SHARE

Tuesday, August 09, 2016

விச ஊசிக் கொலை, தகவல் சேகரிக்கும் மாகாண சபை!

விச ஊசிக் கொலை, தகவல் சேகரிக்கும் மாகாண சபை!


தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தகவல்களை சேகரிக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வடமாகாண சபையின் 58ஆம் அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மாகாணசபையின் 58ஆம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கையினை முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம், முன்னாள் போராளிகள் சிலர், தங்கள் மீது திட்டமிட்டு நச்சு ஊசிகள் போடப்பட்டமை தொடர்பாகவும், உணவில் இரசாயன பதார்த்தங்கள் கலந்து வழங்கப்பட்டமை தொடர்பாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்கள் உண்மை என கண்டறியப்பட்டால் இலங்கை அரசின் முகத்திரை சர்வதேசத்தின் முன்னாலும், உலகளாவிய தமிழ் சமூகத்தின் முன்னாலும் கிழிக்கப்படும். மேற்படி செயலணி முன்பாக சாட்சியமளித்த அனைவரது கருத்துக்களும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே காட்டுகின்றது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. முன்னாள் போராளிகளுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு திட்டம் தொடர்பாக அம்பலப்படுத்த உங்களின் உதவி நாடப்படுகிறது.

புனர்வாழ்வின் பின் நோய் வாய்ப்பாட்டு இறந்த மற்றும் நோய்வாய்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் தகவல்களை திரட்டுவதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் உதவவேண்டும். எனவும் சீ.வி.விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, சபையில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் முன்னாள் போராளிகளின் இந்த விடயம் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக சகல முன்னாள் போராளிகளுக்கும் உடற்கூற்று பரிசோதனை ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

இதற்காக நிபுணர்களுடன் பேசி இணக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் போராளிகளின் சிகிச்சை தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றோம். மேலும் இந்த ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இந்த நாட்டில் வசதிகள் இருக்கும் என தாம் நம்பவில்லை.

இதற்காக சர்வதேச மருத்துவர்கள் மற்றும் விசாரணையாளர்கள் குழு அவசியம் எனவும் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...