30-12-2016 - வவுனியா

லங்கை அரசியல் வரலாற்றில் இன்று முக்கியமான நாளாக பதியப்பட்டுள்ளது. ஏனெனில் இது வரை காலமும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தென்னிலங்கையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துது.எனினும், இன்றைய தினம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிராக தமிழ் மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர் என்றே கூறவேண்டும். அப்படியான சம்பவம் ஒன்றே இன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் உருவப்படத்தினை வீதியில் இழுத்து சென்ற நிலையில் தீயிட்டு எரித்துள்ளனர்.

இதன் போது வெளிப்பட்ட நெருப்பு தணலை சாதாரணமானதாக பார்க்க முடியாது. அது தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு, ஏக்கம், தமிழ் தலைமைகள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பு என்ற அடிப்படையிலேயே பார்க்க வேண்டியுள்ளது.

தமது தலைமைகள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படாத நிலையிலேயே இன்றைய தினம் தமது எதிர்ப்பை தமிழ் மக்கள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.

30-12-2016 அன்று சம்பந்தனின் கொடும்பாவி

இந்நிலையில், இன்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்காலத்தில் ஒரு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஏனெனில், இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த நிலையில், அண்மைய காலமாக அந்த செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வட பகுதிக்கும் சென்றிருந்தார். இதன் போது ஐ.நா செயலாளர் தம்மை சந்திப்பார் என மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.எனினும், அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அன்றை தினமும் , கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் எதிர்ப்பபை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்றும் பகிரங்கமாக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் இன்றும் பாரிய அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரிந்துகொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

அத்துடன், தமது பூர்வீக இடங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் இன்றும் வடக்கில் முகாம்களில் வாழும் துர்ப்பாக்கிய நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கிறனர்.

மேலும், அரசியல் கைதிகள் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, கல்வியில் வீழ்ச்சி, கலாச்சார சீரழிவு, திட்டமிட்ட அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இவற்றுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை தமிழ் மக்கள் கோரியுள்ளனர்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கும், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தமிழ் தலைமைகள் வாக்குறுதி வழங்கிய நிலையில், அதனை நம்பி தமிழ் மக்களும் வாக்களித்தனர்.
எனினும், இந்த பிரச்சினைகள் எவற்றுக்கும் இது வரையிலும், தீர்வு கிடைத்தபாடில்லை. இது ஒருபுறம் இருக்க இலங்கையில், தற்போது புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான நடவடிக்கைகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இது நாள் வரையிலும், இலங்கையில் நீடித்துள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்பில் தமிழ் மக்கள் இருக்கின்ற நிலையில், அந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போகக்கூடிய நிலையிலேயே இலங்கையில் அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் சமீப காலமாக வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றளவில் மெளனம் காத்து வரும் நிலையிலேயே இன்றைய தினம் இரா.சம்பந்தனுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. உருவப்படம் எரிக்கப்பட்டுள்ளது.

கொடும்பாவி சம்பந்தன் தீக்கிரை 30-12-2016
இன்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பின் காரணமாக, வெளிப்படையாக செயற்பட வேண்டியதும், மக்களை தெளிவுபடுத்த வேண்டியதுமான கட்டாய நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பெரும் எதிர்ப்பார்பில் இருக்கும் தமிழ் மக்களை திருப்தி படுத்த வேண்டிய கட்டாயமும் கூட்டமைப்புக்கு இருக்கின்றது.

எனவே, இனியும் மௌனம் காப்பது என்பது கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை கேள்விக்குறியாக்கும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: செய்தியறிக்கை ஊடகம்

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...